தாராகாசுரன் ஆறுமுகக் கடவுளைத் தரிசிக்கும் போர்க்களக் காட்சி (கந்தபுராண நுட்பங்கள்):

ஆறுமுகக் கடவுள் சூரசம்ஹாரத்தின் பொருட்டுத் திருக்கயிலையிலிருந்து புறப்பட்டு, வீரவாகு உள்ளிட்ட நவவீர்கள்; திருமால்; பிரமன்; இந்திரன் மற்றும் எண்ணிலடங்கா பூதப் படையினரும் உடன்வர நிலவுலகினை வந்தடைகின்றார். முதலில் சூரபத்மனின் (யானை முக) சகோதரனான தாரகாசுரன் கோலோச்சி வரும்  கிரவுஞ்ச மலைக்குச் செல்கின்றார். 

பூதப் படையினருக்கும் அசுரப் படையினர்க்கும் பெரும் யுத்தம் மூள்கின்றது, தாரகாசுரன் வேலாயுதக் கடவுளின் படையினருக்குப் பெரும் சேதத்தினை உருவாக்குகின்றான். வீரவாகு உள்ளிட்ட நவவீரர்களையும் மாயையால் மயங்கச் செய்து இடியென முழங்குகின்றான். பூதப் படையினர் பெரிதும் கலங்கி வருந்த, சிவகுமாரன் 'அஞ்சேல்' என்று அபயமளித்துத் தாரகாசுரனுடன் போரிட நேரில் எழுந்தருளிச் செல்கின்றார். 

ஆர்ப்பரித்தவாறு (யானை முக) தாரகாசுரன் கந்தக் கடவுளின் திருமுன்பு வருகின்றான், எதிரே பூரண சந்திரனைப் போன்ற குளிர்ந்த ஆறு திருமுகங்களையும், பேரருள் பொழியும் பன்னிரு திருக்கண்களையும், பன்னிரு திருக்கரங்கள் மற்றும் அவைகளில் வேல் உள்ளிட்ட ஆயுதங்களையும், தண்டைகள் பொருந்திய மலர் போலும் திருவடிகளையும் திருத்தமுறத் தரிசிக்கின்றான். காண்பதற்கரிய இத்திருக்காட்சியைத் தரிசிக்கப் பெற்ற தாரகாசுரனின் தவச்சிறப்பினை விளக்கவும் ஒண்ணுமோ என்று வியந்து போற்றுகின்றார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார், 
-
(உற்பத்தி காண்டம்: தாரகன் வதைப்படலம் - திருப்பாடல் 126):
முழுமதியன்ன ஆறு முகங்களும் முந்நான்காகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரம்ஈராறும் அணிமணித் தண்டையார்க்கும் 
செழுமலர் அடியும் கண்டான் அவன்தவம் செப்பல் பாற்றோ!!

ஆணவமுடைய தாரகாசுரன் முருகக் கடவுளின் திவ்யத் திருக்கோல தரிசனத்தினால் அற்புதம் அடைகின்றான், பெருவியப்புடன் 'நம்முடன் இன்று போர் புரிய வருகை புரிந்திருப்பது எவ்விதக் கற்பனைகளுக்கும் எட்டாத மூல முதற்பொருளே' என்று உறுதிபட எண்ணுகின்றான்,    
-
(உற்பத்தி காண்டம்: தாரகன் வதைப்படலம் - திருப்பாடல் 127):
தற்பமதுடைய சிந்தைத் தாரகன் இனைய வாற்றால்
சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு அனைத்தும் நோக்கி
அற்புதமெய்தி நம்மேல் அமர்செய வந்தானென்றால்
கற்பனை கடந்த ஆதிக் கடவுளே இவன் கொல்என்றான்
-
(சொற்பொருள்: தற்பம் - ஆணவம், சிற்பர மூர்த்தி - பரம்பொருள்)

ஆதிப்பரம்பொருளான சிவபெருமானின் குமார வடிவமே ஆறுமுகக் கடவுள் எனும் சத்தியத்தினைப் பறைசாற்றும் மற்றுமொரு அற்புதப் பகுதியிது (சிவ சிவ).

ஆறுமுகக் கடவுள் மேற்கொண்ட சிவாலய தரிசன யாத்திரை (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமான் சூர சம்ஹாரத்தின் பொருட்டு, திருமால்; பிரமன்; இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் எண்ணிறந்த பூதப் படையினருடன் திருக்கயிலையிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றான். முதலில் கிரௌஞ்ச மலையிலுள்ள தாரகாசுரனை வதம் புரிந்து பின்னர் வழிதோறுமுள்ள சிவாலயங்களைத் தரிசித்தவாறே வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்துச் செல்கின்றான். 

கந்தப் பெருமான் தரிசித்துப் பரவிய இச்சிவாலயங்களை நம் கச்சியப்ப சிவாச்சாரியார் 'உற்பத்தி காண்டத்திலுள்ள வழிநடைப் படலம்; குமாரபுரிப் படலம்' ஆகியவற்றில் விரிவாகப் பதிவு செய்து போற்றுகின்றார். இனி அத்தலங்களை அம்முறையிலேயே வரிசைக் கிரமமாக அறிந்து மகிழ்வோம்,

1. திருக்கேதாரம் 
2. காசி 
3. ஸ்ரீசைலம் 
4. திருக்காளத்தி எனும் ஸ்ரீகாளஹஸ்தி 
5. காஞ்சிபுர ஷேத்திரம் - ஏகாம்பரநாதர் திருக்கோயில் 
6. காஞ்சியிலுள்ள இன்ன பிற சிவாலயங்கள் (ஆலயப் பெயர்கள் குறிக்கப் பெறவில்லை)
7. திருவண்ணாமலை 
8. திருவெண்ணெய் நல்லூர் 
9. திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் 
10. திருத்தில்லை 
11. திருவிடைமருதூர் 
12. மயிலாடுதுறை 
13. திருப்பறியலூர் உள்ளிட்ட இன்ன பிற சிவாலயங்கள் (ஆலயப் பெயர்கள் குறிக்கப் பெறவில்லை)
14. ஸ்ரீவாஞ்சியம் 
15. திருவாரூர் 

இறுதியாய்த் திருவாரூரிலிருந்து புறப்பட்டுத் திருச்செந்தூர் தலத்தினை வந்தடைகின்றான். அங்கு சில தினங்கள் எழுந்தருளியிருந்து, நவவீரர்களுள் பிரதான வீரரான வீரவாகுவை இலங்கையிலுள்ள சூரனின் தீவான வீரமகேந்திரபுரத்திற்குத் தூதாகச் செல்லுமாறு கட்டளையிட்டு அருள் புரிகின்றான் .


திருச்சேய்ஞலூர் தலம் உருவான வரலாறு (கந்தபுராண நுட்பங்கள்):

தஞ்சாவூர் மாவட்டத்தில்,  காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது 'திருச்சேய்ஞலூர்' எனும் புண்ணியத் தலம் (தற்கால வழக்கில் சேங்கனூர்). ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது,  சண்டீஸ்வர நாயனார் பேரருள் பெற்றுள்ள திருத்தலமாகவும் திகழ்வது. சிவமூர்த்தி இத்தலத்தில் சத்யகிரீஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இனி இத்தலம் உருவான வரலாற்றினை, நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்து மகிழ்வோம். 

முருகப் பெருமான் சூரசம்ஹாரத்தின் பொருட்டு, திருமால்; நான்முகக் கடவுள்; இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் உடன்வரத் திருக்கயிலையிலிருந்து புறப்பட்டு, முதலில் தாரகாசுரனை வதம் புரிகின்றான். பின்னர் வழிதோறுமுள்ள சிவ ஷேத்திரங்களைத் தரிசித்தவாறு, தஞ்சைப் பகுதியிலுள்ள மண்ணியாற்றங்கரையை வந்தடைகின்றான். 'அந்த இரவுப் பொழுதில் அப்பகுதியிலேயே தங்கிச் செல்லலாம்' என்றனைவரும் விண்ணப்பிக்க, கந்தவேளும் அதனை ஏற்றருளி தேவதச்சனிடம், 'கலைத்தொழிலில் வல்ல மயனே, சிறிது கால அளவிற்குள் இவ்விடத்தில் நமக்கொரு நகரமொன்றினை உருவாக்குவாயாக' என்றருளிச் செய்கின்றான்,
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 10)
மெய் விதித்தொழிலில் வேதன் நிகர்க்கும் 
கைவலோய் ஒரு கணம்படு முன்னர்
இவ்விடத்தினில் எமக்கொரு மூதூர்
செவ்விதில் புனைவு செய்குதி என்றான்

மயனும் விரைந்து அவ்விடத்தில் அற்புதமான நகரமொன்றினை உருவாக்கி அதனை வேலாயுதக் கடவுளுக்கு அறிவித்துப் பணிகின்றான். கந்தவேள் அவனுக்குக் கருணை புரிந்து, 'நாம் எழுந்தருளுதற்கு நல்லதொரு இடமிது' என்றருளிச் செய்கின்றான். 

உடன் அங்கிருந்த தேவர்கள் யாவரும், பேரழகு பொருந்திய அந்நகரத்தை (முருகக் கடவுளுக்கு உகந்த தலமானதால்) 'திருச்சேய்ஞலூர்' என்று பெயரிட்டுப் போற்றுகின்றனர், 
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 15)
வீர வேளிது விளம்புதலோடும்
ஆரும் வானவர்கள் அம்மொழி கேளா
ஏரெலாமுடைய இந்நகர் சேய்ஞ
லூர் அதென்று பெயர் ஓதினர் அன்றே

பின்னர் பொழுது புலர்ந்ததும், செவ்வேளான கார்த்திகேயக் கடவுள் கரிய திருமேனியனான இந்திரனிடம், 'வேதங்களாலும் அறியவொண்ணா சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்குதற்குரிய பூசைப் பொருட்களை இவ்விடத்தே கொணர்வாயாக' என்றருளிச் செய்கின்றான், 
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 65)
கரியவன் தனைச் செய்யவன் கருணை செய்தருளி
வருதி என்றுகூய் மறைகளும் வரம்பு காண்கில்லா
அரன் தாள்களை அருச்சனை புரிதுநாம் அதனுக்(கு)
உரியவாய பல் கரணமும் தருதி என்றுரைத்தான்

இந்திரன் விரைந்து பூஜைப் பொருட்களை சேகரித்து வர, கந்தவேள் மயன் மூலமாய்ப் புதியதொரு சிவலிங்கத் திருமேனியினைச் செய்விக்கின்றான். பின்னர் இறைவரை மாணிக்க ஆசனத்தில் எழுந்தருளச் செய்து, பஞ்சகவ்யம் முதலியவற்றால் அபிஷேகம் புரிந்து, சிறந்த அணிகலங்களையும் வஸ்திரங்களையும் அணிவித்து, மலர் மாலைகளால் அலங்கரித்து, எண்ணிறந்த சிறந்த உணவு வகைகள்; மணமிகுந்த பொருட்கள்; வெற்றிலை; பாக்கு இவைகளை நிவேதித்து, மும்முறை வணங்கிப் பணிகின்றான்.

குமாரக் கடவுளின் இவ்வற்புத சிவபூஜையால் திருவுள்ளம் மகிழும் ஆதிப்பரம்பொருள் உமையம்மையுடன் இடப வாகனத்தில் விண்மிசை எழுந்தருளித் தோன்றுகின்றார்.
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 71)
இருவரும் உணர்கிலாதிருந்த தாள்களைச்
சரவண மிசைவரு தனயன் பூசனை
புரிதலும் உமையொரு புடையில் சேர்தர
அருள்விடை மீமிசை அண்ணல் தோன்றினான்

கார்த்திகைப் பெண்களால் போற்றப் பெறும் நம் முருகக் கடவுள், நீலகண்டப் பெருமான் எழுந்தருளி இருப்பதனைக் கண்ணுற்று அகமெலாம் குழைந்துருகிப் பணிவுடன், உச்சி கூப்பிய கையினனாய் உமையொரு பாகனாரைப் போற்றுகின்றான்,
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 72)
கார்த்திகை காதலன் கறைமிடற்றுடை
மூர்த்தி நல்லருள்செய முன்னி வந்தது
பார்த்தனன் எழுந்தனன் பணிந்து சென்னிமேல் 
சேர்த்திய கரத்தொடு சென்று போற்றினான்

முருகப் பெருமானின் பரத்துவத்தைப் பறைசாற்றும் வீரவாகு தூது (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமானின் நவவீரர்களுள் ஒருவரான வீரவாகு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு, விண்வழி இலங்கையைக் கடந்து, சூரபத்மனின் தீவான வீரமகேந்திரபுரத்தினை அடைகின்றான். சூரனின் சபையுள் புகுந்து, கந்தக் கடவுளின் திருவருளால் உயர்ந்ததோர் ஆசனமொன்றினை அமைத்து, அதன்மீது அமர்ந்தவாறு தூதுச் செய்தியைத் தெரிவிக்கின்றான். 

சூரன் தேவர்களை விடுவிக்கச் சம்மதிக்காததோடு, வேலாயுத தெய்வத்தைச் சிறுவனென்று இகழ்ந்துரைக்கின்றான். அச்சமயத்தில் வீரவாகு, சிவகுமரனின் பரத்துவத்தையும், பல்வேறு சிறப்புகளையும் எடுத்துரைப்பதை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்துத் தெளிவுறுவோம், 

(1)
முன்னவர் யாவர்க்கும் முதன்மையானவரும், தமக்கு மேலொரு முதன்மை இல்லாதவரும், அண்டசராசரங்களிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இன்னுயிராகவும், அருவம்; உருவம்; அருவுருவம் எனும் மூன்று நிலைகளில் விளங்கியருளும் சிவபரம்பொருளே முருகப் பெருமானாவார், 
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 128)
முன்னவர்க்கு முன்னாகுவோர் தமக்கு முற்பட்டுத்
தன்னை நேரிலா(து) ஈசனாம் தனிப்பெயர் தாங்கி
இன்னுயிர்க்குயிராய் அருவுருவமாய் எவர்க்கும்
அன்னை தாதையாய் இருந்திடும் பரமனே அவன்காண்

(2)
சிவபெருமானே தம்முடைய திருவிளையாடலினால் தமக்குத் தாமேயொரு குழந்தையாய்த் தோன்றியுள்ளார். குற்றமற்ற ஆறு திருமுகங்களையுடைய கந்தவேளின் தன்மையினால் இதனை நீ அறிவாய். ஒளி பொருந்திய மணியிடமிருந்து ஒளி பரவும் தன்மை போல், சிவபெருமானிடத்திருந்து அறுமுகச் சிவமாய் முருகக் கடவுள்  தோன்றியுள்ளார். ஆதலின் அவ்விரு மூர்த்திகளுக்கும் யாதொரு பேதமுமில்லை, 
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 129)
ஈசனேஅவன் ஆடலால் மதலைஆயினன்காண்
ஆசிலாஅவன் அறுமுகத்துண்மையால் அறிநீ
பேசில் ஆங்கவன் பரனொடு பேதகன் அல்லன்
தேசுலாஅகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல்

(3)
ஆறு திருமுகங்கள் என்று பொதுவில் வழங்கப் பெறினும், முருகப் பெருமானுக்கு எங்குமே திருமுகங்கள், எவ்விடத்தும் திருக்கண்கள், எவ்விடத்தும் திருச்செவிகள், எங்கும் திருக்கரங்கள், எங்குமேயாம் யாவராலும் வணங்கப் பெறும் அம்மூர்த்தியின் திருவடிகள்,
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 133)
எங்கணும்பணி வதனங்கள் எங்கணும் விழிகள்
எங்கணும் திருக்கேள்விகள் எங்கணும் கரங்கள்
எங்கணும் திருக்கழலடி எங்கணும் வடிவம்
எங்கணும் செறிந்தருள் செயும் அறுமுகத்(து) இறைக்கே.

(4)
தெய்வங்கள், மறைகள் மற்றுமுள்ள யாவற்றிற்கும் முதன்மையான 'ஓம்' எனும் பிரணவம் கந்தக் கடவுளின் ஆறு திருமுகங்களில் ஒன்று எனில் அப்பெருமானின் சீர்மையினை எவரால் விவரிக்க இயலும்?
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 134)
தாமரைக்கணான் முதலிய பண்ணவர் தமக்கும்
ஏமுறப்படு மறைக்கெலாம் ஆதி பெற்றியலும்
ஓமெனப்படும் குடிலையே ஒப்பிலா முருகன்
மாமுகத்துள் ஒன்றாம்அவன் தன்மையார் வகுப்பார்

(5)
அம்மூர்த்தி சிறுவர் போலும் எழுந்தருளி வருவார், குருவாகவும் விளங்கித் தோன்றுவார், அணுவினும் சிறிதாவார், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நெடிதுயர்ந்து நிற்பார். இவ்விதம் எண்ணிலடங்கா திருவடிவங்களோடு, ஞானியரும் அறிதற்கரிய தன்மையில் விளங்கும் முருகவேளின் திருவிளையாடல்களை யாரே வகுத்துணர வல்லார்? 
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 137)
சிறுவன் போலுறும் குரவனே போலுறும் தினையில்
குறியன் போலுறும் நெடியவனாகியும் குறுகும்
நெறியின் இன்னணம் வேறு பல்லுருக்கொடு நிலவும்
அறிவர் நாடரும் கந்தவேள் ஆடலார் அறிவார்

(6)
சிவபெருமானின் திருவிளையாடல் வடிவெனத் தோன்றி அருளியுள்ள முருகப் பெருமானின் ஆணையினை மீறி அணுவும் அசைய ஒண்ணுமோ?. அப்பெருமானின் மாயையினால் அதனை நீ அறியாதவனாய் உள்ளாய், 
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 138)
சிவனதாடலின் வடிவமாய் உற்றிடும் செவ்வேள்
அவனதாணையின் அன்றியே பெயர்கிலாதணுவும்
எவர்அவன்தனி ஆற்றலைக் கடந்தவர் இவண்நீ
தவ மயங்கினை அவன்தனி மாயையில் சார்வாய்

(7)
முன்பொரு சமயம் முருகப் பெருமான் தேவர்களுக்குத் தன்னுடைய விஸ்வரூபத் திருக்கோலத்தைக் காண்பித்து அருளுகையில், இன்று உன்னுடைய ஆட்சிப் பொறுப்பிலுள்ள 1008 அண்டங்களும் அம்மூர்த்தியின் சிறு உரோமத்துள் அடங்கியிருந்தன. இத்தன்மையிலுள்ள பரம்பொருளை நீ சிறுவனென்று இகழ்கின்றாயோ?
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 144)
அன்று கந்தவேள் அமைந்ததோர் பெருவடிவதனுள்
ஒன்று ரோமத்தின் இருந்ததற்(கு) ஆற்றிடாதுனதாய்த்
துன்றும் ஆயிரத்தெட்டெனும் அண்டமாம் தொகையும்
இன்று நீயது தெரிகிலை சிறுவனென்றிசைத்தாய்

சூரபத்மனுக்கு சிங்கமுகாசுரனின் அறிவுரைகள் (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமான் தாரகாசுரனை வதம் புரிந்துப் பூதப் படையினருடன் திருச்செந்தூருக்கு எழுந்தருளி வருகின்றார். அங்கிருந்தவாறே வீரவாகுவை இலங்கைக்கு அப்பாலுள்ள வீரமகேந்திரபுரத்திற்குத் தூதாக அனுப்புகின்றார். சூரன் தூதுச் செய்தியை அலட்சியப்படுத்த, வீரவாகு சூரனின் தளபதிகள் சிலரையும், சூரனின் மகனான வச்சிரவாகுவையும் கொன்று அங்கிருந்து மீள்கின்றான். இந்நிலையில் சூரன் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்கின்றான். அங்குள்ளோர் யாவரும் சூரனின் மனநிலைக்கு ஏற்றவாறு பேசிக்கொண்டே வர, இறுதியாய்ச் சூரனின் இளைய சகோதரனான சிங்கமுகாசுரன் தன் அறவுரைகளைக் கூறத் துவங்குகின்றான்.  

கச்சியப்ப சிவாச்சாரியார் 41 திருப்பாடல்களில் சிங்கமுகாசுரனின் அறிவுரைகளைப் பதிவு செய்கின்றார். சிவபரத்துவம், ஆறுமுகக் கடவுளின் மேன்மைகள், படைப்பின் தன்மைகள் இவைகளோடு பற்பல தர்மங்களையும் தமையனுக்கு எடுத்துரைக்கின்றான். இப்படலத்தின் 142ஆம் திருப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார் இவனை அறிஞர்களுக்குள் மேலான அறிஞன் ('அறிஞரின் மிக்கோன்') என்று போற்றுகின்றார்,  

தமையனே கேள், 'பரம்பொருளான சிவபெருமான், வரமளித்த நாமே அழிப்பது முறையன்று! ஆதலின் நம் சுவரூபமேயான திருக்குமாரன் ஒருவனைத் தோற்றுவித்து இச்செயலினை முற்றுவிப்போம்' என்று திருவுள்ளம் கொண்டருளினார், 
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 122)
வரமளித்த யாம் அழிப்பது முறையன்று வரத்தால்
பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும்
அரிதெனப் பரன் உன்னியே தன்னுருவாகும்
ஒரு மகற்கொடு முடித்தும் என்றுன்னினான் உளத்தில்

அக்காரணத்தால், முன்னவர்க்கெல்லாம் முன்னவரான அச்சிவ மூர்த்தி தன் நெற்றிக் கண்ணிலிருந்து, 'செக்கச் சிவந்த திருமேனியும், ஆறு திருமுகங்களும், பன்னிரு திருத்தோள்களும் கொண்டருளும் குமாரக் கடவுளைத் தோற்றுவித்துள்ளார், 
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 123)
செந்நிறத் திருமேனியும் திருமுகம்ஆறும்
அன்னதற்கிரு தொகையுடைத் தோள்களுமாக
முன்னவர்க்கு முன்னாகிய பராபர முதல்வன்
தன்நுதற்கணால் ஒருதனிக் குமரனைத் தந்தான்

'மும்மல சம்பந்தமுடைய உயிர்களினின்றும் தோன்றும் பிற உயிர்களைப் போன்று, சிவபரம்பொருளின் நெற்றிக் கண்களினின்றும் தோன்றியருளிய குமரனைத் தவறாக எண்ணி விடாதே. அக்குமாரப் பெருங்கடவுள் மறைகளையும் கடந்த நிலையில் விளங்குபவர் என்பதனை அறிவாயாக,
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 124)
மானுடத்தரில் விலங்கினில் புட்களில் மற்றும்
ஊனமுற்றுழல் யாக்கையில் பிறந்துளார் ஒப்ப
நீ நினைக்கலை பரஞ்சுடர் நெற்றியம் தலத்தே
தான்உதித்தனன் மறைகளும் கடந்ததோர் தலைவன்
*
சீலமும் பக்தியும் இல்லாதவரால் உணர இயலாத அந்த ஆறுமுகப் பரம்பொருளைப் பாலன் என்று கருதி விடாதே. 'சிறியதொரு விதைக்குள் ஆலமரத்தின் முழுத் தன்மையும் இருத்தலைப் போன்று, பால வடிவினனான குமர நாயகனுக்குள் பரம்பொருள் தன்மை பரிபூரணமாய் நிறைந்துள்ளது' என்று தெளிவாயாக, 
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 125)
சீலம் இல்லவர்க்(கு) உணரவொண்ணாத சிற்பரனைப்
பாலன் என்றனை அவனிடத்தில் பல பொருளும்
மேலை நாள்வந்து தோன்றிய சிறியதோர் வித்தின்
ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித்தது போல்

மூல முதற்பொருளைச் சிறுவன் என்று இகழ்கின்றாய், 'ஆறுமுகங்கள் கொண்டருளும் அப்பெருமான் உன்னையும் உன் அசுரப் படைகளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்தொழிக்க வல்லவர். எனினும் தன் பேரருள் திறத்தினைக் காட்டும் பொருட்டு, இன்று உன்னுடன் போர் புரிய வருவது போன்றதொரு திருவிளையாடலைப் புரிகின்றார்' என்பதனை உணர்வாயாக, 
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 133)
இன்ன தன்மைசேர் முதல்வனைச் சிறுவன் என்றிகழ்ந்து
பன்னுகின்றனை அவுணர்தம் கிளையெலாம் படுத்து
நின்னையும் தடிந்திடுவன்ஓர் இமைப்பினின் இரப்பும் 
தன்அருட்திறம் காட்டுவான் வந்தனன் சமர்மேல

சூரசம்ஹாரப் போர் எத்தனை நாள் நடந்தேறியது? (கந்தபுராண விளக்கங்கள்):

'முருகப் பெருமானோடு கூடிய பூதப் படையினருக்கும், சூரபத்மன் உள்ளிட்ட அசுரப் படையினருக்கும் இடையே நடந்தேறிய கடும் யுத்தமானது 10 நாட்களுக்கு நீடித்தது என்று' கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் இரு திருப்பாடல்களில் பதிவு செய்கின்றார்,  

முதல் நிகழ்வு, சிறையில் அடைப்பட்டு சொல்லொணாத் துயரோடு புலம்பி வருந்தியிருக்கும், இந்திரனின் மகனான சயந்தனின் கனவில் தோன்றும் முருகப் பெருமான், 'கவலையை ஒழிப்பாய், இன்றைய பொழுது கடந்த பின்னர், நாளைக் காலையே திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு, இலங்கையைக் கடந்து, சூரனின் தீவான வீரமகேந்திரபுரத்தின் எல்லைக்கருகில் வந்தடைவோம். அன்றிலிருந்து 10 நாட்களுக்குள், சூரன் உள்ளிட்ட அசுரர் கூட்டத் தொகை முழுவதையும் சம்ஹாரம் புரிவோம்' என்றருளிச் செய்கின்றார் (சொற்பொருள்: மல்லல் - செழுமை, செந்தி மல்லலம் பதி -  செழுமை வாய்ந்த செந்தில் பதி)
-
(மகேந்திர காண்டம்: சயந்தன் கனவுகாண் படலம் - திருப்பாடல் 11)
செல்லும் இப்பகல் கழிந்தபின் நாளையே செந்தி
மல்லலம் பதி நீங்கி இந்நகர்க்(கு) அயல் வைகிச்
சொல்லும் ஐந்திரு வைகலின் அவுணர்தம் தொகையும்
அல்லல் ஆற்றிய சூரனும் முடிந்திட அடுதும்

பின்வரும் மற்றொரு திருப்பாடல், '7ஆம் நாளிலிருந்து 10ஆம் நாள் வரையில், தொடர்ந்து நான்கு நாட்கள் சூரன் ஆறுமுக தெய்வத்தோடு யுத்தம் புரிந்த நிகழ்வினை' பதிவு செய்கின்றது ('இன்ன தன்மையில் ஈரிரு நாள் வரை'). இறுதி இரு வரிகள், 'தன்னுடைய தாயான மாயையை உள்ளத்தில் வணங்கி, எண்ணற்ற மாய வடிவங்களில் தோன்றி சூரபத்மன் போர் புரிந்து வரும் தன்மையை' விவரிக்கின்றது. 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 329)
இன்ன தன்மையில் ஈரிரு நாள் வரைத்
துன்னலன் தொலையா(து) அமர் ஆற்றியே
பின்னும் மாயையின் பெற்றியைப் புந்தியுள்
உன்னியே பல்லுருக்கொடு தோன்றினான்

யுத்தக் காட்சியிலொரு நுட்பம் (தவத்தின் மேன்மை) - கந்தபுராண நுட்பங்கள்:

கச்சியப்ப சிவாச்சாரியார் தம்முடைய கந்தபுராணத் திருப்பாடல்களில் ஆங்காங்கே தவத்தின் மேன்மையையும், 'தவத்தால் மட்டுமே சிவத்தை அடைய இயலும்' எனும் சத்தியத்தையும் வலியுறுத்திக் கொண்டே வருவார். அவ்வாறு யுத்தகாண்டத்தில் இடம்பெறும் ஒரு திருப்பாடலை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

இறுதிக் கட்டப் போர்ச் சூழல், 1008 அண்டங்களினின்றும் வந்து குழுமியுள்ள எண்ணிலடங்கா அசுரப் படைகளுடன் சூரபத்மன் யுத்த களத்தினை வந்தடைகின்றான். நான்முகக் கடவுள் இச்செய்தியைக் கந்தவேளிடம் அறிவித்துப் பணிய, அறுமுக தெய்வம் புன்முறுவல் புரிந்தவாறு வாயுதேவனைக் குறிப்பால் பார்த்தருள, கணநேரத்தில் வாயுதேவன் திருத்தேருடன் அவ்விடத்திற்கு வந்து சேர்கின்றான், 

குமாரக் கடவுள் விரைந்தெழுந்து, ஒளி பொருந்திய மழு; வச்சிராயுதம்; வேல்; வாள்; கேடயம்; சக்ராயுதம்; தண்டாயுதம்; உலக்கை; வில்; அம்பு; கைவேல் ஆகிய ஆயுதங்களைத் தம்முடைய பன்னிரு திருக்கரங்களிலும் ஏந்திக் கொள்கின்றார். 

இவ்விடத்தில் ஒரு நுட்பம், 'தன்னுடைய சங்கல்ப சக்தியால் கண நேரத்தில் ஆயிரம் கோடி அண்டங்களையும் படைத்து, விளையாட்டாய் ஐந்தொழிலையும் புரிந்தருள வல்ல சிவபரம்பொருளின் குமார வடிவமாகிய நம் வேலாயுதப் பெருங்கடவுள், ஒரு அசுரனை சம்ஹாரம் புரிந்தருள இத்தனை விதமான ஆயுதங்களைத் தரித்துக் கொள்கின்றார் எனில் சூரபத்மனின் தவச் சிறப்பினை அளவிட்டுக் கூறவும் இயலுமோ?' என்று தவத்தின் மேன்மையை வியந்து போற்றுகின்றார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 46)
உய்த்திடுகின்ற காலத்தொய்யென எழுந்து காமர்
புத்தலர் நீபத் தாரான் புகர்மழுக் குலிசம் சூலம் 
சத்திவாள் பலகை நேமி தண்டெழுச் சிலைகோல் கைவேல்
கைத்தலம் கொண்டான் என்னின் அவன்தவம் கணிக்கல் பாற்றோ
-
(சொற்பொருள்: ஒய்யென - விரைந்து, நீபம் - கடப்ப மலர், தார் - மாலை, புகர் - ஒளி, குலிசம் - வச்சிராயுதம், சத்தி - வேல், பலகை - கேடயம், நேமி - சக்கரம், தண்டு - தண்டாயுதம், எழு - உலக்கை, கணிக்கல் பாற்றோ - கணிக்கத் தக்கதோ?)