விண்ணிலிருந்து தமிழகத்திற்கு வந்த காவிரி (தவறான திரைக்கதையும், உண்மை நிகழ்வும் - கந்தபுராண விளக்கங்கள்):

1972ஆம் வருடம் வெளிவந்த 'அகத்தியர்' திரைப்படத்தில், தன்னைப் பரிகசித்துப் பேசிய காவிரி தேவியை அகத்தியர் கமண்டலத்தில் அடைப்பதாகவும், பின்னர் காக்கையின் வடிவில் தோன்றும் விநாயகப் பெருமானால் அந்நதி வெளிப்படுவதாகவும் காட்சி அமைக்கப் பெற்றிருக்கும். இந்நிகழ்வுகளுள் விநாயக மூர்த்தியால் காவிரி வெளிப்பட்டது மட்டுமே உண்மை வரலாறு, அதற்கு முந்தைய நிகழ்வுகள் யாவும் திரைக்கதை சுவாரஸ்யத்திற்காகப் புனையப் பெற்றவையே. இனி இந்நிகழ்வுகள் குறித்த மெய்மையான வரலாற்றினை கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 

அகத்திய மாமுனி சிவபரம்பொருளின் கட்டளைப்படி தென்திசை நோக்கிப் பயணித்துச் செல்லுகையில், தேவர்கள் 'விந்திய மலையின் ஆணவத்தை அடக்கி அருள் புரியுமாறு' அகத்தியரை வேண்டிப் பணிகின்றனர். குறுமுனியும் இதுகுறித்துச் சிவபெருமானின் திருவருளை வேண்டித் தொழ, முக்கண் முதல்வர் திருக்காட்சி அளித்து ஆசி கூறியருள் புரிகின்றார். அச்சமயத்தில் 'தென்திசையில் அனுஷ்டானம் மற்றும் வழிபாடு புரிதற் பொருட்டு தீர்த்தமொன்றினைத் தந்தருள வேண்டும்' என்று அகத்தியர் விண்ணப்பிக்க, சிவமூர்த்தி காவிரி தேவியை அகத்தியருடன் செல்லுமாறு கட்டளையிட்டு அருள் புரிகின்றார், 
-
(கந்த புராணம் - அசுர காண்டம் - அகத்தியப் படலம்):
தீது நீங்கிய தென் திசைக்கு ஏகிய
கோதிலாத குறுமுனி தன்னொடும்
போதல் வேண்டும் பொருபுனல் காவிரி
மாது நீஎன மற்றவள் கூறுவாள்

பின்னர் சிவபெருமான் அகத்தியரிடம், 'இனி இக்காவிரியை உன்னுடைய கமண்டலத்தில் நிறைத்துச் செல்வாய்' என்று அருள் புரிகின்றார், 
-
(கந்த புராணம் - அசுர காண்டம் - அகத்தியப் படலம்):
நீடு காவிரி நீத்தத்தை நீ இனிக்
கோடி உன் பெரும் குண்டிகைப் பால்என
நாடி அத்திறம் செய்தலும் நன்முனி
மாடு சேர்ந்தனள் மாநதி என்பவே
-
மேற்குறித்துள்ள திருப்பாடல்களால் 'அகத்திய மாமுனி தென்திசைக்கு வருவதன் முன்னமே காவிரி நதியானது அவருடைய கமண்டலத்தில் விளங்கியிருந்தது' என்பதும், 'காவிரி தேவி பரிகசித்து அகத்தியர் கமண்டலத்தில் அடைத்ததாகக் கூறுவது புனைந்துரையே' என்பதும் தெளிவாகின்றது. 

பின்னர் அகத்தியர் வில்லவன் வாதாபி எனும் அசுரர்களை அழித்தொழித்து அதிலுண்டான தோஷ நிவர்த்திக்காக கொங்கு தேசத்தில் சிவவழிபாடு புரிந்து வருகின்றார். சரி நம் விநாயகப் பெருமான் இந்நிகழ்விற்குள் எங்கு வருகின்றார் எனில், சூரபன்மனின் கொடுமையினால் இந்திரன் சீர்காழித் தலத்தில் மறைந்து வாழ்ந்து வருகின்றான்; சிவவழிபாட்டிற்குப் போதுமான நீர்நிலைகள் இல்லையாதலின், நாரதரின் உபாயப்படி விநாயகப் பெருமானைப் போற்றித் துதித்துப் பணிகின்றான்.

இந்திரனின் முன் தோன்றும் வேழ முகத்து இறைவரான கணபதி, இந்திரனின் வேண்டுகோளினை ஏற்றுக் காவிரியை இந்நிலப்பிறப்பில் பாயுமாறு செய்வதாக அருள் புரிகின்றார்.  
-
(கந்தபுராணம் - அசுர காண்டம்: காவிரி நீங்கு படலம்):
அன்னவன் தனது மாட்டோர் அணி கமண்டலத்தினூடே
பொன்னி என்றுரைக்கும் தீர்த்தம் பொருந்தியே இருந்ததெந்தாய்
நன்னதி அதனை நீபோய் ஞாலமேல் கவிழ்த்து விட்டால்
இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீருமென்றான்

காக்கை வடிவில் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்துக் காவிரியை வெளிப்படச் செய்கின்றார். பின்னர் சிறுவனொருவனின் வடிவில் தோன்றி, கோபத்துடன் விரட்டி வரும் அகத்தியருக்கு அங்குமிங்கும் போக்குக் காட்டித் திருவிளையாடல் புரிந்துப் பின்னர் தன் சுய திருக்கோலத்தைக் காட்டியருள் புரிகின்றார். அகத்தியர் தன் தவுறுணர்ந்துத் தன் கரங்களாலேயே தலையில் குட்டிக் கொண்டு, தாரகப் பிரம்மமான விநாயகப் பெருமானிடம் பிழை பொறுக்குமாறு வேண்டிப் பணிகின்றார், யானை முக வள்ளலும் 'வருந்தற்க' என்று அருள் புரிகின்றார்,
-
(கந்தபுராணம் - அசுர காண்டம்: காவிரி நீங்கு படலம்):
அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச்
சிந்தனை புரிந்தேன் யாதும் தெளிவிலேன் அதற்குத் தீர்வு
முந்தினன் இயற்றுகின்றேன் என்றலும் முறுவல் செய்து
தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி என்றான்

காசியில் மரணிக்கும் ஆன்மாக்களுக்குச் சிவபெருமான் எந்த மந்திரத்தை உபதேசித்து முத்தியளிக்கின்றார்? (கந்தபுராண விளக்கங்கள்):

காசியில் மரணிக்கும் ஆன்மாக்களுக்கு ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் மந்திர உபதேசம் புரிந்துப் பின் முத்திப் பேற்றினையும் அளித்தருள்வதாகப் பொதுவில் கேள்வியுற்றிருப்போம். எனில் 'சிவமூர்த்தி எந்த மந்திரத்தை உபதேசம் செய்கின்றார்?' என்பதற்கான விடையை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம்,

முதல் திருப்பாடல் 'திருக்கயிலையில் முருகப் பெருமான் பிரமனிடம் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டுச் சோதிக்கும்' நிகழ்வு தொடர்பானது. அச்சமயத்தில் பிரமன் அச்சத்துடன் 'சிவபெருமான் எழுந்தருளும் பீடமாய் விளங்குவதும், எழுத்துக்கள் மற்றும் நால்வேதங்களுக்கும் முதன்மையாகத் திகழ்வதும், காசி ஷேத்திரத்தில் மரணிக்கும் ஆன்மாக்களுக்கு சிவமூர்த்தி உபதேசிப்பதுமான பிரணவத்தின் பொருள் யாதென்று?' சிந்தித்துத் திகைப்பதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். ஆதலின் 'சிவபெருமான் காசியில் பிரணவ மந்திர உபதேசம் புரிகின்றார்' என்பது இதனால் புலனாகின்றது, 
-
(உற்பத்தி காண்டம் - அயனைச் சிறைபுரி படலம்):
ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாசமாய் எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க்கு எம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான்

இரண்டாவதாக, 'அகத்தியர் வடதிசையிலிருந்து தென்திசைக்கு வரும் வழியில் காசித் தலத்தையும் தரிசிக்கும் நிகழ்வினை' விவரிக்கும் பின்வரும் திருப்பாடலில், 'காசியில் அந்தமடைவோருக்குச் சிவபெருமான் தனது மூல மந்திரத்தை உபதேசம் செய்தருள்வதாக' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் ('அந்தமது அடைந்தோர்க்கு அங்கண் அருளினால் தனது மூல மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்'). ஆதலின் கீழ்க்குறித்துள்ள திருப்பாடலே, 'சிவபெருமான் காசியில் சிவ பஞ்சாக்ஷர உபதேசமும் புரிகின்றார்' என்பதற்கான பிரமாணம்,
-
(அசுர காண்டம் - விந்தம் பிலம்புகு படலம்)
பைந்தமிழ் முனிவன் வான்தோய் பனிவரையதனை நீங்கிக்
கந்தரம் செறி பொற்கோட்டுக் கடவுளர் வரைச்சார்எய்தி
அந்தமது அடைந்தோர்க்கு அங்கண் அருளினால் தனது மூல
மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்

சிவபெருமானுக்கு நீலகண்டம் தோன்றியது எவ்வாறு? (தவறான புரிதல்களும், முறையான கந்தபுராண விளக்கங்களும்)

சிவபரம்பொருள், பிரமன் உள்ளிட்ட தேவர்களையும், மற்றுள்ளோர் யாவரையும் காத்தருளும் பொருட்டு, பாற்கடலில் கிளர்ந்தெழுந்த ஆலகால விடத்தினை உண்ட நிகழ்வு அனைவரும் அறிந்ததே. இனி இந்நிகழ்வு தொடர்பாக வழங்கி வரும் ஒரு உப செய்தியையும் காண்போம், 'அந்நஞ்சு உட்சென்றால் இறைவருள் விளங்கியிருக்கும் அண்டசராசரங்களும் அழிவுறுமே' என்று உமையன்னை கருதியதாகவும், இறைவரின் திருக்கழுத்தினைத் தன் திருக்கரங்களால் பற்றி அவ்விடத்தினைக் கண்டத்திலேயே நிலைபெறச் செய்ததாகவும்' நிலவி வரும் இச்செய்தி குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,    

சிவமூர்த்தி அனைவரையும் காத்தருளவே நஞ்சினை உட்கொண்டுள்ளார், எனில் 'தன் திருமேனியுள் நஞ்சு சென்றால் அண்டசராசரங்களும் அழிவுறும்' என்றொரு தன்மை இருப்பின், அது இறைவற்கு அறியாதவொன்றாக எவ்விதம் இருந்திருக்க இயலும்?. இவ்விளக்கம் பரம்பொருள் இலக்கணத்திற்கு ஒருசிறிதும் ஒவ்வாததன்றோ?. மற்றொரு கோணம், இறைவனின் சங்கல்ப சக்தியினால் மட்டுமே ஒரு நிகழ்வின் பயன் அமையுமேயன்றிப் பிறிதொன்றால் அன்று (பின்னாளில் நம் நாவுக்கரசு சுவாமிகளுக்குச் சமணர்களால் அளிக்கப் பெறும் நஞ்சு, சிவமூர்த்தியின் திருவுள்ளச் சங்கல்பத்தினால் அமுதமென நலம் பயந்த நிகழ்வினை உய்த்துணர்க). 

இனி நடந்தேறிய மெய்மையான நிகழ்வினைக் கச்சியப்பரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்துணர்வோம், 

சிவமூர்த்தி தேவர்களிடம், 'இக்கொடிய நஞ்சினை நாம் உட்கொள்ளவோ? அல்லது இதன் தன்மையினை நலிவுறச் செய்துப் பிறிதொரு இடத்தில் எறிந்திடவோ?' என்று கேட்டருள்கின்றார், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 355)
காளக உருவு கொண்ட கடுவினை உண்கோ அன்றேல்
நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னான்
தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார்

அங்குள்ளோர் யாவரும், 'ஆதியும் அந்தமுமற்ற இறைவரே, பாற்கடல் கடைகையில் தோன்றிய முதல் விளைச்சலாகிய இந்த நஞ்சானது முழுமுதற் பொருளாகிய உமக்கு உரித்தானதன்றோ, ஆதலின் அடியவர்களாகிய நாங்கள் உய்யும் பொருட்டு இதனைத் தாமே அமுது செய்தருள வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர். முக்கண் முதல்வரும், 'அஞ்சேல்' என்று அபயமளித்து அருள் புரிகின்றார், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 357)
முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு பாகமெல்லாம்
விடமதே எனினுமாக வேண்டுதும் இதனை வல்லே
அடியரேம் உய்யுமாற்றால் அருந்தினை அருள்மோ என்னக்
கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனி நீரென்றான்

இறைவர் நஞ்சினை அமுது செய்கையில், அது இறைவரின் திருக்கண்டம் வழியே செல்வதை யாவரும் காண்கின்றனர். உடன் பிரமன், 'ஐயனே! இன்று எங்கள் யாவரையும் தாங்கள் காத்தருளிய தன்மைக்குச் சான்றாக, 'இந்த நஞ்சினைத் தங்கள் திருக்கண்டத்திலேயே நின்று நிலைபெறச் செய்தல் வேண்டும்' என்று தொழுதேத்துகின்றனர், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 358)
என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடமுட்கொள்ளச்
சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
இன்றெமதுயிர் நீ காத்தற்கிங்கிது சான்றாய் அங்கண்
நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார்

கருணைப் பெருவெள்ளமான சிவபெருமானும் 'அவ்வண்ணமே ஆகுக' என்றருளி, நீல மணியென அவ்விடம் தம்முடைய கண்டத்தில் விளங்குமாறு செய்தருள்கின்றார். அது கண்டு தேவர்களும் மற்றுள்ளோரும், 'இன்றே யாம் மீண்டும் பிறந்து உய்வு பெற்றோம்' என்று சிவபெருமானைப் போற்றி செய்து பணிகின்றனர். 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 359)
போற்றலும் மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணியதென்ன
மாற்றரும் தகைமைத்தான வல்விடம் நிறுவி அன்னார்க்கு 
ஏற்ற நல்லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
தோற்றினராகும் என்னச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார்

ஆலகால விடத்தைக் கையிலெடுத்துக் கொணர்ந்த ஆலால சுந்தரர் (கந்தபுராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வு):

'நம் சுந்தரனார், பாற்கடல் கடையும் நிகழ்வு சமயத்தில் வெளிப்பட்டெழுந்த ஆலகால விடத்தை, சிவபெருமானின் ஆணையினால், தம்முடைய கரங்களில் ஏந்திக் கொணர்ந்து சிவமூர்த்தியிடம் அளித்ததாக' பல்வேறு ஆன்மீக விரிவுரைகளிலும், வலைத்தளங்களிலும், முகநூல் பதிவுகளிலும் கேட்டும் படித்துமிருப்போம். 

எனினும் பெரியபுராணமோ சுந்தரரின் வரலாற்றினை, 'ஆலால சுந்தரர் திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வருகின்றார்' எனும் இடத்திலிருந்தே விவரிக்கத் துவங்குகின்றது. எனில், 'மேற்குறித்துள்ள நிகழ்விற்கு அகச்சான்றுகள் தான் என்ன?' என்று பெரிதும் ஏங்கித் தவித்திருப்போருக்குத் தம்முடைய தேனினும் இனிய கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக நம் கச்சியப்ப சிவாச்சாரியார் விடை பகர்கின்றார், 

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலின் இறுதி இரு வரிகளில் சிவபரம்பொருள் தம்மருகே நின்றிருக்கும் அணுக்கத் தொண்டரான நம் சுந்தரரைப் பார்த்து, 'அக்கொடிய விடத்தை இவ்விடத்தே கொண்டு வருக' என்று பணித்து அருள் புரிகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 353)
வண்டமர் குழலெம் அன்னை மற்றிவை இசைத்தலோடும்
அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியம் கடவுள் தன்பால்
தொண்டு செய்தொழுகுகின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
கொண்டிவண் வருதியால் அக்கொடுவிடம் தன்னை என்றான்

நம் சுந்தரனார், முப்பத்து முக்கோடி தேவர்களையும் தகித்துப் பதற வைத்த, இன்னதென்று கூற இயலாத தன்மையில் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்ப் பெருகியிருந்த அக்கொடிய ஆலகால விடத்தைத் திருவருளின் துணை கொண்டு, தம்முடைய கரங்களில் சிறு நாவல்பழம் போலும் திரட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் அளித்துப் பணிகின்றார்,  
-
(தக்ஷ காண்டம்: ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 354)
என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டும் 
துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடு வந்துய்ப்ப
ஒன்றொரு திவலையே போல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான்

ஆலகால விடத்தை ஏந்திக் கொணர்ந்த காரணத்தால் அதுமுதல் 'ஆலால சுந்தரர்' எனும் திருநாமத்தாலும் நம் சுந்தரனார் குறிக்கப் பெற்று வருகின்றார் (வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி)!!!

திருக்கயிலையில் நடந்தேறிய சூதாட்ட நிகழ்வும், ஆலால சுந்தரரும் (கந்தபுராணம் விவரிக்கும் அரியதொரு நிகழ்வு):

திருக்கயிலையில் ஆதிப்பரம்பொருளான சிவமூர்த்தி திருவிளையாடல் ஒன்றினைப் புரிந்தருளும் திருவுள்ளக் குறிப்புடன் உமையன்னையை நோக்கி, 'நீ நம்முடன் சூதாட்டம் விளையாடுவாயாக, நீ தோல்வியுற்றால் உன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் நீ தந்திடல் வேண்டும், நாம் தோற்பின் நம் முடியிலுள்ள பிறைச் சந்திரன் உள்ளிட்ட ஆபரணங்கள் யாவையும் உனக்குத் தருவோம்' என்றருளிச் செய்கின்றார் (திருமேனி எங்கிலும் அலங்கரிக்கும் நாகாபரணங்களையே தம்முடைய அணிகலன்கள் என்று இறைவர் குறிக்கின்றார் போலும்).   
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 161)
சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும்
ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு
பாதியாம் சசிமுதல் பலவும் கோடியால்

உலகீன்ற உமையவளும் இறைவரின் கருத்திற்கு இசைவு தெரிவிக்க, முக்கண் முதல்வரும் அச்சமயத்தில் அருகிருந்த வைகுந்த வாசனாரை நோக்கி 'பரந்தாமா! இவ்விளையாட்டிற்குச் சாட்சியாக பொருத்தமுற விளங்கியிருப்பாய்' என்று நியமிக்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 162)
என்னலும் உமையவள் இசைவு கோடலும்
அன்னதொர் எல்லையில் அரியை நோக்கியே
தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென
மன்னினை இருத்தியான் மாயநீ என்றான்

இத்திருவிளையாடலைத் தொடர்ந்து விரிவாகக் காண்பது இப்பதிவின் நோக்கமன்று, 'இந்நிகழ்வினில் நம் தலைவரான ஆலால சுந்தரர் இடம்பெறுகின்ற சுவையான குறிப்பொன்றினை வெளிக்கொணரவே' இப்பதிவு. 

பின்வரும் திருப்பாடலில் 'சுந்தரர் முதலாகவுள்ள அணுக்கத் தொண்டு புரிந்து வருவோர், சிவபெருமானின் கட்டளையினைச் சிரமேற் கொண்டு, அங்கு பலகைகள் உள்ளிட்ட சூதாடு கருவிகளை முறைப்படி கொணர்ந்து வைக்கின்றனர்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார்  பதிவு செய்கின்றார். 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 183)
இந்தவாறாயிடை நிகழும் எல்லையில்
சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
அந்தமில் பெருங்குணத்து ஆதி ஏவலில்
தந்தனர் காசொடு பலகை தன்னையே

பொதுவில் பெரிய புராண நிகழ்வுகளின் மூலமாக மட்டுமே 'சுந்தரரின் ஏற்றமிகு சிறப்பினை' அறிந்துணர்ந்து மகிழ்ந்திருக்கும் அன்பர்களுக்கு, பிற சைவ புராணங்களிலும் திருமுறைகளிலும் நம் சுந்தரர் தொடர்பாக இடம்பெறும் சிறியதொரு குறிப்பும் வியப்பூட்டுவதாகவும், உள்ளத்திற்கு பெரும் இனிமையைக் கூட்டுவதாகவும் விளங்கி வருகின்றது.

கங்கை நதியின் தோற்றம் - அறிந்த செய்திகளும் அறியாத நிகழ்வுகளும் (கந்தபுராண நுட்பங்கள்):

திருக்கயிலையில் ஒரு சமயம் நம் உமையன்னை, இறைவரின் இரு திருக்கண்களையும் தன் திருக்கரங்களால் விளையாட்டாய் மறைக்கின்றாள். அக்கணமே புவனங்கள் யாவிலும் பேரிருள் சூழ்ந்து அனைத்துயிர்களும் அவதியுறுகின்றன. சிவமூர்த்தி உடன் தன் நெற்றிக்கண்ணினால் விழித்து நோக்கி, உலகங்கள் யாவினுக்கும் மீண்டும் ஒளியினை அளித்தருள்கின்றார். 

அம்மை தன் திருக்கரங்களை உடன் விலக்கிக் கொள்ள, அச்சத்தினால் திருக்கை விரல்கள் யாவிலும் வியர்வை தோன்றுகின்றது. அத்தன்மை கண்டு நடுக்கமுறும் அம்மையின் பத்து விரல்களிலிருந்தும் கங்கையெனும் நதியானது புதிதாகத் தோன்றிப் பெருக்கெடுத்துப் பாய்கின்றது,
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 369)
சங்கரன் விழிகள் மூடும் தனாதுகை திறக்கும் எல்லை
அங்குலி அவை ஈரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
மங்கை அத்தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
கங்கையோர் பத்தாய் யாண்டும் கடல்களில் செறிந்த அன்றே
(சொற்பொருள்: அங்குலி - கைவிரல், வியர்ப்பு - வியர்வை, விதர்ப்ப - நடுங்கிட, செறிந்த - கலந்த)

அத்துடன் நில்லாது அந்நதியானது, ஆயிரம்; கோடி எனும் தன்மையில் பல்வேறு கூறுகளாக எங்கும் பிரவகித்துப் பாய்ந்து யாவற்றையும் சூழ்ந்து கொள்ள துவங்குகின்றது. 'இதென்ன விபரீதம்?' என்று நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் திருக்கயிலையில் சிவபரம்பொருளிடம் சென்று முறையிட்டுக் காத்தருளுமாறு வேண்டுகின்றனர்,

முக்கண் முதல்வர் புவனங்களெங்கிலும் சூழ்ந்திருந்த கங்கையின் பெருவெள்ளக் கூறுகள் யாவையும் தன்முன் வருமாறு அழைத்தருளிப் பின் அதனைத் தன் செஞ்சடையின் உரோமம் ஒன்றிலுள் செல்லுமாறு விடுக்கின்றார்.  
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 372)
என்றலும் நதிகள் தோற்றம் இயம்பி எவ்வுலகும் சூழ்போய்
நின்றவம் நீத்தம் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்பருய்ப்ப
மன்றலம் கமலத்தோனும் மாலும் இந்திரனும் சொல்வார்

தேவர்கள் யாவரும் சிவமூர்த்தியிடம், 'அம்பிகையின் திருவிரல்களில் தோன்றித் தம்முடைய சடாமுடியை அலங்கரிக்கும் பேறு பெற்றுள்ள இப்புனித தீர்த்தத்தினை எங்கள் உலகங்களிலும் சிறிது பாய்வதற்கு அருள வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர்.

வேத முதல்வர் தன் சடையிலிருந்து சிறிதளவு கங்கையை எடுத்து, ஸ்ரீமகாவிஷ்ணு; நான்முகக் கடவுள்; இந்திரன் ஆகிய மூவருக்கும் அளித்தருள, அதுமுதல் அம்மூன்று கூறுகள் 'ஸ்ரீவைகுந்தம்; பிரமலோகம் மற்றும் தேவலோகத்திலும்' பிரவகிக்கத் துவங்குகின்றது,
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 374)
இறையவன் வேணியுள் புக்கிருந்ததோர் கங்கை தன்னில்
சிறுவதை வாங்கி மூவர் செங்கையும் செறிய நல்க
நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம்
உறைநகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம்

அவற்றுள், இந்திரனால் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்ற கங்கையையே பின்னாளில் பகீரத மன்னன் தன்னுடைய கடும்தவத்தினால், பூமிக்கு வரவழைக்கப் பிரயத்தனம் மேற்கொள்கின்றான். அச்சமயத்திலும் கங்கையின் அச்சிறு கூறின் வேகத்தையும் பூமியால் தாங்கவொண்ணாது எனும் நிலை உருவாக, சிவபெருமான் மீண்டுமொரு முறை கங்கையைத் தன் செஞ்சடையில் தாங்கியருளிப் பின் அவற்றுள் சிறிதளவை மட்டுமே இப்பூமிக்குச் செல்லுமாறு விடுக்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 375)
அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை
பன்னரும் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
பின்னரும் இமையா முக்கண் பெருந்தகை முடிமேல் தாங்கி
இந்நில வரைப்பில் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான்

கந்தபுராணம் பறைசாற்றும் காஞ்சீபுரத் தலச் சிறப்புகள்:

'முத்திப்பேறு தரவல்ல ஏழு நகரங்களுள் தலையாய சிறப்புடன் விளங்குவது இக்காஞ்சீபுர ஷேத்திரமே' என்று சிவபரம்பொருள் முன்பொரு சமயம் உமையன்னையிடம் அருளிச் செய்ததாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் (மற்ற ஆறு முத்தி நகரங்கள் - ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதாரத் தலமான அயோத்தி, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரத் தலமான மதுரா, மாயாபுரி எனும் ஹரித்வார், அவந்தி எனும் உஜ்ஜைன், வாரணாசி எனும் காசி மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் அரசு புரிந்த துவாரகாபுரி ஷேத்திரம்)    
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 221):
அழகிய அயோத்தி மதுரையே மாயை அவந்திகை காசிநற் காஞ்சி 
விழுமிய துவரையெனப் புவிதன்னில் மேலவாய் வீடருள்கின்ற 
எழுநகரத்துள் சிறந்தது காஞ்சியென்றுமுன் எம்பிரான் உமைக்கு 
மொழிதரு நகர் அந்நகர்எனில் அதற்கு மூவுலகத்து நேருளதோ

(பாவச்செயலென்று அறியாமல்) இக்காஞ்சியில் புரியப் பெறும் ஒரு கோடி பாவங்களின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைந்து விடும். மற்றொருபுறம், இந்த ஷேத்திரத்தில் புரியப்பெறும் தர்ம காரியங்களுக்கான நற்பலன்கள் ஒன்றிற்குக் கோடி மடங்காய்ப் பெருகி வரும். இத்தன்மையியினால் எண்ணிறந்த தேவர்களும் முனிவர்களும் தத்தமது வசிப்பிடங்களை நீக்கிக் காஞ்சிப்பதியில் விரும்பித் தங்கியிருந்து, தவமும் சிவாச்சார்ச்சனையும் புரிந்துப் பேறு பெற்றுள்ளார்கள்,  
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 225):
பாவமோர் கோடி புரியினும் ஒன்றாம் பரிவினில் தருமமொன்றியற்றின்
ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கும் இன்னதோர் பெற்றியை நாடித்
தேவர்கள் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவனருச்சனை புரிந்தங்கண்
மேவினர் தவம் செய்திருத்தலால் காஞ்சி வியனகர்ப் பெருமையார் விரிப்பார்

பிரமனின் பிற்பகலான பிரளய காலத்திலும், முற்பகலான சிருஷ்டிக் காலங்களிலும் காஞ்சிபுரம் ஒருசிறிதும் அழிவுறாது விளங்கும், ஆதலின் இத்தலம் பிரம்ம சிருஷ்டியன்று, உமையொரு பாகனாரான சிவபெருமானே உருவாக்கியுள்ள புண்ணிய ஷேத்திரம்,
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 226):
கங்கைதன் சிறுவனருள் பெறு வேதாக் கண்படை கொண்ட காலையினும்
அங்கவன் துஞ்சும் பொழுதினும்  காஞ்சி அழிவுறாதிருந்த பான்மையினால்
துங்கவெண் பிறையும் இதழியும் அரவும் சுராதிபர் முடிகளும்அணிந்த
மங்கையோர் பங்கன் படைத்ததேயன்றி மலரயன் படைத்ததன்றதுவே

உமையன்னையாகிய காமாக்ஷி தேவி இன்னமும் தவம் புரிந்து வரும் இந்த புண்ணிய ஷேத்திரத்தில், இறப்போர்; பிறப்போர்; நிலையாய் வசிப்போர்; நான்மறைகளாகிய மாமர நிழலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிவோர் ஆகிய யாவருக்கும் சிவமுத்தியினை நல்க வல்ல ஷேத்திரம் காஞ்சீபுரம்,
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 232):
இன்னமும் உமையாள் நோற்றிடும் ஆங்கே இறப்பினும் பிறப்பினும் நிலையாய்
மன்னியே உறினும் ஒருகணமேனும் வைகினும் மறைகளாம் தனிமா
நன்னிழலிருந்த பரஞ்சுடர் புரியும் நடம் தரிசிக்கினும் அதனை
உன்னினும் முத்தி வழங்கு காஞ்சியைப் போல் உலகில் வேறொரு நகருளதோ

பாரத தேசமெங்கிலும் முத்தி தரவல்ல 108 ஆலயங்களுள், 20 சிவாலயங்கள் இக்காஞ்சியிலேயே அமையப்பெற்றுள்ளன. அவை முறையே கச்சபேசம், ஏகம்பம், கச்சி மயானம், காயாரோகணம், மாகாளேசம், திருமேற்றளி, அனேகதங்காபதம், கடம்பர் கோயில், பணாதரேசம், மணிகண்டேசம், வராகேசம், சுரகரேசம், பரசுராமேசம், வீரட்டகாசம், வேதநூபுரம் (திருமாகறல்), உருத்திரேசம், இந்திராலயம் (கச்சிநெறிக் காரைக்காடு), நான்முக சங்கரம், திருமால்பேறு, திருவோத்தூர் தலங்களாகும். 
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 235):
கச்சபாலயம் ஏகம்பமே மயானம் கவின்கொள் காரோணம் மாகாளம்
பச்சிமாலயநல் அநேகபம் கடம்பை பணாதரம் மணீச்சரம் வராகம்
மெய்ச்சுரகரம் முன்னிராமம் வீரட்டம் வேதநூபுரம் உருத்திரர்கா
வச்சிரன்நகரம் பிரம மாற்பேறு மறைசையாம் சிவாலயம் இருபான்
-
(குறிப்பு: இவற்றுள் கடம்பர் கோயில் 'காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரிக்கு அடுத்தும்', பரசுராமேசம் 'காஞ்சீபுரம் அரக்கோணம் சாலையில் பள்ளூரிலும்', வராகேசம் 'காஞ்சிக்கு மேற்கேயுள்ள தாமலிலும்', நான்முக சங்கரம் 'காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையிலுள்ள பெருநகரத்திலும்', தேவாரத் தலமான திருமால்பேறு 'காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையிலுள்ள பள்ளூருக்கு மேற்கிலும்', தேவாரத் தலமான திருவோத்தூர் 'செய்யாற்றுக்கு அடுத்துள்ள திருவத்திபுரத்திலும்', தேவாரத் தலமான வேதநூபுரம் (திருமாகறல்) 'காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ  தொலைவிலும்', இந்திராலயம் என்பது தேவாரத் தலமான கச்சிநெறிக் காரைக்காட்டிலும் அமைந்துள்ளது. மற்ற 12 தலங்களும் சிவ காஞ்சியின் எல்லைக்குள்ளையே அமையப் பெற்றுள்ளன).