அருணகிரிநாதர் போற்றும் சீகாழி குருநாதர்:

அருணகிரிப் பெருமானார் ஞானசம்பந்த மூர்த்தியின் மீது அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்த தகைமையாளர், எண்ணிறந்த தமது திருப்பாடல்களில் சீகாழி வேந்தரின் அவதார நிகழ்வுகளையம் அருட்செயல்களையும் போற்றிப் பரவி மகிழ்ந்துள்ளார். 

(1)
முதற்கண் அருணகிரியார் காழி அண்ணலுக்கு சூட்டி மகிழ்ந்துள்ள பல்வேறு அடைமொழிகளையும், சிறப்புத் திருநாமங்களையும் காண்போம்,

1. கவுணிய குலாதித்தன் ('சமரமுக வேலொத்த' என்று துவங்கும் கதிர்காமத் திருப்புகழ்)
2. சதுர்வேதச் சிறுவன் ('கறுவி மைக்கணிட்டு' என்று துவங்கும் திருவரத்துறைத் திருப்புகழ்)
3. சுருதித் தமிழ்க்கவிப் பெருமாள் ('கவடுற்ற சித்தர்' என்று துவங்கும் திருத்தணித் திருப்புகழ்)
4. ஞானபுனிதன், கவிவீரன் ('எழுகுநிறை' என்று துவங்கும் திருக்கழுக்குன்றத் திருப்புகழ்)
5. முத்தமிழ் விரகன், நாற்கவி ராஜன் ('ஓருருவாகி' என்று துவங்கும் திருவெழுகூற்றிருக்கை)
6. தவமுனி ('நெய்த்த சுரி குழல்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்)
7. திருந்த வேதம் தண்டமிழ் தெரிதரு புலவோன் ('இருந்த வீடும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்)
8. புகலியில் வித்தகர் ('புமியதனில்' என்று துவங்கும் திருக்கயிலைத் திருப்புகழ்)
9. முத்தமிழாகரன் ('ஒய்யாரச் சிலையாம்' என்று துவங்கும் சீகாழித் திருப்புகழ்)
10. விருது கவிராஜ சிங்கம் ('கருவினுருவாகி' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)

(2)
குமாரக் கடவுளின் சாரூப முத்தி பெற்றிருந்த முத்தான்மா ஒருவரே திருஞானசம்பந்தராக அவதரித்திருந்த தன்மையினால், அருணகிரியார் சம்பந்தச் செல்வரைக் குமாரக் கடவுளின் சுவரூபமாகவே போற்றும் கொள்கையைக் கொண்டிருந்தார். இது தொடர்பான இரு திருப்பாடல்களை இனிக் காண்போம்,

(நெய்த்த சுரி குழல்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்)
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
     தெற்கு நரபதி திருநீறிடவே
          புக்க அனல்வய மிக ஏடுயவே ....உமையாள்தன்
புத்ரனென இசை பகர்நூல் மறைநூல்
     கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
          பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் ....வருவோனே

('ஓருருவாகி' என்று துவங்கும் திருவெழுகூற்றிருக்கை)
ஒருநாள் உமைஇரு முலைப்பால் அருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
               எழில்தரும் அழகுடன் கழுமலத்(து) உதித்தனை

(3)
தமை ஆளுடைய கந்தப் பெருமானிடம், 'ஐயனே! இப்புவிக்கே பிரபுவாக; தனித்தலைமை கொண்டு விளங்கும் புகலி வேந்தரின் அருளிச் செயல்களைப் போல, அற்புத அற்புதமான பாமாலைகளை உன்மீது புனைந்தேத்தும் அரியதொரு ஞானத்தை, உன் திருவடித் தொண்டனான அடியேனுக்கும் அளித்தருள் புரிவாய்' என்று உளமுருக வேண்டுகின்றார். கந்தவேளும் திருப்புகழ் அரசரின் அவ்விண்ணப்பத்தினை முற்றுவிக்கின்றான்,

('புமியதனில்' என்று துவங்கும் திருக்கயிலைத் திருப்புகழ்)
புமியதனில் ப்ரபுவான
     புகலியில் வித்தகர்போல

அமிர்தகவித் தொடைபாட
     அடிமை தனக்கருள்வாயே!

சீகாழி வள்ளல் 16,000 திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளதாக சைவ சமயச் சான்றோர் பொதுவில் குறிப்பர். அம்முறையிலேயே நம் அருணகிரியாரும் (சம்பந்த மூர்த்தியின் குருவருளாலும்; அறுமுகக் கடவுளின் திருவருளாலும்) 16,000 திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

(4)
மேற்குறித்துள்ள அனைத்திற்க்கும் சிகரம் வைக்குமாற்போலே, பின்வரும் கந்தர்அந்தாதித் திருப்பாடலில், 'ஞானசம்பந்த மூர்த்தியைத் தவிர்த்துப் பிறிதொரு தெய்வமேயில்லை' என்று போற்றுவாராயின், திருஞானசம்பந்தரின் மீது அருணகிரியார் கொண்டிருந்த பெருமதிப்பு தெள்ளென விளங்குமன்றோ, 

(கந்தர் அந்தாதி - திருப்பாடல் 29)
திகழும் அலங்கல் கழல்பணிவார் சொற்படி செய்ய !ஓ
தி கழுமலம் கற்பகவூர் செருத்தணி செப்பி வெண் !பூ
தி கழுமலம் கற்பருளும் என்னா அமண் சேனை !உபா
தி கழு மலங்கற்(கு) உரைத்தோன் அலதில்லை தெய்வங்களே!!!

(கடினப் பதங்களை உடைய இத்திருப்பாடலின் சுருக்கமான பொருளை இனிக் காண்போம்)

அடித்தொண்டர் உய்யுமாறு தேவாரப் பனுவல்களை அருளிச் செய்தவரும், 'சீகாழி; அமராவதி; திருத்தணி எனும் திருப்பெயர்களை உச்சரித்தவாறே திருநீற்றினைத் தரித்துக் கொள்வதே சிவமாகிய மெய்ப்பொருளை அடைவிக்கும்' எனும் மெய்யுணர்வற்ற அமணர்களின் திறத்தை அழித்தவருமாகிய, (அறுமுகக் கடவுளின் வடிவினரான) ஞானசம்பந்த மூர்த்தியை அன்றிப் பிறிதொரு பிரத்யட்ச தெய்வமில்லை!!!

திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்கள் எந்த வேதத்தின் சாரம்? (திருப்புகழ் நுட்பங்கள்):

பின்வரும் திருப்பாடலில் 'சிவபத்தி ருக்கை ஐயம் போக உரைத்தான்' என்று 'ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப் பனுவல்கள் ரிக் வேத சாரமானவை' என்று அருணகிரிநாதர் ஐயத்திற்கு இடமின்றிக் குறிக்கின்றார். இனி இத்திருப்பாடலின் பொருளை அறிந்துணர்வோம், 

(கந்தர் அந்தாதி - திருப்பாடல் 96)
திருக்கை அம்போதிகளோ; கஞ்சமோ; நஞ்சமோ; திருமால்
திருக்கை அம்போ; செய்ய வேலோ; விலோசனம்; தென்னன் அங்கத்
திருக்கை அம்போருகக் கைந்நீற்றின் மாற்றித் தென்னூல் சிவ!பத்
தி ருக்கை ஐயம் போக உரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே!!
-
இத்திருப்பாடலின் 2ஆவது வரியின் இறுதியிலுள்ள 'தென்னன்' எனும் சொல்லிலிருந்து 'ஞானசம்பந்த மூர்த்தியைப் பற்றிய குறிப்பு' துவங்குகின்றது. 
-
'தென்னவனாகிய 'நின்றசீர் நெடுமாற நாயனாரின்' கூனைத்  (அங்கத் திருக்கை)  தன் திருக்கரத்திலுள்ள  திருநீற்றினால் போக்கியருளி, தமிழ் நூலாகவும்; சிவபக்தியை உண்டாக்க வல்லதாகவும், ருக் வேத சாரமாகவும் விளங்கும் தேவாரப் பனுவல்கள் வாயிலாக, 'சிவபெருமானே பரம்பொருள்' என்று ஐயம் தீருமாறு உரைத்தருளியவர் ஞானசம்பந்த மூர்த்தி' என்று அருணகிரிப் பெருமானார் போற்றுகின்றார். 
-
(குறிப்பு: 3ஆம் வரியின் இறுதியில் வரும் 'சிவபத்' எனும் எழுத்துக்களோடு, 4ஆம் வரியின் முதல் எழுத்தான 'தி' என்பதையும் சேர்த்து 'சிவபத்தி' என்று வாசித்தல் வேண்டும்)   

மற்றொரு புறம் அருணகிரியாரின் காலத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நம் தெய்வச் சேக்கிழாரும் ஞானசம்பந்த மூர்த்தியை 'இருக்கு மொழிப் பிள்ளையார்' என்று ரிக் வேத குறியீட்டுடன் இனிமையாகக் குறித்துள்ளார், 

(பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 80)
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாளனார் அருள்கண்(டு) அமரரெலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்
.

சிதம்பரம் திருப்புகழில் சிவகங்கை தீர்த்தம்:

('சந்திர ஓலை' என்று துவங்கும் திருப்புகழின் இறுதி வரிகள்)
செந்தமிழ் ஞானதடாகமென் சிவகங்கை அளாவு மகா சிதம்பர
திண்சபை மேவு மனா சவுந்தர தம்பிரானே!!
-
தில்லைத் திருக்கோயிலிலுள்ள சிவகங்கை தீர்த்தத்தை 'செந்தமிழ் ஞானத் தடாகம்' என்று அருணகிரிப் பெருமானார் போற்றியிருப்பதால், 'இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவோர் செந்தமிழ் ஞானத்தினைப் பெற்று மகிழ்வர்' என்று சிவத்திரு. தணிகைமணி அவர்கள் தம்முடைய திருப்புகழ் உரையில் நயம்படக் குறித்துள்ளார்கள்.






'கந்தர் அலங்காரத்தில்' ஈகையின் சிறப்பு:

'தாழாது அறம் செய்மின்' என்பார் நம் சுந்தர மூர்த்தி சுவாமிகள். அவ்வழியில் நம் அருணகிரிப் பெருமானும், 107 திருப்பாடல்களைக் கொண்ட தம்முடைய கந்தர் அலங்காரத் தொகுப்பில், வறியவர்க்கு உதவும் ஈகைச் செயலின் அவசியத்தை 9 திருப்பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். இனி அதன் நுட்பங்களை இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

(திருப்பாடல் 16):

'ஆறுமுகக் கடவுளின் திருவருள் தானே வந்து நம்மை எய்துவதற்கு' அருணகிரியார் கூறும் 4 வழிமுறைகளில் 'தானமிடுவதும்' ஒன்று ('தானம் என்றும் இடுங்கோள்'). 'என்றும்' என்று குறித்திருப்பதால் 'இச்செயல் வாழ்நாள் முழுவதுமே கைக்கொள்ள வேண்டிய நெறி' என்பது தெளிவு. 
-
தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத், தானம்என்றும்
இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழு பாரும்உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே 

(திருப்பாடல் 18):

'நொய்யின் அளவேனும் பிறர்க்கு அளித்துதவுங்கள்; அதீதமாகச் சேர்த்து வைத்து வைத்துள்ள பொருள் யாவுமே வீண்; ஆன்மா உடலினை விட்டுச் செல்லும் இறுதி யாத்திரைக்கு வேறெதுவும் உடன் வராது' என்று இத்திருப்பாடலில் எச்சரிக்கின்றார். 
-
வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யின் பிளஅளவேனும் பகிர்மின்கள், நுங்கட்(கு) இங்ஙன்
வெய்யிற்கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல், 
கையில் பொருளும்உதவாது காணும் கடைவழிக்கே 

(திருப்பாடல் 51)

'அனுதினமும் அன்பொடு கந்தக் கடவுளைப் போற்றுவதும், இல்லாதவர்க்குத் தொடர்ந்து பகிர்ந்து வருதலுமே, இறுதி ஆன்ம யாத்திரைக்கு வழித்துணை' என்று மற்றுமொரு முறை இத்திருப்பாடலில் தெளிவுறுத்துகின்றார்,
-
மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும் 
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்,
இலையாயினும் வெந்த(து) ஏதாயினும் பகிர்ந்(து) ஏற்றவர்க்கே 

(திருப்பாடல் 53)

'பொருள் உள்ள போதே பிறர்க்கு ஈயாதவர் வாழ்நாளை வீணுக்குக் கழிப்பவராவார், அவ்வகையில் சேர்த்து வைத்துள்ள பொருள் பலவகையிலும் மறைந்து, உரியவருக்கே உதவாமல் போகும்' என்றும் இத்திருப்பாடலில் எச்சரிக்கின்றார்,
-
வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினால் 
பாடிக் கசிந்(து) உள்ள போதே கொடாதவர், பாதகத்தால் 
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே

(திருப்பாடல் 54)

'ஐயனே, பிறர்க்கு உதவும் உத்தமமான ஈகைச் செயலுக்கு அடியவனை விதிக்காமல் விட்டனையே' என்று இத்திருப்பாடலில் அருணகிரியார் வருந்திப் பாடுகின்றார். 
-
சாகைக்கு(ம்) மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்(கு) ஒன்(று)
ஈகைக்கெனை விதித்தாய்இலையே, இலங்காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலை வளைத்தோன் மருகா, மயில் வாகனனே 

(திருப்பாடல் 59)

அற்புதத் திருப்பாடலிது, 'இல்லாதவர்க்கு நாம் இன்று செய்யும் ஈகைச் செயலானது, வேலாயுதக் கடவுளின் திருவருள் போலத் 'தக்க இடத்தில; தக்க நேரத்தில்' நம்மைத் தேடி வந்து துணை செய்யும்', அது விடுத்து 'நாம் அலங்காரமாய்ச் சேர்த்து வைத்துள்ள யாதொன்றுமே எள்ளளவும் துணை செய்யாது' என்று எச்சரிக்கின்றார் அருணகிரியார். 
-
பொங்கார வேலையில் வேலைவிட்டோன்அருள் போலுதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்(கு) இட்ட(து), இடாமல்வைத்த
வங்காரமும்; உங்கள் சிங்கார வீடு(ம்); மடந்தையரும் 
சங்காதமோ, கெடுவீர் உயிர்போம் அத்தனிவழிக்கே 

(திருப்பாடல் 66)

ஒரு புறம் 'இவ்வுடல் நீர்க்குமிழி போன்றது, செல்வம் நிலையற்றது; மின்னல் போலும் மறைந்து விடுவது' என்று பலவாறு அறிஞர்கள் போலும் பேசுவர், மற்றொரு புறம் 'எவரேனும் உதவி கேட்டு வந்தாலோ யாதொன்றும் கூறாமல் அவ்விடம் விட்டு அகன்று சென்று விடுவர்'. 'அறுமுகக் கடவுளின் மீது பக்தியிலாத இத்தகையோரின் செயல் மிகவும் நன்று' என்று பரிகசிக்கின்றார் அருணகிரியார். ஆதலின் 'பிறர்க்குதவும் ஈகைச் செயலும் பக்தியின் ஒரு அங்கம்' என்பது புலனாகின்றது. 
-
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கை, நில்லாதுசெல்வம்,
பார்க்குமிடத்(து)அந்த மின்போலும்என்பர், பசித்து வந்தே
ஏற்கும்அவர்க்கு இடஎன்னின் எங்கேனும் எழுந்திருப்பார்,
வேல்குமரற்கு அன்பிலாதவர் ஞானம் மிகவு(ம்) நன்றே 

(திருப்பாடல் 75)

'பிறற்கு உதவி அதனால் எய்தும் வறுமைப் பேற்றினை எய்தாமல் போய் விட்டேனே' என்று தன்னைத் தானே நொந்து கொள்கின்றார் அருணகிரியார் ('முசியாமல்இட்டு மிடிக்கின்றிலை'). 
-
(குறிப்பு: 'இளையான்குடி மாற நாயனார்' வரலாற்றில் தெய்வச் சேக்கிழார் 'மாற நாயனாருக்கு வறுமைப்பதம் எய்துமாறு தில்லைப் பரம்பொருள் செய்தருளினார்' என்கின்றார் ('நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாடொறு மாறி வந்(து) ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்'). வாரியார் சுவாமிகள் தம்முடைய பெரிய புராண விரிவுரையில், 'அடியவர்க்கு உதவி, அதன் பொருட்டு எய்தியதால் வறுமையும் பதமாயிற்று' என்று இச்சொல்லாடலை வியந்து போற்றுவார்'. 
-
படிக்கின்றிலை, பழநித் திருநாமம் படிப்பவர்தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல்இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்த(ம்) மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே

(திருப்பாடல் 100)

'இடுதலாகிய ஈகைச் செயலை ஒரு சிறிதும் கருதாதவன்' என்று அருணகிரியார் இத்திருப்பாடலில் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாலும், இது நமக்கான அறிவுறுத்தல் என்றே கொள்ளுதல் வேண்டும். 
-
இடுதலைச் சற்றும் கருதேனைப் போதமிலேனை அன்பால் 
கெடுதல்இலாத் தொண்டரில் கூட்டியவா, கிரெளஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவியற இச்சிறை
விடுதலைப் பட்டது, விட்டது பாச வினைவிலங்கே

திருப்புகழில் சபாஷ்; சலாம்:

('பச்சை ஒண்கிரி போலிரு மாதனம்' என்று துவங்கும் திருநள்ளாறு திருப்புகழ்)
-
கற்பகம் திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென
          கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...விடும்வேலா
-
'கற்பக மரத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தேவலோகம் ஏற்றமுற, சித்தர்கள்; விஞ்சையர்கள்; தேவர்கள் ஆகியோர் 'சபாஷ்' என்று வியந்து போற்றும் தன்மையில், சூரபன்மனுடைய படைகள் வேரோடு அழியுமாறு வேலாயுதத்தை செலுத்திய முதற்பொருளே' என்று போற்றுகின்றார் அருணகிரியார்.

('அவா மருவினா' என்று துவங்கும் சுவாமிமலைத் திருப்புகழ்),
-
சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாமிடும் 
சுவாமிமலை வாழும் பெருமாளே!!!!
-
'சுரர்களின் அதிபதியான இந்திரன், பாற்கடல் வாசரான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, நான்முகக் கடவுளான பிரமன் ஆகியோர் அன்புடன் சலாமிட்டு வணங்கும் சுவாமிமலைப் பெருமாளே' என்று சிவகுருநாதனைப் பணிந்தேத்துகின்றார் அருணகிரியார்.

திருப்புகழில் திருவள்ளுவ தேவர் (முக்கியக் குறிப்புகள்):

அருணகிரிப் பெருமான் இருவேறு திருப்பாடல்களில் திருவள்ளுவ தேவரையும், திருக்குறளையும் சிறப்பித்துள்ளார். இனி அதன் நுட்பங்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்.

(1) ('படர்புவியின் மீது மீறி' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

'திருவளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை' என்று இத்திருப்பாடலில் அருணகிரியார் குறிக்கின்றார். பண்பாலும்; தவச்சிறப்பாலும் உயர்ந்த பெரியர் ஆதலின் 'வள்ளுவ தேவர்' என்றும், அப்பெருந்தகையார் அருளியுள்ள குறட்பாக்களை 'வாய்மையாகிய பழமொழி' என்றும் திருப்புகழ் வேந்தர் சிறப்பிக்கின்றார்.  

மற்றொரு புறம் நெறியற்ற புலவர்களை இத்திருப்பாடலில் சாடுகின்றார். 'நெறி நூல்கள்; சங்கப் பாடல்கள்; 64 கலை நூல்கள்; காவியங்கள்; பிரபந்த வகைகள்; பொய்யா மொழியாகிய திருக்குறள்' இவைகளை வெறும் படாடோபத்திற்கும்; லோபிகளாகிய செல்வந்தர்களைப் புகழ்வதற்காகவும் மட்டுமே பயின்று (அப்பனுவல்கள் அறிவுறுத்தும் ஒழுக்க நெறிகள் யாதொன்றிலும் நில்லாமல்), 'மதுரகவி ராஜன்; ஆசுகவி; சண்டமாருதன்' என்று பட்டங்களைச் சூட்டிக் கொண்டு, ஆடம்பரச் சின்னங்களோடு உலவி வரும் இத்தகையோரின் மமதையும்; அறியாமையும் என்று தீருமோ?' என்று வெகுள்கின்றார் அருணகிரியார்.

(முதல் 12 வரிகள்):
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனினுரை பானுவாய் வியந்துரை
          பழுதில்பெரு சீல நூல்களும் தெரி ...... சங்கபாடல்
-
பனுவல்கதை காவ்யமாம் எணெண்கலை
     திருவளுவ தேவர் வாய்மைஎன்கிற
          பழமொழியை ஓதியேஉணர்ந்துபல் ...... சந்தமாலை
-
மடல்பரணி கோவையார் கலம்பகம் 
     முதல்உளது கோடி கோள் ப்ரபந்தமும்
          வகை வகையிலாசு சேர்பெரும்கவி ...... சண்டவாயு
-
மதுரகவி ராஜநானென் வெண்குடை
     விருதுகொடி தாள மேள தண்டிகை
          வரிசையொடுலாவு மால்அகந்தை தவிர்ந்திடாதோ

(2) ('அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)
-
இத்திருப்பாடலின் இறுதியில், 'முப்பால் செப்பிய கவிதையின் மிக்(க) ஆரத்தினை' (திருக்குறளினும் மேன்மை பொருந்திய தேவாரப் பனுவல்கள்) என்று அருணகிரியார் குறிக்கின்றார். 

இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகையிட்டே சுட்டருள்
     எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...மதலாய்!வென்
-
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்காரத்தினை
     எழுதி வனத்தே எற்றிய ...பெருமாளே

'அறம்; பொருள்; இன்பம்; வீடு' எனும் 4 நெறிகளையும் புருஷார்த்தங்கள் என்பர். இவற்றுள் முதல் மூன்றினை விளக்கமாகக் கூறுவதால் திருவள்ளுவ தேவனாரின் குறட்பாக்கள் 'அறநூல்' வகையென்பர். மற்றொரு புறம்  சிவஞானப் பிழிவாகிய மூவர் தேவாரப் பனுவல்கள் (அற நெறிகளோடு கூடிய) அருள் நூல் ஆதலின் 'திருக்குறளினும் விழுமிய தேவாரம்' என்று அருணகிரியார் சிறப்பித்துப் போற்றுகின்றார். 

வள்ளுவனார் காட்டிய அறவழி நின்றொழுகிப் பின்னர் சமயக் குரவர்களான நால்வர் பெருமக்கள் காட்டும் அருள் வழி பயணித்து இறுதியில் சிவமுத்தி பெற்று உய்வு பெறுவதே, ஆன்ம யாத்திரையின் உன்னத லட்சியமெனக் கொள்ளுதல் வேண்டும்.

ஒப்புவமையில்லாத தேவாரப் பனுவலைச் சிறப்பித்துக் கூறுகையில், வள்ளுவப் பெருந்தகையின் வாக்கோடு ஒப்பு நோக்கி அருணகிரியார் விளக்கியிருக்கும் தன்மையினால், வள்ளுவனாரின் மேன்மையும் அவர்தம் வாக்கின் தனிச்சிறப்பும் தெள்ளென விளங்குமன்றோ!!

திருப்புகழில் நக்கீரர்; திருமுருகாற்றுப்படை பற்றிய அற்புதக் குறிப்புகள்:

மதுரையில் சோமசுந்தரக் கடவுளிடம் வாதிட்டு அருள்பெற்ற நக்கீரனார் சிவபரம்பொருளை மட்டுமே போற்றும் நியமமுடையவர், ஆதலின் 'கந்தக் கடவுளின் மீது ஒருபொழுதும் பாடல்களைப் புனைதல் செய்யேன்' என்று உறுதி பூண்டிருந்தார். நம் வேலாயுதக் கடவுளோ 'நக்கீரனாரிடம் பனுவலொன்றினைப் பெற்றே தீருவது' எனும் திருவுளக் குறிப்புடன், பெருவிருப்பொடு காத்திருக்கின்றான்.  

(1)
இந்நிலையில் நக்கீரனார் திருப்பரங்குன்றத்திலுள்ள பொய்கைக் கரையொன்றில் அனுஷ்டானம் புரிகையில், குதிரைமுகப் பெண் பூதமொன்றினால் குகையொன்றில் அடைக்கப் பெறுகின்றார். அங்கு முன்னமே இதே நிலையில் 999 புலவர்கள் அடைக்கப் பெற்றிருப்பதைக் கண்டு உளம் வெதும்புகின்றார். 

(அகல்வினை உட்சார்' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)
துரக முகக் கோதைக்கிடை
     புலவரில் நக்கீரர்க்குதவிய வேளே'

(2)
'சிவசோதியினின்றும் தோன்றியருளிய அறுமுகப் பெருங்கடவுளைப் போற்றாத கொள்கைப் பிழையினாலன்றோ இவ்வினை எய்தியுள்ளது. இனி அப்பெருமானைப் போற்றி செய்து இதனின்றும் உய்வு பெறுவேன்' என்று தெளிகின்றார். 'கந்தா; குகனே, என் குருநாதா! உன் திருவடிகளே சரணம் சரணம்' என்று உளமுருகி விண்ணப்பித்து, 'திருமுருகாற்றுப்படை' எனும் ஒப்புவமையற்ற பனுவலைத் துவங்க முற்படுகின்றார். 

('எந்தன் சடலங்கம்' என்று துவங்கும் கந்தன்குடித் திருப்புகழ்)
கந்தன்குக என்றன்குரு என்றும்தொழும் அன்பன் கவி
     கண்டுய்ந்திட அன்றன்பொடு ....வருவோனே

('முருகுலாவிய' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்)
மருகு மாமதுரைக் கூடல் மால்வரை
     வளைவுளாகிய நக்கீரர் ஓதிய
          வளகை சேர் தமிழுக்காக நீடிய ....கரவோனே
(3)
கருணைப் பெருவெள்ளமான கந்தவேள் இதற்கன்றோ நெடுநாள் காத்திருந்தான். தன் திருவடிகளைச் சரணமெனப் பற்றியுள்ள நக்கீரரின் பால் கருணைத் திருநோக்கம் புரிந்தருளி, அசரீரியாய் 'உலகம் உவப்ப' என்று அடியெடுத்துக் கொடுத்துப் பேரருள் புரிகின்றான்,   

('கடிமா மலர்க்குள்' என்று துவங்கும் சுவாமிமலைத் திருப்புகழ்) 
வளவாய்மை சொற் ப்ரபந்தம் உள கீரனுக்குகந்து
     மலர்வாய் இலக்கணங்கள் ....இயல்போதி

அடிமோனை சொற்கிணங்க உலகாம் உவப்ப என்றுன் 
     அருளால் அளிக்கு(ம்) கந்த ....பெரியோனே

(4)
நக்கீரனார் அற்புத அற்புத ஆற்றுப்படைப் பனுவல்களால் குமாரக் கடவுளின் திருவடிச் சீர்மைகளைப் பட்டியலிட்டுப் போற்றிப் பரவ, உமை மைந்தனான ஷண்முகக் கடவுள் திருவுள்ளம் மிக உவந்து, அக்குதிரை முக பூதத்தைச் சம்ஹாரம் புரிந்தருளி, நக்கீரர் உள்ளிட்ட 1000 புலவர்களையும் அக்குகையினின்றும் விடுவிக்கின்றான்,  

('முலைமுகம் திமிர்ந்த' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)
மலை முகம் சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு
     வழி திறந்த செங்கை ....வடிவேலா

(5)
அருணை மாமுனிவர் கந்தர் அந்தாதித் தொகுப்பின் 51ஆம் திருப்பாடலில், 'தெய்வயானை அம்மையின் காதலின்பத்தைக் காட்டிலும் கீரனாரின் ஆற்றுப்படைத் திருப்பாடல்கள் முருகக் கடவுளின் திருவுள்ளத்திற்கு மிகவும் இனிமை சேர்க்க வல்லது' என்று வியந்து போற்றுகின்றார்.

பின்வரும் திருப்பாடல் கடினப் பதங்களை உடையது. ஆதலின் 'கைமா மயில் செவ்வி நற்கீரர் சொல் தித்தித்ததே' எனும் இறுதி வரியின் பொருளை மட்டும் இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம். 

'கைமா' - (யானை - தெய்வ யானையான ஐராவதம்) 
-
'கைமா மயில்' - (ஐராவத யானையால் வளர்க்கப் பெற்ற நம் தெய்வயானை அம்மை)
-
செவ்வி - (கலவியின்பம் அல்லது காதலின்பம்)
-
நற்கீரர் சொல் - (திருமுருகாற்றுப்படை திருப்பாடல்கள்)
-
(கந்தர் அந்தாதி 51ஆம் திருப்பாடல்)
சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்பும் சிலம்(பு) !அம்புரா
சி, கைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன் !வா
சி, கைத்(து) ஓகை மாமயில் வானில் வைத்தோய் வெஞ்செருமகள் !வா
சி, கைத்தோ கைமா மயில் செவ்வி நற்கீரர் சொல் தித்தித்ததே