கந்தபுராணத்தில் முசுகுந்தச் சக்கரவர்த்தி (அறிந்த செய்திகளும், அறியாத நிகழ்வுகளும்):

கருவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில், நந்திதேவரின் திருமேனிக்கு இடதுபுறம் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் இத்திருமேனியைத் தரிசித்து மகிழலாம். 

(1) திருக்கயிலைச் சோலையிலுள்ள வில்வ மரத்தில் அமர்ந்திருந்த குரங்கொன்று, அதன் கீழ் அம்பிகையோடு எழுந்தருளியிருந்த சிவபரம்பொருளின் மீது வில்வ இலைகளை விளையாட்டாய்ப் பறித்துப் போட, அச்சிவபுண்ணியப் பலனால் மெய்யறிவு பெற்று, மண்ணுலகில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுக்கின்றது. 

(2) இந்த முசுகுந்த மன்னரே இந்திரனால் பூசிக்கப் பெற்று வந்த ஆதி சோமாஸ்கந்த தியாகராஜ மூர்த்தியைத் திருவாரூரிலும், மற்ற 6 பிரதி தியாகராஜ மூர்த்தங்களைத் திருவாரூரைச் சுற்றிலுமுள்ள திருநள்ளாறு; திருக்கோளிலி; திருநாகைக்காரோணம்; திருக்காறாயில்; திருமறைக்காடு; திருவாய்மூர் ஆகிய 6 தலங்களிலும்  பிரதிஷ்டை செய்வித்த புண்ணிய சீலர் (இவ்வேழு பதிகளும் சப்த விடங்கத் தலங்கள் என்று இன்றளவும் போற்றப் பெற்று வருகின்றன). 

3. முசுகுந்த சக்கரவர்த்தி எண்ணிலடங்கா யுகங்களுக்கு முற்பட்ட கந்தபுராண காலத்தவர். கரூரில் இருந்த வண்ணமே இவர் தன்னுடைய ஆட்சி பரிபாலனத்தினை மேற்கொண்டு வந்துள்ளார். கந்தக் கடவுளுக்கும் தெய்வயானை அம்மைக்கும் நடந்தேறிய திருமண வைபவத்திற்கு இந்திரன் வாயிலாக முசுகுந்த மன்னருக்கு அழைப்பு சென்றதையும், முசுகுந்தர் கரூரிலுள்ள தன்னுடைய குடிமக்கள் அனைவருடனும் திருப்பரங்குன்றம் சென்று கந்தவேளின் திருமண நிகழ்வினைத் தரிசித்த நிகழ்வையையும் 'தெய்வயானை அம்மை திருமணப் படலத்தில்' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். 

4. ஒரு சமயம் கடும் நோன்பிருந்து ஆறுமுகக் கடவுளின் தரிசனம் பெறும் முசுகுந்த மன்னர் 'ஐயனே இம்மண்ணுலகினை ஒருகுடையின் கீழ் பரிபாலனம் புரிந்து வர உங்கள் நவ வீரர்களையும் அடியேனுக்குப் படைத்துணையாய் அளித்தருள வேண்டும்' என்று திருவடி தொழுது வேண்ட, முருகப் பெருமானும் அவ்வரத்தினை அளித்தருள் புரிகின்றார். 

எனினும் வீரவாகு உள்ளிட்ட நவவீரர்களும் 'நந்தி கணத்தவரான நாங்கள் இம்மண்ணுலக மன்னனுக்குப் படைத்துணையாய்ச் செல்வதோ?' என்று கந்தவேளிடமே மறுத்துரைக்கின்றனர். 'இறை வாக்கினை மீறிய குற்றத்தினால் அவ்வீரர்கள் மானுடப் பிறப்பெடுத்து, முசுகுந்த மன்னனுக்குப் படைத்துணையாய் விளங்கிப் பின்னர் பன்னெடுங்கால தவத்தினால் மீண்டும் ஆறுமுகக் கடவுளுக்கு அணுக்கத் தொண்டு புரியும் பேற்றினைப் பெறுகின்றனர்' என்று 'கந்தவிரதப் படலத்தில்' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார்.

திருப்புகழில் சுந்தரர் (ஓலை காட்டி ஆட்கொண்ட நிகழ்வு):

நம்பியாரூரரின் திருமண வைபவம் நடந்தேறி வரும் மண்டபத்திற்கு சிவபரம்பொருள் கிழ வேதியராய் எழுந்தருளி வந்து, அனைவரும் காணுமாறு உரத்த குரலில் 'இச்சுந்தரன் எனக்கு அடிமை' என்று அறிவிக்கின்றார். சுந்தரனார் அவ்வுரை கேட்டு வெகுண்டெழுந்து; விரைந்து சென்று இறைவரின் திருக்கரங்களிலிருந்த ஓலையினைப் பற்றிக் கிழிக்கின்றார். 

நால்வேதங்களும் முறையிட்டு இத்தன்மையினர் என்றறியவொண்ணா ஆதிப் பரம்பொருளான சிவபெருமான் வழியடிமைத் தொண்டரான சுந்தரனாரின் கரங்களைப் பற்றிக் கொண்டு 'இது முறையோ என்று முறையிடுகின்றார்'. இதனைப் பின்வரும் அற்புதத் திருப்பாடலில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 192)
அருமறை முறையிட்(டு) இன்னும் அறிவதற்கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா நெறிகொண்டு பிணங்குகின்ற
திருமறை முனிவரே நீர் எங்குளீர் செப்பும்என்றார்

மேற்குறித்துள்ள அற்புத நிகழ்வினை நம் அருணகிரிப் பெருமான் 'இருளளகம் அவிழமதி' என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழில் பதிவு செய்து போற்றுகின்றார்,
-
ஒருசிறுவன் மணமதுசெய் போதில்எய்த்து வந்து
     கிழவடிவு கொடுமுடுகி வாசலில் புகுந்து
          உலகறிய இவன்அடிமையாம் எனக் கொணர்ந்து ...சபையூடே
-
ஒருபழைய சருகுமடி ஆவணத்தை அன்று
     உரமொடவனது வலியவே கிழிக்க நின்று
          உதறி முறையிடு பழைய வேத வித்தர் தந்த ...சிறியோனே

'மாதர் கொங்கையில்' எனும் உத்திரமேரூர் திருப்புகழில், முக்கண் முதல்வர் சுந்தரனாரை ஆவணம் காட்டி ஆட்கொண்டருளிய நிகழ்வினைப் போற்றுகின்றார். 
-
சாதனம்கொடு தத்தா !மெத்தென
     வே நடந்துபொய் பித்தா உத்தரம்
          ஏதெனும்படி தற்காய் நிற்பவர் ...சபையூடே
-
தாழ்வில் சுந்தரனைத் தானொற்றி கொள்
     நீதி தந்திர நற்சார்புற்றருள்
          சால நின்று சமர்த்தா வெற்றிகொள் ...அரன்வாழ்வே
*
'தந்தமும் துன்பவெஞ் சிந்தை' என்று துவங்கும் மற்றுமொரு பொதுத் திருப்புகழில், 'சுந்தரனாரின் உலகியல் பந்தத்தை முடிவிக்கப் பரிவுடன் தோன்றி 'இவன் எனது அடிமை' என்றருளிச் செய்து, வன்தொண்டரை அருளியல் வாழ்விற்குப் புகுமாறு செய்தருளிய ஆதிப்பரம்பொருள்' என்று போற்றிப் பரவுகின்றார் நம் அருணகிரியார்,
-
சுந்தரன் பந்தமும் சிந்த வந்தன்புடன்
     தொண்டன் என்றன்று கொண்டிடும் ஆதி

திருப்புகழில் சுந்தரர் (சிவபெருமான் தூது):

சுந்தரர் மீது பரவையார் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தருள, தனிப்பெரும் தெய்வமான சிவபெருமான் திருவாரூர் திருவீதிகளில்; நள்ளிரவு வேளையில்; திருப்பாதங்கள் தோய இருமுறை நடந்து, பரவையாரின் இல்லத்திற்குத் தூதாகச் சென்ற அற்புத நிகழ்வினைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்து போற்றுகின்றார்.

நம் அருணகிரிப் பெருமானும் இவ்வரிய நிகழ்வினைப் பின்வரும் 5 திருப்புகழ் திருப்பாடல்களில் போற்றிப் பரவி மகிழ்கின்றார், 

(1)
'கருவின் உருவாகி' என்று துவங்கும் பழனித் திருப்புகழில்
பரவைமனை மீதில்அன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமன்அருளால் வளர்ந்த ...குமரேசா

(2)
'கொந்தள ஓலை குலுங்கிட' என்று துவங்கும் இலஞ்சித் திருப்புகழில்,
சுந்தரர் பாடல் உகந்திரு தாளைக்
     கொண்டு நல்தூது நடந்தவர் ஆகத்
          தொந்தமொடாடி இருந்தவள் ஞானச் ...... சிவகாமி

(3)
'கத்தூரி அகரு ம்ருகமத' என்று துவங்கும் பட்டாலியூர் திருப்புகழில், 

அச்சோ எனவச உவகையிலுட் சோர்தலுடைய !பரவையொ
     டக்காகி விரக பரிபவம் ...அறவே பார்
-
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருதரு
     பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா 

(4)
'பாசத்தால் விலை கட்டிய' என்று துவங்கும் பழமுதிர்சோலை திருப்புகழில்,

'தேடிப் பாடிய சொற் புலவர்க்(கு) இதமாகத் தூது செல் அத்தர்'

(5)
'பரவைக்கு எத்தனை' என்று துவங்கும் பொதுத் திருப்புகழில், 

பரவைக்கெத்தனை ...விசைதூது
   பகரற்குற்றவர் ...என மாணுன்
      மரபுக் குச்சித ...ப்ரபுவாக
         வர மெத்தத் தர ...வருவாயே

திருப்புகழில் சுந்தரர் (நெல்மலை பெற்ற நிகழ்வு):

'குண்டையூர் கிழார்' என்பார் சுந்தரரின் மீது அதீத அன்பும் பக்தியும் பூண்டொழுகி வரும் பண்பினர். வன்தொண்டருக்கு நாள்தோறும் திருவமுது அமைத்தல் பொருட்டு, செந்நெல்; பருப்பு வகைகள்; சர்க்கரை முதலியவைகளை பரவையாரின் திருமாளிகைக்கு அனுப்புவிக்கும் திருத்தொண்டினை இடையறாது புரிந்து வருகின்றார்.  

ஒரு சமயம் மழையின்மையால் போதுமான உணவுப் பொருட்களை அனுப்ப இயலாது போகின்றது. திருத்தொண்டு தடையுற்றதால் பெரிதும் வருந்தும் கிழாருக்கு, சுந்தரரின் பொருட்டு சிவபரம்பொருள் நெல்மலைகளை அளித்தருள் புரிகின்றார். பின்னர் சுந்தரரின் வேண்டுதலுக்கு இரங்கி, (சிவபூத கணங்களின் வாயிலாக) அந்நெல்மலைகளைக் குண்டையூரினின்றும் எடுத்துத் திருவாரூர் வீதிகளெங்கும் நிறைந்து விளங்குமாறு செய்தருள் புரிகின்றார். 

அருணகிரிப் பெருமான் 'நெற்றி வியர்த்துளி' என்று துவங்கும் பழனித் திருப்புகழில் இவ்வற்புத நிகழ்வினைப் போற்றிப் பரவுகின்றார், 
-
கற்ற தமிழ்ப் புலவனுக்குமே !மகிழ்
     வுற்றொரு பொற்கொடி களிக்கவே பொரு
          கற்பனை நெற்பல அளித்த காரணன் ...அருள்பாலா

திருப்புகழில் சுந்தரர் (முதலை வாய்ப் பிள்ளை நிகழ்வு):

சுந்தரர், சேரமான் நாயனாரின் கொடுங்களூர் பகுதிக்கு 2ஆம் முறையாய்ப் பயணம் மேற்கொள்கின்றார். திருப்புக்கொளியூர் எனும் அவிநாசித் தல எல்லையை நெருங்குகையில், அருகருகாய் அமைந்திருந்த இரு இல்லங்களில்; ஒன்றில் மங்கல ஒலியும் மற்றொன்றில் அழுகுரலும் ஒரே சமயத்தில் கேட்க நேரிட, அதுகுறித்து அங்குள்ளோரிடம் வினவுகின்றார். 

'அவ்வீடுகளில் வாழ்ந்திருந்த; 5 வயது நிரம்பிய இரு பாலகர்கள் முன்பொரு சமயம் மடுவினில் விளையாடியிருந்த சமயத்தில் ஒரு பிள்ளையை முதலையொன்று விழுங்கி விட, தப்பிப் பிழைத்த மற்றொரு பாலகனுக்கு அன்றைய தினம் உபநயன விழா நிகழ்ந்தேறி வருகின்றது. மாண்ட பிள்ளையைப் பெற்றவர் தங்களது புதல்வனும் பிழைத்திருந்தால் இது போன்றதொரு விழாவினைச் செய்திருக்கலாமே என்றெண்ணி அழுத வண்ணமிருக்கின்றனர்' என்றறிகின்றார்.

மாண்ட பிள்ளையின் பெற்றோர் சுந்தரனாரின் வருகையைக் கண்டு, தங்கள் கவலைகளை முற்றிலும் மறந்தவர்களாய், 'சுவாமி, உங்களைப் பலகாலும் தரிசித்து வணங்க பெருவிருப்பம் கொண்டிருந்தோம். எங்கள் அன்பு பொய்க்கவில்லை, நீங்கள் இவ்விடத்து எழுந்தருளும் பெறற்கரிய பேற்றினை இன்று பெற்றோம்' என்று  சுந்தரரின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றனர். 

சுந்தரர், 'மைந்தனை இழந்த துன்பமும் மறந்து நாம் வரப்பெற்றமைக்கு இவ்விதம் மகிழ்கின்றனரே, சிவனடியார்கள் மீது இத்தூய உள்ளத்தினருக்கு எத்துனை ஈடுபாடு' என்று நெகிழ்ந்து, அனைவருடனும் முன்னர் மடுஇருந்த இடத்திற்குச் செல்கின்றார். வறண்ட நிலையில் காணப்பெறும் அவ்விடத்தில் 'எற்றான் மறக்கேன் எழுமைக்கும்' எனும் பனுவலால் அவிநாசியுறைப் பரம்பொருளிடம் பிள்ளைக்காக விண்ணப்பிக்கின்றார்.

'கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே' எனும் 4ஆம் திருப்பாடலைப் பாடிய கணத்திலேயே, அவிநாசி இறைவரின் ஏவலால், கூற்றுவன் வறண்டிருந்த அம்மடுவை நீரினால் நிறைத்து, முதலையை உயிர்ப்பித்துப் பின் அதன் வாயினின்று, உயிர்ப்பிக்கப் பெற்ற மாண்ட பாலகனை, கடந்த ஆண்டுகளின் வளர்ச்சியோடும் கூடிய நிலையில் உமிழுமாறு செய்கின்றான். பிள்ளையின் பெற்றோர் பிள்ளையை ஓடிச்சென்று வாரியணைத்து, நன்றிப் பெருக்குடன் சுந்தரரின் திருவடிகளில் வீழ்ந்து பணிகின்றனர். 

அருணகிரிப் பெருமான் மேற்குறித்துள்ள அற்புத வரலாற்று நிகழ்வினை இரு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார்,

(1)
'மதப்பட்ட விசாலம்' என்று துவங்கும் அவிநாசித் திருப்புகழில், 

-
செறிப்பித்த கராஅதின் வாய்!மக
     வழைப்பித்த புராண க்ருபாகர
          திருப்புக்கொளியூர் உடையார் புகழ் ...தம்பிரானே
(சொற்பொருள்: கரா - முதலை)

(2)
'அழகு தவழ் குழல்' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழில், 

-
முடுகு முதலையை வரித்துக் கோட்டி
     அடியர் தொழ மகவழைத்துக் கூட்டி
          முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...முதுநீதர்

திருப்புகழில் சுந்தரர் (பொன் பெற்ற நிகழ்வு):

பரவையார் 'அடியவர் பெருமக்களுக்கு வேண்டுவன அளித்து மகிழ்தலாகிய திருத்தொண்டினைப் புரிந்து வரும் பண்பினர்' என்பதையும், 'பரவையார் திருமாளிகையில் பெரும்பாலான சமயங்களில் அடியவர்களோடு சேர்ந்தே நம் சுந்தரனார் திருவமுது செய்துள்ளார்' எனும் குறிப்பையும் பெரிய புராணத்தின் பல்வேறு பகுதிகள் வாயிலாக நாம் அறியப் பெறலாம். ஆதலின் 'தம்பிரான் தோழர் பரவையாருடைய திருத்தொண்டிற்காகவே சிவபரம்பொருளிடம் பொன் வேண்டிப் பெற்றுள்ளார்' என்பது தெளிவு. 
இவ்விதமாய் வன்தொண்டர் 4 திருத்தலங்களில் சிவமூர்த்தியிடம் பொன் பெற்று மகிழ்ந்துள்ளார், அவை திருப்புகலூர்; திருமுதுகுன்றம்; திருப்பாச்சிலாச்சிரமம்; திருஓணகாந்தன்தளி. 
திருமுருகன்பூண்டியில் சுந்தரர் பொன் வேண்டி விண்ணப்பிக்கவில்லை, சேரமான் நாயனார் தமக்களித்திருந்த பொற்குவியலை வேடர்கள் பறித்துச் சென்று விட, அது குறித்து முறையிட்டுத் திருவருளால் மீண்டும் அவைகளைப் பெற்று மகிழ்கின்றார். விண்ணப்பம் இல்லாமையால் பொன் பெற்ற திருத்தலமாக இது குறிக்கப் பெறுவதில்லை. 
இறுதியாய்த் திருநாகைக்காரோணத்தில், முத்தாரம்; மாணிக்க வயிர மாலைகள்; கத்தூரிச் சாந்து; பட்டாடை;  பொற்கட்டிகள்; நறுமணப் பொருட்கள்; திருவாரூர் செல்வத்தில் மூன்றிலொரு பங்கு; குதிரை; பொன்னாலான உடைவாள்; பொற்றாமரைப் பூ, பட்டுக் கச்சம்; காய்கறிகளோடு கூடிய சுவையான நெய்யுணவு; முத்து மாலைகள் முதலிய எண்ணிறந்த செல்வங்களை விண்ணப்பித்துப் பாடுவதால், பொன் மட்டுமே பெற்ற திருத்தல வரிசையில் இத்தலமும் பொதுவில் குறிக்கப் பெறுவதில்லை.

அருணகிரிப் பெருமான் 'சுந்தரனார் பரவையாரின் பொருட்டு பொன் வேண்டிப் பெற்றுள்ள நிகழ்வுகளை' 'மதப்பட்ட விலாசம்' என்று துவங்கும் அவிநாசித் திருப்புகழில் நயம்பட பதிவு செய்து போற்றுகின்றார், 
-
இதப்பட்டிடவே கமலாலய
     ஒருத்திக்கிசைவான பொனாயிரம் 
          இயற்றப்பதி தோறும் உலாவிய ...தொண்டர்

திருப்புகழில் சுந்தரர் ( வழித்துணையாய் வந்த அவிநாசி இறைவர்):

பெரியபுராணத்தில் நம் சுந்தரனாருக்கு இறைவர் வழித்துணையாக வந்ததாக ஒரேயொரு நிகழ்வினை மட்டுமே தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். 
-
முதலில் அந்நிகழ்வினைச் சற்று நினைவு கூர்வோம்,
-
சுந்தரர் முதுகுன்றத் தலத்திற்குப் பயணித்துச் செல்லும் வழியில் கூடலையாற்றூர் தலத்தின் எல்லையை நெருங்குகின்றார். எனினும் அவ்வூருக்குள் செல்லாமல் மேலும் முதுகுன்றம் நோக்கி முன்னேறிச் செல்ல முனைகின்றார். ஆற்றூருறைப் பரம்பொருள் வேதியரொருவரின் வடிவெடுத்து, சுந்தரர் காணுமாறு அவ்வழியே எழுந்தருளி வருகின்றார். சுந்தரர் மறையவரை வணங்கி முதுகுன்றம் செல்லும் மார்க்கத்தினை வினவ, இறைவரோ 'கூடலையாற்றூருக்குச் செல்லும் வழி இதுவே' என்று மற்றொரு மார்க்கத்தினைக் காண்பித்துப் பின் அவ்வழியில் தாமே வழித்துணையாய்ச் சிறிது தூரம் வரையிலும் வந்து பின்னர் மறைகின்றார். 

எனினும் அருணகிரிப் பெருமான்  'மதப்பட்ட விலாசம்' என்று துவங்கும் அவிநாசித் திருப்புகழில் பெரியபுராணத்தில் இடம்பெறாத, சுந்தரர் வரலாறு குறித்த மற்றுமொரு அற்புத நிகழ்வினை வெளிப்படுத்துகின்றார். இனி நிகழ்விற்குள் செல்வோம், 
-
சுந்தரர் அவிநாசித் தலம் நோக்கிப் பயணித்து வருகையில் ஓரிடத்தில் திசையறியாது திகைத்ததாகவும், அத்தருணத்தில் இறைவர் வழித்துணையாய்ச் சிறிது தூரம் வரையிலும் வந்து சகாயம் புரிந்து பின்னர் மறைந்ததாகவும் பதிவு செய்கின்றார். 
-
கீழ்க்குறித்துள்ள முதல் 4 வரிகளில், சுந்தரருக்கு இறைவர் திருக்குருகாவூர் தலத்தருகே பொதிசோறு அளித்தருளிய நிகழ்வினைப் பதிவு செய்துப் பின் இறுதி இரு வரிகளில், 'அவிநாசியிலே வரு திசைக்குற்ற சகாயனுமாகி மறைந்து போமுன்' என்று அவிநாசி மார்க்கத்தில் இறைவர் வழித்துணையாய் வந்தமையைப் பதிவு செய்கின்றார், 
-
இசைக்கொக்க இராசத பாவனை
     உளப் பெற்றொடு பாடிட வேடையில் 
          இளைப்புக்கிட வார்மறையோன் என வந்துகானில் 
-
திதப்பட்டெதிரே பொதி சோறினை
     அவிழ்த்திட்(டு) அவிநாசியிலே வரு
          திசைக்குற்ற சகாயனுமாகி மறைந்து போமுன்

'அவிநாசி' என்ற தலப் பெயரைக் அருணகிரியார் குறித்திராவிடில் 'திசைக்குற்ற சகாயனுமாகி மறைந்து போமுன்' எனும் வரிகளை கூடலையாற்றூர் நிகழ்வுடன் எளிதில் பொருத்தியிருக்கலாம். எனினும் இவ்விடத்தில் திருப்புகழ் ஆசிரியர் 'அவிநாசியிலே வரு' என்று ஐயத்திற்கு இடமின்றிக் குறித்திருப்பதால் இதற்குப் பிறிதொரு பொருள் கொள்ள இடமில்லை.

சுந்தரர் இருமுறை கேரள தேசத்திற்கு அவிநாசி வழியே பயணித்துச் சென்றுள்ளதாகப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. முதல் பயணத்தில் சேரமான் பெருமாள் நாயனார் மற்றும் அவர்தம் படையினரும் உடனிருந்தமையால் அச்சமயத்தில் திசையறியாத நிலை உருவாகியிருக்க வாய்ப்பில்லை. சுந்தரனார் 2ஆம் முறையாக சேரமான் நாயனாரின் கொடுங்களூருக்குப் பயணிக்கையில், உடன் சில பரிசனங்களையும் திருவாரூரிலிருந்து அழைத்துச் சென்றதாகச் சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார். ஆதலின் 'அச்சமயத்திலேயே இறைவர் வழித்துணையாய் வந்தருள் புரிந்துள்ளார்' என்பது தெளிவு.  

தெய்வச் சேக்கிழாரின் அவதாரக் காலத்திலிருந்து சுமார் 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றியுள்ள நம் அருணகிரிப் பெருமானின் வாயிலாக, சுந்தரர் குறித்த இக்குறிப்பு வெளிப்பட்டிருப்பது வியந்து போற்றுதற்குரியது.