திருப்புகழில் கண்ணன் ('க்ருஷ்ண' எனும் திருநாமம்):

அருணகிரிப் பெருமான் எண்ணிறந்த திருப்பாடல்களில் கிருஷ்ண லீலைகளைப் பதிவு செய்து போற்றியுள்ளார், நிகழ்வுகள் கண்ணன் தொடர்புடையதாக இருப்பினும் அதனை ஸ்ரீமன் நாராயணரின் திருநாமங்களில் ஏதேனுமொன்றினைக் குறிப்பிட்டு நிறைவு செய்யும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார் (சில உதாரணங்கள்: 'மால் மருகா; அரி மருகா; மாயோன் மருகா'). அச்சுதன்; கோபாலன்; கேசவன் என்று கண்ணனின் திருநாமங்களை நேரடியாகவே குறித்துள்ள திருப்பாடல்களும் உண்டு, கண்ணனின் லீலைகளில் துவங்கி 'அபிராமா' என்று இராம திருநாமத்தால் நிறைவுறும் பனுவல்களும் உண்டு. பரந்தாமனின் அவதாரங்களுக்குள் பேதமின்மையை வெளிக்கொணர்வதே அருணகிரியாரின் நோக்கமாக இருந்திருக்கக் கூடும். 

இருப்பினும் 'க்ருஷ்ண' எனும் திருநாமம் முழுமையாய் இடம்பெறுவது 'நடையுடையிலே' என்று துவங்கும் பின்வரும் பொதுத் திருப்புகழில் மட்டுமே - என்பதொரு இனிமையான குறிப்பு (தாள நயத்துக்காக 'கோபால க்ருஷ்ணன்' என்பதனை கொபால க்ருஷ்ணன் என்று குறிக்கின்றார்), 

-
இடையர்மனை தோறுநித்தம் உறிதயிர்நெய் பால்குடிக்க
     இருகையுறவே பிடித்து ...உரலோடே
-
இறுகிட அசோதைகட்ட அழுதிடு கொபால க்ருஷ்ணன் 
     இயல்மருகனே குறத்தி ...மணவாளா

மற்றுமொரு சுவையான குறிப்பு, 'பசையற்ற உடல்வற்ற' என்று துவங்கும் விருத்தாசலத் திருப்புகழில், தாள நயத்துக்காக 'கிருஷ்ணன்' எனும் திருநாமத்தை நம் அருணகிரியார் 'கிட்ணன்' என்று குறிக்கின்றார், 
-
வசையற்று முடிவற்று வளர்பற்றின் அளவற்ற
     வடிவுற்ற முகில்கிட்ணன் ...மருகோனே

திருப்புகழில் கண்ணன் (சகடாசுர வதம்):

அன்று கண்ணனுக்கு ஜென்ம நட்சத்திர தினம் (அதாவது ஆவணி ரோகினித் திருநாள்), கோகுலமே விழாக் கோலம் பூண்டிருந்தது. நந்தகோபரும்; யசோதையும் வேதியர்களை அழைத்து ஹோம காரியங்களைச் செய்வித்து, அவர்களைக் கொண்டு கண்ணனை ஆசிர்வதிக்கச் செய்கின்றனர். குழந்தைக் கண்ணனை நன்கு அலங்கரித்து நந்தவனத்தில் தொட்டிலிட்டு மகிழ்கின்றனர். அங்குள்ள சிறுவர்; சிறுமியர் யாவரும் தொட்டிலைச் சுற்றி நின்றவாறு; பற்பல விளையாட்டுகளால் கண்ணனை மகிழ்வித்துத் தாங்களும் பெருமகிழ்வு கொள்கின்றனர். 

அப்பொழுது கம்சனால் (கண்ணனைக் கொன்றுவரும் பொருட்டு) அனுப்பப்பட்டிருந்த சகடாசுரன் வண்டியொன்றின் வடிவெடுத்து, சக்கரங்கள் வேகமாகச் சுழலக் கண்ணனின் தொட்டிலை நோக்கி வருகின்றான். உடனிருந்த சிறுவர் யாவரும் பதறியவாறு அங்குமிங்குமாய் ஓடுகின்றனர், கண்ணனுக்கு என்ன நேருமோ என்று தவித்துப் பதறுகின்றனர். பால கிருஷ்ணனோ புன்முறுவலுடன் ஒரு திருவடியைத் தொட்டிலில் ஊன்றி மற்றுமொரு திருவடியால் அச்சக்கரத்தை உதைக்கின்றான். அந்த வேகம் தாளாது வண்டியானது பொடிப் பொடியாகிச் சகடாசுரன் அவ்விடத்திலேயே மாண்டொழிகின்றான். 

அனைவரும் பதறி வந்து பார்க்கையில் நம் கண்ணன் ஏதுமறியாதவன் போல அவர்களைப் பார்த்து மகிழ்ந்து சிரிக்கின்றான். குழந்தை பயந்திருப்பானே என்றெண்ணி நந்தகோபரும்; யசோதையும் அங்குள்ள பெரியவர்களிடம் கண்ணனை அழைத்துச் சென்று மந்திரிக்கச் செய்கின்றனர். 

அருணகிரிப் பெருமான் கண்ணனின் இவ்வற்புத லீலையைப் பல்வேறு திருப்புகழ் திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
('வஞ்சனை மிஞ்சிய' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
கஞ்சன்விடும் சகடாசுரன் பட
     வென்று குருந்தினிலேறி மங்கையர்
          கண்கள் சிவந்திடவே கலந்தரு ...முறையாலே

(2)
('இரவியென வடவையென' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
நிரைபரவி வரவரையுள் ஓர்சீத மருதினொடு
     பொருசகடு உதையது செய்(து)ஆமாய மழைசொரிதல்
          நிலைகுலைய மலை குடையதாவே கொள் கரகமலன் ...மருகோனே

(3)
('முதிர உழையை' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வதைத்து
     சகடு மருதம் உதைத்த ...தகவோடே

(4)
('சுருதி வெகுமுக' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
வலிய சகடிடறி மாயமாய் மடி
     படிய நடைபழகி ஆயர் பாடியில்
          வளரு முகில்மருக வேல்விநோத சிகண்டிவீரா

(5)
(அருணகிரியார் அருளியுள்ள திருவகுப்பு எனும் தொகுப்பில் இடம்பெறும் 'வேல் வாங்கு வகுப்பு')
-
மருதிடை சென்றுயர் சகடு தடிந்தடர் வெம்புளை
    வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன்

திருப்புகழில் கண்ணன் (வையகம் உண்ட லீலை):

கோகுலக் கண்ணன் பலராமனோடும்; மற்றுமுள்ள சிறுவர்களோடும் வீதிகளில் விளையாடுகையில், சிறிது மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொள்கின்றான். சிறுவர்கள் உடன் யசோதையிடம் சென்று 'அம்மா - அம்மா! கிருஷ்ணன் மண்ணைத் தின்கின்றான்' என்று தெரிவிக்க, யசோதை கையில் ஒரு கம்புடன் அவ்விடத்திற்கு விரைந்து வருகின்றாள். 'ஏண்டா மண்ணைத் தின்றாயா?' என்று சிறிது அதட்டிக் கேட்க, கண்ணன் மிரள மிரள விழித்தவாறு 'இல்லை' என்பது போல தலையை அசைக்கின்றான்.   

கோபாலச் சிறுவர்களோ 'அவன் தின்றானம்மா, நாங்கள் நிச்சயம் பார்த்தோம்' என்று மீண்டுமொரு முறை உறுதி கூற, யசோதையானவள் அடிப்பது போல் குச்சியை ஓங்கி 'பொய் சொல்லாதே கிருஷ்ணா, எங்கே வாயைத் திறந்து காட்டு?' என்று மிரட்டும் தொனியில் கேட்கின்றாள். குழந்தைக் கண்ணன் அஞ்சியவன் போலும் தன் திருவாயினை மெல்லத் திறக்கின்றான். 

யசோதை அப்பவள வாயினுள் சப்த சாகரங்களால் சூழப்பெற்றுள்ள உலகங்களைக் காண்கின்றாள், திருப்பாற்கடலையும்; அங்கு பிரமன் போற்றி நிற்கும் நிலையில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியையும் தரிசிக்கின்றாள், மீண்டும் நிலவுலகையும், கோகுலத்தையும், அதனுள் ஓங்கிய கையுடன் தன்னையும் கண்ணனையும் காண்கின்றாள். உடன் காட்சிகள் மறைகின்றன. உடலெங்கும் புளகமுற; விதிர்விதிர்த்து; கண்ணீர் ஆறாகிப் பெருகிய நிலையில் கண்ணனை வாரியணைத்து 'கிருஷ்ணா! நீயொரு தெய்வக் குழந்தையடா' என்று மாறி மாறி முத்தமிட்டு நெகிழ்கின்றாள். 

மண்ணை உண்டு திருவாயினுள் உலகங்களைக் காட்டியருளிய தன்மையால் 'உலகம் முழுமையும் உண்ட கண்ணன்' என்று அருளாளர்கள் கவித்துவமாக இந்நிகழ்வினைக் குறிப்பது மரபு. அருணகிரிப் பெருமான் கண்ணனின் இவ்வற்புத லீலையைப் பல்வேறு திருப்புகழ் திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார், 

(1)
'பொன்றா மன்றாக்கும் புதல்வரும்' என்று துவங்கும் திருவாலங்காட்டுத் திருப்புகழ்),
-
குன்றால்விண் தாழ்க்கும் குடைகொடு
     கன்றாமுன் காத்தும் குவலயம் 
          உண்டார் கொண்டாட்டம் பெருகிய ...மருகோனே

(2)
('இடமருவும் சீற்ற வேலெடுத்து' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்)
-
 அகிலம் உண்டார்க்கு நேர் இளைச்சி ...பெருவாழ்வே

(3)
('தரணிமிசை அனையினிட' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
சகமுழுதும் அடைய அமுதுண்டிடும் கொண்டலும் 
     தெரிவரிய முடியின் அரவங்களும் திங்களும் 
          சலமிதழி அணியுமொரு சங்கரன் தந்திடும் ...பெருமாளே

அருணகிரியாரின் அவதாரக் காலத்திற்கு சுமார் 7 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவதரித்த நம் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பின்வரும் கூடலையாற்றூர் திருப்பதிகப் பாடலில், 'வையக(ம்) முழுதுண்ட மாலொடு' என்று இந்நிகழ்வினைப் பதிவு செய்கின்றார்,
-
வையக(ம்) முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையிள அரவல்குல் பாவையொடும் உடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

திருப்புகழில் கண்ணன் (யசோதையும் கண்ணனும்):

('நாமேவு குயிலாலும்  மாமாரன் அயிலாலும்' என்று துவங்கும் திருப்பாடல்)
-
தாமோகமுடன் ஊறு பால்தேடி உரலூடு
     தானேறி விளையாடும் ஒருபோதில்
-
தாயாக வருசோதை காணாது களவாடு
     தாமோதரன் முராரி மருகோனே!!!

திருப்புகழில் கண்ணன் (தயிர்ச் சோரன்):

('உயிர்க்கூடு விடுமளவும்' என்று துவங்கும் திருப்பாடல்)
-
தயிர்ச் சோரன் என்று வசைபாடும் கோபிகைகளிடத்து பல்வேறு திருவிளையாடல்களைப் புரிந்தருளும் கண்ணனின் மருமகனே, என்று கண்ணனையும் பழனியாண்டவனையும் ஒருசேரப் போற்றி மகிழ்கின்றார் நம் அருணகிரிப் பெருமான். 
-
தயிர்ச்சோரன் எனும்அ(வ்)வுரை வசைக்கோவ வனிதையர்கள்
     தரத்தாடல் புரியும்அரி ...மருகோனே

திருப்புகழில் கண்ணன் (பூதனை வதம்):

குழந்தைக் கண்ணனைத் தொட்டிலிலிட்டு அதற்கருகிலேயே அமர்ந்தவாறு யசோதையும், பலராமனின் தாயான ரோகினி தேவியுமாய் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அச்சமயத்தில், குழந்தை பிறந்த செய்தி கேட்டு ஆசிர்வாதம் செய்ய வந்திருப்பதாகக் கூறிக்கொண்டு நிறைந்த சுமங்கலியொருத்தி அவ்விடத்திற்கு வருகின்றாள். இவளே கம்சனால் அனுப்பப்பட்டிருந்த பூதனை எனும் அரக்கி, மார்புகளில் விஷத்தைத் தடவிக் கொண்டு சுமங்கலிப் பெண்ணின் உருவில் வந்திருந்த அவள், குழந்தைக் கண்ணனைத் தொட்டிலினின்று எடுத்தணைத்து கொஞ்சுவது போலும் நடிக்கின்றாள். 

கண்ணன் சிறிதும் காலம் தாழ்த்த விரும்பவில்லை, பசிப்பவன் போல் அழத் துவங்குகின்றான். பூதனை தன் மார்புகளினின்றும் பால் கொடுக்க முனைய, பாலைச் சுவைப்பது போல் அவள் உயிரையும் சேர்த்து இழுக்கின்றான் பால கிருஷ்ணன். அலறியவாறு (மலை போன்ற) தன் சுய உருவத்துடன் உயிர் துறக்கின்றாள் பூதனை. ஏதுமறியாதவன் போல் அவள் மார்புகளின் மீது விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை, யசோதையும் நந்தகோபரும் பதறியெடுத்து 'குழந்தைக்கு ஊறொன்றும் நேராததை எண்ணி' நிம்மதி கொள்கின்றனர். 

'கண்ணனின் திருமேனி சம்பந்தத்தால் பூதனை உத்தம உலகத்தை அடைகின்றாள்' என்று ஸ்ரீமத் பாகவத புராணம் பறைசாற்றுகின்றது.

அருணகிரிப் பெருமான் மழலைக் கண்ணனின் இவ்வற்புத லீலையைப் பல்வேறு திருப்புகழ் திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார், 

(1)
('முருக மயூரச் சேவக' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
மருகன் எனாமல் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
     வரவிடு மாயப் பேய்முலை ...பருகாமேல்

(2)
('சொற்பிழை வராமல்' என்று துவங்கும் திருவாவடுதுறை திருப்புகழ்),

எத்திய பசாசின் முலைக்குடத்தைக் குடித்து
     முற்றுயிர் இலாமல் அடக்கிவிட்டுச் சிரித்த

(3)
('இலகி இருகுழை' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
அலகை உயிர்முலை அமுது செய்தருளிய
     அதுலன் இருபதம் அதுதனில் எழுபுவி
          அடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே

(4)
('சுருதி வெகுமுக' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
மருது நெறுநெறென மோதி வேரோடு
     கருதும் அலகைமுலை கோதி வீதியில்
          மதுகையொடு தறுகண்ஆனை வீரிட ...... வென்றுதாளால்

திருப்புகழில் திருஞானசம்பந்தர் (அம்பிகையின் இரு அருளாசிகள்):

முருகப் பெருமானின் சாரூப்ய முத்தி பெற்றிருந்த ஓர் உன்னத ஆன்மாவையே சிவபரம்பொருள் திருஞானசம்பந்தராக அவதரிக்கச் செய்துள்ள காரணத்தால், அருணகிரியார் உள்ளிட்ட அருளாளர்கள் சம்பந்த மூர்த்தியை முருகப் பெருமானின் அவதாரமாகவே (உபச்சார வழக்கமாய்) போற்றி வந்துள்ளனர். இவ்வரிய நுட்பத்தினை நம் வாரியார் சுவாமிகள் பல்வேறு விரிவுரைகளில் தெளிவுறுத்தி வந்துள்ளார். இனி இப்புரிதலோடு பதிவிற்குள் பயணிப்போம். 

சிவமாகிய பரம்பொருள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரிய நிகழ்வுகளை, ஞானப் பெருநிலையிலுள்ள அடியவர்களுக்கு உணர்த்தி வருவது கண்கூடு. அம்முறையில் ஞானப்பாலுண்ட நிகழ்வு தொடர்பாக நம் தெய்வச் சேக்கிழாருக்கு இறைவர் உணர்த்தியருளிய குறிப்பினை முதற்கண் சிந்திப்போம், 
-
அம்பிகை சிவஞானமேயாகிய தன் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்திலிட்டு, 3 வயதே நிரம்பியிருந்த ஞானசம்பந்தக் குழவிக்கு, ''இதனை உண்பாய்' என்று அளித்தருளியதாக நம் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம் - 68)
எண்ணரிய சிவஞானத்(து) இன்னமுதம் குழைத்தருளி
'உண்அடிசில்' எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்(து)
அண்ணலைஅங்கழுகை தீர்த்(து) அங்கணனார் அருள்புரிந்தார்

இது ஒருபுறமிருக்க, 15ஆம் நூற்றாண்டில் அவதரித்த அருணகிரியாருக்கு நம் ஆறுமுகக் கடவுள் இந்நிகழ்வு தொடர்பான, அம்பிகையின் மேலும்இரு அருளாசிகளையும் உணர்த்திப் பேரருள் புரிந்துள்ளான். இதனைப் பின்வரும் பழனித் திருப்புகழ் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்து மகிழ்வோம்,

(1) ('பகர்தற்கரிதான செந்தமிழ் இசையில்' என்று துவங்கும் திருப்புகழ்)

நுகர்வித்தகமாகும் என்றுமை மொழியில்பொழி பாலைஉண்டிடு
     நுவல் மெய்ப்புள பாலன் என்றிடும் ...இளையோனே
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'நுகர் வித்தகமாகும்' - இதனை உண்டு சிவஞானம் பெறுவாய்' என்பதாக அம்பிகையின் முதல் அருளாசி அமைந்திருக்கின்றது)

(2)  ('கலவியில் இச்சித்திரங்கி' என்று துவங்கும் திருப்புகழ்),

பலவித நல்கற்படர்ந்த சுந்தரி
     பயில்தரு வெற்புத் தரும் செழும்கொடி
          பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறுகின்ற பாலைப்

பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
     பகர்என இச்சித்துகந்து கொண்டருள்
          பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்றருள் ...தம்பிரானே
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகர்' - 'திசைகள் யாவும் போற்றும் தன்மையில், சிவஞானத்தை விளைவிக்கும் செந்தமிழ்ப் பாக்களைப் பாடுவாய்' என்பதாக நம் அம்பிகையின் மற்றொரு அருளாசி அமைந்திருக்கின்றது). 

(இறுதிக் குறிப்பு: இவ்வைகையான திருப்பாடல்களை நாமும் பலசமயம் படித்து வந்திருப்பினும், மேற்குறித்துள்ள நுட்பங்களை ஒருவாறு மேலோட்டமாய்க் கடந்து சென்றிருப்போம். சிவத்திரு. தணிகைமணி அவர்கள் தம்முடைய ஆய்வு நூலில் இவ்விதமான திருப்பாடல் வரிகள் ஒவ்வொன்றினையும் ஆய்ந்தறிந்து அதன் நுட்பங்களைப் பிரகடனப் படுத்தியுள்ளார். அப்பெருமகனாரை இச்சமயத்தில் நன்றியோடு நினைவு கூர்ந்து போற்றுதல் அடியவர் கடன்)