திருப்புகழில் சுந்தரர் (வெள்ளை யானையில் திருக்கயிலை சென்ற நிகழ்வு):

சுந்தரரின் அவதார நோக்கம் முடிவுறும் சமயத்தில் திருக்கயிலைப் பரம்பொருள் 'நம்பால் ஒருமையுற்ற சிந்தையுடைய ஆரூரனை (அயிராவணம் எனும்) வெள்ளை யானையில் ஏற்றுவித்து உடன் இங்கு அழைத்து வருவீர்' என்று நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்களுக்குக் கட்டளையிட்டு அருள் புரிகின்றார்.

தேவேந்திரன் உள்ளிட்ட எண்ணிறந்த தேவர்கள்; நான்முகக் கடவுளான பிரமன்; பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு ஆகியோர் சுந்தரனாரை எதிர்கொண்டழைக்க (அயிராவணத்துடன்) அஞ்சைக்களத்திற்குச் செல்கின்றனர். வழிபாடு முடித்துத் திருவாயிலினின்றும் வெளிவரும் வன்தொண்டரை எதிர்கொள்ளும் தேவர் குழாம், தம்பிரான் தோழரிடம் இறைவரின் ஆணையினைத் தெரிவித்துப் பணிகின்றனர். நாவலூர் வேந்தர் உளமுருகிக் கண்ணீர் பெருக்கி, செயலொன்றும் அறியாதவராய், அயிராவணத்தினை வலம் வந்து, சேரமான் பெருமாள் நாயனாரை உள்ளத்து எண்ணியவாறே அதன் மீது ஆரோகணித்து விண்மிசை பயணித்துச் செல்கின்றார். 

சுந்தரர் திருக்கயிலைக்கு சென்று கொண்டிருப்பதைத் திருவருட் குறிப்பினால் அறியப் பெறும் சேரமான் நாயனார், சுந்தரரின் பிரிவை தரிக்க மாட்டாதவராய், உடன்செல்லும் குறிப்புடன் தன்னுடைய புரவியின் செவியில் ஸ்ரீபஞ்சாக்ஷர மந்திரத்தினை ஓதுகின்றார். பலகாலும் பாராயணம் புரிந்து சித்தி பெற்றிருந்த திருஐந்தெழுத்தின் மேன்மையினால் அக்குதிரை மேலெழும்பி விண்ணில் விரைந்து, சுந்தரனாரின் வெள்ளை யானையை வலமாய்ச் சென்று பின்னர் முன்னாகப் பயணித்துச் செல்கின்றது.  

இரு அருளாளர்களுமாய்த் திருக்கயிலை நாதரைத் தரிசித்துப் பணிகையில் சேரமான் பெருமாள் நாயனார் 'திருக்கயிலாய ஞான உலா' எனும் பனுவலால் முக்கண் முதல்வரைப் போற்றிப் பரவுகின்றார். 

அருணகிரிப் பெருமான் மேற்குறித்துள்ள நிகழ்வுகளை, 'நாத விந்து கலாதி நமோ நம' என்று துவங்கும் பிரசித்தி பெற்ற திருஆவினன்குடித் திருப்புகழில் பதிவு செய்து போற்றுகின்றார்,

-
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
     சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
-
ஆதி அந்தஉலா ஆசுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.

திருப்புகழில் கண்ணன் (பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்):

திருவண்ணாமலையில் ஆறுமுகப் பெருங்கடவுள் 'முத்து முத்தாய்ப் பாடுவாய்' என்று அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிய, அருணகிரிப் பெருமான் 'முத்தைத் தரு' எனும் அற்புதத் திருப்புகழால் கந்தக் கடவுளைப் பணிந்தேத்துகின்றார். 

முதல் திருப்புகழான இத்திருப்பாடலிலேயே ஸ்ரீமன் நாராயணரின் தசாவதாரங்களுள் மூன்றினைப் பதிவு செய்து போற்றி மகிழ்கின்றார்;  ஸ்ரீராமாவதார நிகழ்வு ; கூர்மாவதார நிகழ்வு மற்றும் ஸ்ரீகிருஷ்ண லீலைகள். இவற்றுள் நம் கண்ணனைப் பற்றிய திருப்பாடல் வரிகளை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

மாபாரதக் கண்ணன், குருஷேத்திர யுத்தகளத்தில் தன் சுதர்சன சக்கரத்தால் சூரியனின் ஒளியை மறைத்து; ஜயத்ரதனை வெளிப்படச் செய்து; அர்ஜுனனால் அவன் மாளுமாறு செய்தருளிய லீலையை, ' பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக' என்று போற்றுகின்றார்.

பக்தனான பார்த்தனுக்கு எளிவந்து, மாபாரத யுத்த சமயத்தில் சாரதியாக விளங்கியருளிய நிகழ்வினை, 'பத்தற்(கு) இரதத்தைக் கடவிய' எனும் வரியில் போற்றுகின்றார்.

இறுதியாய் வைகுந்த வாசரைப் 'பச்சைப் புயல்' எனும் அற்புத அடைமொழியொன்றினால் சிறப்பித்துப் பின் 'அத்தகு சீர்மை பொருந்திய கண்ணன் மெச்சும் முதற்பொருளாகிய அறுமுக தெய்வமே' என்று சிவகுமரனைப் போற்றிப் பரவுகின்றார். 'பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்' என்பது நம் அருணகிரியாருக்கே உரித்தான தனித்துவமான; கவித்துவமான சொல்லாடலன்றோ (கிருஷ்ண கிருஷ்ண)!! 
-
பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...இரவாகப்
பத்தற்கிரதத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ...ஒருநாளே

திருப்புகழில் கண்ணன் (பால்ய பருவத்து லீலைகள்):

'மாயா சொரூப முழுச் சமத்திகள்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழில் அருணகிரிப் பெருமான் பின்வரும் கிருஷ்ண லீலைகளைப் பட்டியலிட்டுப் போற்றுகின்றார்,

ஸ்ரீகிருஷ்ணன், எவரொருவரும் காணாதவாறு, நண்பர்களும் உடனிருக்க, கோபிகைகளாகிய இடைச்சிமார்களின் இல்லத்திலுள்ள குடங்களினின்றும் பால்; நெய்; வெண்ணை; தயிர் ஆகியவற்றைத் திருடிக் குடித்துக் கொண்டிருக்கையில், யசோதையன்னையிடம் கையும் களவுமாக பிடிபட்டு விடுகின்றான். உடன் அவள் கோபம் கொள்பவள் போல், கண்ணனைச் சிறிது அடித்து; அங்குள்ள உரலொன்றில் பிணைத்துக் கட்டுகின்றாள். 14 உலகங்களையும் தன்னுடைய வாயினுள் முன்னர் வெளிப்படுத்திக் காட்டிய கண்ணனோ இச்சமயத்தில் தன் பிஞ்சுப் பொற்கரங்களால் இரு காதுகளையும் பற்றியவாறு, அன்னையிடம் அழுது மன்றாடி மன்னிப்பு வேண்டுகின்றான்.

அனுதினமும் காலை; மாலை இருவேளையும், ஆன்மாக்கள் யாவும் உய்வு பெறுமாறு; விவரிக்கவொண்ணா இனிய புல்லாங்குழல் நாதத்தை வெளிப்படுத்தியவாறே, எண்ணிறந்த பசுக்கூட்டங்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பின்னர் மீளவும் அழைத்து வருகின்றான்.

மேற்குறித்துள்ள கிருஷ்ண லீலைகளைச் சிறப்பித்துப் போற்றும் அருணகிரியார், இறுதியாய் 'இத்தகைய அரியபெரிய சிறப்புகள் பொருந்திய கண்ணனை மாமனாகக் கொண்டருள்பவனே' என்று வயலூரில் உறையும் ஆறுமுக தெய்வத்தைப் பணிந்தேத்துகின்றார்,  

காயாத பால்நெய் தயிர்க் குடத்தினை
     ஏயா எணாமல் எடுத்திடைச்சிகள்
          காணாதவாறு குடிக்கும் அப்பொழுதுரலோடே
-
கார்போலு மேனி தனைப் பிணித்தொரு
     போர் போல் அசோதை பிடித்தடித்திட
          காதோடு காது கையில் பிடித்தழுதினிதூதும்
-
வேயால் அநேக விதப் பசுத்திரள்
     சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்
          வீறான மாமன் எனப் படைத்தருள் ...வயலூரா

திருப்புகழில் கண்ணன் (காளிங்க நர்த்தனம்):

அருணகிரிப் பெருமான் கண்ணனின் காளிங்க நர்த்தன லீலையை எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில் மகிழ்ந்து போற்றியுள்ளார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
('மாந்தளிர்கள் போல' என்று துவங்கும் பூம்பறை தலத் திருப்புகழ்),
-
பாந்தள்முடி மீது தாந்ததிமி தோதி
     தாஞ்செகண சேசெ ...எனஓசை
-
பாங்குபெறு தாளம் ஏங்க நடமாடு
     பாண்டவர் சகாயன் ...மருகோனே

(2)
('தகர நறுமலர்' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
சக்கரம்; சங்கு; கதை; வாள்; வில் எனும் பஞ்ச ஆயுதங்களை உடையவனும், மேக நிறத்தவனும், காளிங்கனின் மீது 'திமித திமிதிமி' என்று திருநடமிடுபவனுமாகிய கண்ணனின் மருகோனே,
-
திகிரி வளைகதை வசிதநு உடையவன் 
     எழிலி வடிவினன் அரவுபொன் முடிமிசை
          திமித திமிதிமி எனநடமிடும்அரி ...மருகோனே

(3)
('தும்பி முகத்தானை' என்று துவங்கும் கும்பகோணத் திருப்புகழ்),
-
புல்லாங்குழலைத் தன் அடையாளமாகக் கொணடவனும், விஷ மடுவில் 'திந்தம்' எனும் தாள நயத்தோடு பொருந்தி ஆடுபவனும், பசுக்கூட்டங்களை மேய்த்து வருபவனுமாகிய கண்ணனின் மகளான வள்ளிதேவியிடம் காதல் கொண்டருளும் கும்பகோணப் பெருமாளே,
-
கொம்புகுறிக் காளமடுத் திந்தம் எனுற்றாடி நிரைக்
     கொண்டு வளைத்தே மகிழ்அச்சுத(ன்)ஈண
-
கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனில் தாவி மகிழ்க்
     கும்பகொணத்தாறுமுகப் ...பெருமாளே.

(4)
('மடலவிழ் சரோருகத்து' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
பரந்து விரிந்த மகுண்டங்களைக் கொண்ட, நாகரத்தினம் பொருந்திய படங்களை உடைய காளிங்கனின் மீது திருநடமிடும்; தாமரை மலர் போன்ற திருவடிகளைக் கொண்டருளும் கண்ணனின் மருகோனே,
-
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம
     சரணயுக மாயனுக்கு ...மருகோனே

(5)
('நற்குணமுளார் தமைப்பொல்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
'இரத்தினங்கள் பொருந்திய படங்களை உடைய காளிங்கனின் மீது திருநடம் புரிபவனான கண்ணனின் மகனான மன்மதனும் வியந்து போற்றும் பேரழகினைக் கொண்டருளும் சுப்ரமண்ய தெய்வமே'
-
ரத்தின பணா நிருத்தன் மெய்ச்சுதனு(ம்) நாடு மிக்க
     லக்ஷண குமார சுப்ரமணியோனே

(6)
('பகர நினைவொரு' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
சக்கரத்தை ஏந்தியவனும், மரகதமலை போன்றவனும், நெருப்பினை உமிழும் காளிங்கனின் மீது திருநடமிடுபவனுமாகிய கண்ணனின் மருகோனே,
-
     திகிரிதர மரகதகிரி எரியுமிழ்
          உரக சுடிகையில் நடநவில் அரிதிரு ...மருகோனே

திருப்புகழில் கண்ணன் (கோவர்த்தன லீலை):

'மூவுலங்களுக்கும் தானே அதிபதி' என்று இந்திரன் கர்வம் கொண்டிருப்பதை அறியும் ஸ்ரீகிருஷ்ணன் அவனுடைய அறியாமையைப் போக்கியருளத் திருவுள்ளம் பற்றுகின்றான். கோகுலத்தில் ஆண்டுதோறும் நடந்தேறி வரும் இந்திரனுக்கான யாக வழிபாடுகளை இனி மலையரசனான பர்வத ராஜனுக்கே புரிவோமென்று ஆலோசனை கூறுகின்றான். கோகுலத்தில் தான் கண்ணனின் வாக்கிற்கு மறுமொழியே கிடையாதே, அனைவரும் அவ்விதமே மலையரசனைக் குறித்து வேள்வி செய்ய முனைகின்றனர்.

இதனைக் கண்டு சினம் கொள்ளும் இந்திரன், சூறாவளிக் காற்றோடு கூடிய பெருமழை உண்டாகுமாறு செய்ய, கோகுலவாசிகள் அனைவரும் கண்ணனிடம் சென்று தஞ்சமடைகின்றனர். கண்ணன் புன்முறுவலுடன் கோவர்த்தன மலையைத் தன் திருவிரலினால் குடைபோலத் தாங்கி, 'இனி நீங்கள் அனைவரும் எவ்விதக் கவலையுமின்றி உங்கள் பணிகளைச் செய்து கொண்டிருங்கள்' என்று அபயமளித்து அருள் புரிகின்றான். 

ஒருநாள் அல்ல; இருநாள் அல்ல; தொடர்ந்து ஏழு நாட்கள் காற்றோடு கூடிய பெருமழை நீடிக்கின்றது. இந்திரன், கோகுல வாசிகளுக்கு எவ்விதத் தீங்கும் நேராதது கண்டு நாணமுற்றுத் தன் முயற்சியைக் கைவிடுகின்றான்; கண்ணனின் திருவடிகளில் பிழைபொறுக்குமாறு வேண்டித் தொழுது, கோவிந்த பட்டாபிஷேகமும் செய்து மகிழ்கின்றான். 

கோபால கிருஷ்ணனின் இவ்வற்புத லீலையை நம் அருணகிரிப் பெருமான் பல்வேறு திருப்பாடல்களில் மகிழ்ந்து போற்றுகின்றார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
('சந்தனம் பரிமள' என்று துவங்கும் சீகாழித் திருப்புகழ்),
-
மந்தரம்குடை எனநிரை  உறுதுயர்
     சிந்த அன்றடர் மழைதனில் உதவிய
          மஞ்செனும்படி வடிவுறும் அரிபுகழ் ...மருகோனே

(2)
'பொன்றா மன்றாக்கும் புதல்வரும்' என்று துவங்கும் திருவாலங்காட்டுத் திருப்புகழ்),
-
குன்றால்விண் தாழ்க்கும் குடைகொடு
     கன்றாமுன் காத்தும் குவலயம் 
          உண்டார் கொண்டாட்டம் பெருகிய ...மருகோனே

(3)
('தகர நறுமலர்' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)
-
சிகர குடையினில் நிரைவர இசைதெரி
     சதுரன் விதுரனில் வருபவன் அளையது
          திருடி அடிபடு சிறியவ(ன்) நெடியவன் ...மதுசூதன்

(4)
('இரவியென வடவையென' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
நிரைபரவி வரவரையுள் ஓர்சீத மருதினொடு
     பொருசகடு உதையது செய்(து)ஆமாய மழைசொரிதல்
          நிலைகுலைய மலை குடையதாவே கொள் கரகமலன் ...மருகோனே


திருப்புகழில் கண்ணன் (மருத மரங்களை முறித்த நிகழ்வு):

குபேரனின் புதல்வர்களான நளகூபரன்; மணிக்கிரீவன் ஆகியோர் நாரத முனிவரின் சாபமொன்றினால் மருத மரங்களாய் நின்றிருக்க, உரலோடு கயிற்றினால் பிணைக்கப் பெற்றிருந்த கோகுலக் கண்ணன்; அவ்விரு மரங்களும் வேரோடு முறிந்து விழுமாறு அவைகளுக்கிடையே தவழ்ந்து சென்றருள, சாப விமோசனம் பெறும் குபேரனின் புத்திரர்கள் கண்ணனின் திருவடிகளைப் பணிந்து போற்றுகின்றனர். 

அருணகிரிப் பெருமான் கண்ணனின் இவ்வற்புத லீலையை எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1):
('மருமலரினன் துரந்து' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
அருணகிரியார் இத்திருப்பாடலில் கண்ணனை 'பரமபத நண்பர்' எனும் இனிமையான அடைமொழியளித்துப் போற்றுகின்றார்,
-
பரிவொடு மகிழ்ந்திறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
     பரமபத நண்பர் அன்பின் ...மருகோனே

(2)
('குருதி கிருமிகள்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்),
-
மருது நெறுநெறு நெறுவென முறிபட
     உருளும் உரலொடு தவழ்அரி மருகசெ
          வனச மலர்சுனை புலிநுழை முழையுடைய விராலி

(3)
('குருவும் அடியவர்' என்று துவங்கும் நெருவூர் திருப்புகழ்)
-
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனும் 
     மருது நெறிபட முறைபட வரைதனில்
          உரலினொடுதவழ் விரகுள இளமையு(ம்) ...மிகமாரி

(4)
('பொருத கயல்விழி' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
மருது பொடிபட உதைத்திட்டாய்ச் செரி
     மகளிர் உறிகளை உடைத்துப் போட்டவர்
          மறுக ஒருகயிறடித்திட்டார்ப்புற ...அழுதூறும்

திருப்புகழில் கண்ணன் (வஸ்திர அபகரண லீலை):

பிருந்தாவனப் பகுதியிலுள்ள தடாகமொன்றில் கோபிகைகள் நீராடச் செல்கின்றனர், தத்தமது ஆடைகளைக் கரையிலேயே பத்திரப்படுத்தி விட்டுப் பின்னர் ஆற்றில் மகிழ்வுடன் நீராடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது கண்ணனுக்கு 5 வயது, கோபிகைகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தான் எழுந்தருளியுள்ள தன்மையினை உணர்த்தவும், யாவற்றிலும் தன்னையே காணும்; பேதமற்ற பரிபக்குவ நிலையை அவர்களுக்கு அளித்தருளவும் கண்ணன் திருவுள்ளம் பற்றுகின்றான். கரையிலிருந்த அவர்களின் உடைகளைக் கவர்ந்து கொண்டு அங்குள்ள குருந்த மரமொன்றில் ஏறிச் சென்று, வேங்குழலில் நாதமிசைக்கத் துவங்குகின்றான். 

கண்ணனின் இவ்வற்புத லீலையை அருணகிரிப் பெருமான் பல்வேறு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
('வஞ்சனை மிஞ்சிய' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
கஞ்சன்விடும் சகடாசுரன் பட
     வென்று குருந்தினிலேறி மங்கையர்
          கண்கள் சிவந்திடவே கலந்தரு ...முறையாலே
-
கண்டு மகிழ்ந்தழகாய் இருந்திசை
     கொண்டு விளங்கிய நாளில் அன்பொடு
          கண்குளிரும் திருமால் மகிழ்ந்தருள் ...மருகோனே

(2)
('செழுந்தாது' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு
     குருந்தேறு மால் மாயன் மருகோனே

(3)
('இருந்த வீடும் கொஞ்சிய' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
குருந்திலேறும் கொண்டலின் வடிவினன் ...மருகோனே

(4)
('எங்கேனும் ஓருவர் வர' என்று துவங்கும் தென்சேரிகிரித் திருப்புகழ்),
-
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
     தம்கூறை கொடுமரமில் அதுஏறும்