அருணகிரிநாதரின் தோழரான கலிசைச் சேவகனார் (திருப்புகழ் குறிப்புகள்):

தம்பிரான் தோழரான சுந்தரனாருக்குச் சேரமான் பெருமாள் நாயனார் தோழரான தன்மை போன்று, நம் அருணகிரிப் பெருமானுக்கும் (பழனியிலுள்ள கலிசை நகரில் வாழ்ந்திருந்த) காவேரிச் சேவகனார் எனும் சிவபுண்ணிய சீலர் தோழராக விளங்கி வந்துள்ளார். இச்சேவகனார் 'வீரை' எனும் தலத்தில் பழனியாண்டவனை எழுந்தருளச் செய்தவராவார். அறுமுக தெய்வத்தை மட்டுமே பாடும் நியமம் பூண்டிருந்த, மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரியாரின் திருப்புகழ் திருப்பாடல்களில் குறிக்கப் பெறுவாராயின் இப்பெருமகனாரின் சீர்மையினை என்னென்று போற்றுவது!

(1) 'தோகை மயிலே' எனும் பழனித் திருப்புகழில், 'விண்முகிலைப் போல் தன்னலமற்ற கொடைத் திறம் கொண்டவரும், தன் பெருஞ்செல்வத்தை (வாயு வேகத்தில்) வேண்டுவார்க்கு விரைந்தளித்து மகிழும் பாரிக்கு ஒப்பான வள்ளல் தன்மை உடையவரும், மன்மதனுக்கு ஒப்பான தோற்றப் பொலிவினை உடையவருமான காவேரிச் சேவகனாரின் உள்ளத்தில் மேவியிருந்து அருள் புரியும் வீரனே' என்று பழநியாண்டவனைப் போற்றுகின்றார் அருணை மாமுனிவர்.

மேகநிகரான கொடைமானாயகாதிபதி
     வாரிகலி மாருத கரோ பாரி மாமதன
          வேள் கலிசை வாழவரு காவேரி சேவகனது ...... உளமேவும்

(2) 'சீயுதிரம் எங்குமேய்' எனும் பழனித் திருப்புகழில்,
வேலைவிடு கந்த காவிரி விளங்கு
     கார்கலிசை வந்த சேவகன் வணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி அண்டர் ...பெருமாளே

(3) 'இருகனக மாமேரு' எனும் பழனித் திருப்புகழில்,
கருடனுடன் வீறான கேதனம் விளங்கு
     மதிலினொடு மாமாட மேடைகள் துலங்கு
          கலிசைவரு காவேரி சேவகனொடன்பு ...புரிவோனே

(4) 'சீறல்அசடன் வினைகாரன்' எனும் பழனித் திருப்புகழில்,
வீறு கலிசைவரு சேவகனதிதய
     மேவுமொரு பெருமை ...உடையோனே

(5) 'கோல மதிவதனம்' எனும் பழனித் திருப்புகழில்,
வீறு கலிசைவரு சேவகனதிதய
     மேவு முதல்வ வயல் வாவி புடைமருவு
          வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...பெருமாளே.

மேலும் இக்கலிசைச் சேவகனார்க்கு எய்தியிருந்த சுர நோயினைத் 'தலைவலி மருந்தீடு' எனும் பழனித் திருப்புகழால் அருணகிரிப் பெருமானார் போக்கியருளிய நிகழ்வினைத் திருமுருக வாரியார் சுவாமிகள் தம்முடைய 'குருநாதர்' எனும் நூலில் பதிவு செய்தருளியுள்ளார்

அருணகிரிநாதர் (திருத்துருத்தியில் வேல் மயில் முத்திரைகள் பொறிக்கப் பெற்ற அற்புத நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் பெண்ணாகடம் எனும் தலத்திலுள்ள 'திருத்தூங்கானை மாடம்' எனும் சிவாலயத்தில் 'இடப  சூல முத்திரைகளை தன் மேனியில் பொறித்தருளுமாறு' இறைவரிடம் விண்ணப்பித்துப் பாட, 'சிவபரம்பொருளின் திருவருளால் சிவபூத கணமொன்று அங்கு தோன்றி, அப்பர் அடிகளின் திருத்தோள்களில் அவ்விரு முத்திரைகளையும் பொறித்துச் சென்ற' அற்புத நிகழ்வினைப் பெரிய புராணத்தில் நம் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார். 
-
(அப்பர் சுவாமிகள் தேவாரம் - திருத்தூங்கானை மாடம்)
பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இரும் கூற்றகல
மின்னார் மூவிலைச் சூலம் என் மேல்பொறி மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!!!

அம்முறையிலேயே நம் அருணகிரிப் பெருமானும் 'திருவண்ணாமலை; பொதியமலை; எட்டிக்குடி' ஆகிய மூன்று தலங்களிலும் 'தன் மேனியில் வேல் மயில் சின்னங்களைப் பொறித்தருளுமாறு' ஆறுமுகக் கடவுளிடம் விண்ணப்பித்துப் பாடி வர, திருத்துருத்தியில் வேலாயுத தெய்வம் அவ்வேண்டுதலை முற்றுவித்துப் பேரருள் புரிகின்றான். இனி இதற்கான திருப்புகழ் அகச் சான்றுகளை உணர்நது மகிழ்வோம்,

(1) 'சிவ மாதுடனே' என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழ்,

இறையோனிடமாய் விளையாடுகவே
     இயல் வேலுடன் மா அருள்வாயே

(2) 'வெடித்த வார்குழல்' என்று துவங்கும் பொதியமலைத் திருப்புகழ்,

குறித்து நீஅருகழைத்து மாதவர்
     கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
          கொடுத்து வேதமும் ஒருத்தனாமென ....சிந்தைகூராய்

(3) 'மை குழலொத்தவை' என்று துவங்கும் எட்டிக்குடித் திருப்புகழ்,

தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
     தற்சமையத்த கலா வேனாதா
          தத்து மயிற்பரி மீதே நீதான் ...வருவாயே

இறுதியாய்த் திருத்துருத்தித் தலத்தில் அருணகிரியாரின் கனவில் தோன்றும் அறுமுகக் கடவுள், 'அன்பனே, உன்னை நம் அடைக்கலப் பொருளாகக் கொண்டோம். இதோ வேல்; மயில் முத்திரைகளை இட்டு உன் விருப்பத்தினையும் முற்றுவித்தோம். முத்தி தரவல்ல அனுபூதியையும்; அருள் மயமான நம் திருப்புகழையும் ஓதுவதையே பணியெனக் கொள்வாய்' என்று பேரருள் புரிந்து மறைகின்றான், 
-

(4) ('மலைக் கனத்தென' என்று துவங்கும் திருத்துருத்தித் திருப்புகழ்)

அடைக்கலப் பொருளாமென நாயெனை
     அழைத்து முத்தியதாம் அநுபூதியென்  
          அருள் திருப்புகழ் ஓதுக வேல்மயில் ...அருள்வோனே

மேற்குறித்துள்ள அரிதினும் அரிதான திருப்புகழ் குறிப்பினை (திருப்புகழ் திருப்பாடல்களுக்கு முதன்முதலில் உரை கண்டருளிய) சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், தம்முடைய நுண்மாண் நுழைபுலத்தால் ஆய்ந்தறிந்து வெளியிட்டுள்ளார்கள்.  

'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரும், திருப்புகழ் தல ஆய்வாளருமான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களும் தன்னுடைய நூல் மற்றும் திருப்புகழ் விரிவுரைகளில் இவ்வரிய குறிப்பினை விவரித்துப் போற்றி வருவார்.

அருணகிரிநாதர் (கிளி உருவத்தில் பாடியது 'கந்தர் அனுபூதியா' அல்லது திருவகுப்பா? - வியப்பூட்டும் ஆய்வுக் குறிப்புகள்)

அருணகிரியார் கிளியுருவம் கொண்ட பின்னர் அருளிச் செய்தது 'கந்தர் அனுபூதி' என்பது வழிவழியாய்க் கூறப் பெற்றுவரும் குறிப்பு, சமயப் பெரியோர்கள் பலரும் இச்செய்தியினை உள்ளவாறே ஏற்று வழிமொழிந்தும் வந்துள்ளனர். எனினும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரியாரின் பாடல் தொகுப்புகள் அனைத்திற்கும் முதன்முதலில் உரை கண்டருளிய சிவத்திரு. தணிகைமணி அவர்கள் இது தொடர்பாக அரியதொரு ஆய்வினை மேற்கொண்டு, வியப்பூட்டும் சில குறிப்புகளைச் சமய உலகிற்குப் பிரகடனப்படுத்தி உள்ளார். அது குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

(1)
'அனுபூதிப் பாடல்கள் அருணகிரியாரால் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மனநிலையில் பாடப் பெற்றுப் பின்னாளில் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும்' என்பது தணிகைமணி அவர்களின் மிகமுக்கியப் பிரகடனம். இப்பெருமகனார் அனுபூதிப் பாடல்களைப் பின்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கின்றார், 

(தவம்கிடந்த நிலையில் பாடியவை: 13 பாடல்கள்): 1, 2, 3, 6, 15, 18, 21, 36, 37, 40, 47, 48, 51

(சாந்தி பெறாது கலக்கமுற்ற நிலையில் பாடியவை: 22 பாடல்கள்): 4, 5, 9, 10, 16, 19, (23 - 27), 29, (31-35), 39, 41, 45, 46, 50

(பேறு பெற்ற ஞான நிலையில் பாடியவை: 13 பாடல்கள்): 8, (11-13), 20, 22, 28, 30, 38, (42-44), 49

(நெஞ்சுக்கும், உலகுக்கும் உபதேசப் பாடல்கள் : 3): 7, 14, 17

மேற்குறித்துள்ள 51 அனுபூதிப் பாடல்களின் பொருளை ஆய்ந்தறிகையில், 'முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலுள்ள அனுபவங்களை, ஒரே சமயத்தில்; அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக நம் குருநாதர் பதிவு செய்திருக்க ஒருசிறிதும் வாய்ப்பில்லை' என்பது தெளிவாக விளங்கும். 

(2)
இனி தணிகைமணி அவர்கள் முன்னிறுத்தும் 2ஆவது கோணத்தினைக் காண்போம். 

அனுபூதிப் பாடல்கள் யாவும் நேரிடையாகப் பாடுமுகமாக ('தம்முடைய குறை கூறுவது, தாம் பெற்ற பேற்றினையெண்ணி மகிழ்வது' என்று 'தன்மை இடத்தனவாய்') அமைந்துள்ளது. 

மற்றொருபுறம் வேடிச்சிக் காவலன் வகுப்பில், 'அருணை நகரினொரு பக்தன்இடு.. திருப்புகழ் மதாணி க்ருபாகரனும்' என்று தன்னையே சேய்மைப் பதத்தில் 'அருணைநகரின் ஒரு பக்தன்' என்று குறித்துள்ளமையால், 'திருவகுப்பே கிளியுருவில் அருணகிரியார் அருளிச் செய்ததென்பது தணிகைமணி அவர்களின் அற்புதப் பிரகடனம்.

(3)
'தம்முடைய உடற்சிறையை அறுமுகக் கடவுள் விடுவித்தருளியது நியாயமே' என்று அருணகிரியார் 'திருவேளைக்காரன் வகுப்பில்' பதிவு செய்துள்ளது மற்றுமொரு அகச்சான்று - என்கின்றார் தணிகைமணி அவர்கள்,  

'ஏழையின் இரட்டை வினையாயதோர் உடற்சிறை 
இராமல் விடுவித்தருள் நியாயக்காரன்' 

(4)
'திருப்புகழ்; அனுபூதி; அலங்காரம்' எனும் பனுவல்களில் 'பெண்கள் மயக்கினின்றும் என்னை விடுவித்துக் காத்தருள்' எனும் விண்ணப்பம் இருக்கும். 'அப்படியொரு பேச்சே திருவகுப்பில் கிடையாது' என்கின்றார் தணிகைமணி அவர்கள். மேலும் 'யம பயத்தினின்றும் காத்தருள்' எனும் குறிப்பு 'சேவகன் வகுப்பு' ஒன்றினைத் தவிர, திருவகுப்பில் வேறெங்கும் கிடையாது என்பது தணிகைமணி அவர்களின் கூற்று, 

(குறிப்பு): திருவகுப்பின் 25 பாடல்களில், முதல் 18 மட்டுமே அருணகிரியார் அருளிச் செய்ததென்பதும், மற்றவை பிற்சேர்க்கை என்பதும் தணிகைமணி அவர்களின் கோட்பாடு).

(5)
மேலும், முதல் 18 திருவகுப்புப் பாடல்களில், (1, 3, 4, 6, 7, 9-12, 14-16) ஆகிய 12 வகுப்புகளில் திருத்தணிகை கூறப்பெற்றுள்ளது. ஆதலின் 'அருணகிரியார் இறுதியாய்த் திருத்தணிகை தலம் சென்று, அங்கு தணிகைவேலவனின் திருக்கரத்தில் கிளியாக நிலைகொண்ட பின்னர் திருவகுப்புப் பனுவல்களை அருளிச் செய்திருக்க வேண்டும்' என்று சிவஞானப் பெருநிலையில் நின்றவாறு பிரகடனம் செய்கின்றார் சிவத்திரு. தணிகைமணி அவர்கள். 

திருத்தணிகை இடம்பெறாத 6 திருவகுப்புகள் முன்னரே ஓரோர் சமயங்களில் பாடியதாக இருக்கலாம் என்பதும் தணிகைமணி அவர்களின் கருத்து.

(6)
'கரிக்குழல் விரித்தும்' என்று துவங்கும் திருத்தணித் திருப்புகழில், 'உன் தலத்தினில் இருக்கும் ...படி பாராய்' என்று அருணகிரிப் பெருமானார் விண்ணப்பித்திருப்பதால், 'அருணகிரியாரின் முத்தித் தலம் திருத்தணி' என்பதும் தணிகைமணி அவர்களின் மற்றுமொரு பிரகடனம்,

தவக்கடல் குளித்திங்குனக்கடிமை உற்றுன்
     தலத்தினில் இருக்கும் ....படிபாராய்

அருணகிரிநாதர் (ஆறு தலங்களில் பெற்ற நடனக்கோல தரிசனம்):

அருணகிரியார் திருச்செந்தூரில் பெற்ற நடனக்கோல தரிசன நிகழ்வினை முதற்கண் நினைவு கூர்ந்து பின்னர் பதிவிற்குள் பயணிப்போம். 

(1) (திருச்செந்தூர்):

அன்று செந்தில் நகரில் பிரமோத்சவ 7ஆம் நாள் உற்சவம், பிரதான உற்சவ மூர்த்தியான ஷண்முகரின் புறப்பாடு துவங்கியிருந்த சமயம். எண்ணிறந்த அணிகலன்களுடன் எழுந்தருளி வரும் செந்திலாண்டவனைக் கண்களாரத் தரிசித்துப் பணியும் அருணகிரியார் 'ஐயனே, உன்னுடைய நடனக் கோல தரிசனத்தினை அளித்தருள்வாய்' என்று விண்ணப்பிக்கின்றார். 

செந்தில் இறைவனும் 'பின்புறமாய் வந்து நமது நடனக் கோலம் காண்பாய்' என்று அருள, அருணகிரியார் அவ்வண்ணமே செல்கின்றார். திருப்புகழ் வேந்தரின் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு செந்திலாண்டவன் பால வடிவில் தோன்றுகின்றான். செம்பொன்னால் வார்த்தெடுத்தது போன்ற திருமேனிப் பொலிவு, திருமேனியெங்கும் அணிகலன்கள், நெற்றியில் துலங்கும் திருநீறு, சிவஞானக் குழவியான செந்திற் கடவுள் பிஞ்சுப் பொற்பாதங்களை அசைத்துத் தன் திருநடத்தினைத் துவங்குகின்றான். 

அருணகிரியார் அகம் குழைந்து கண்ணீர் பெருக்கி 'தண்டையணி வெண்டையம்' எனும் திருப்பாடலொன்றினை எடுக்க, அதன் சந்தத்திற்கு ஏற்றாற்போல் குமர நாயகன் திருநடமிடுகின்றான். 'கொண்ட நடனம்பதம் செந்திலிலும் எந்தன்முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே' என்று அருணகிரியார் நெகிழ்ந்து போற்றுகின்றார். 

'செந்திலிலும்' என்று பன்மையில் குறித்திருப்பதால், 'பிற தலங்களிலும் குமாரக் கடவுள் தன் நடனக்கோல தரிசனத்தினை அளித்தருள் புரிந்துள்ளான்' என்பது புலனாகின்றது. இனி அதற்கான திருப்புகழ் அகச் சான்றுகளையும் அறிந்து மகிழ்வோம்,

(2) (திருவெண்ணெய்நல்லூர்):

('பலபல தத்துவ' என்று துவங்கும் திருப்புகழ்)
-
மகிழ் பெணையில்கரை பொழில்முகில் சுற்றிய
     திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
          மயிலின் மிசைக்கொடு திருநடமிட்டுறை ...பெருமாளே

(3) (கொடுங்குன்றம் - பிரான் மலை): 

('எதிர்பொருது கவிகடின' என்று துவங்கும் திருப்புகழ்),
-
பொழுதினிலும் அருள்முருக சுத்தக் கொடுங்கிரியில் 
     நிர்த்தச் சரண்களை மறந்திடேனே

(4) (சிதம்பரம்): 

('மகரமொடுறு குழை' என்று துவங்கும் திருப்புகழ்)
-
அரிதுயில் சயன வியாள மூர்த்தனும் 
     அணிதிகழ் மிகுபுலியூர் வியாக்ரனும் 
          அரிதென முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே
-
(குறிப்பு: மேற்குறித்துள்ள திருப்பாடலில், பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் 'இது அரிது அரிது' என்று வியந்து போற்றும் தன்மையில் தில்லையுறைக் குமாரக் கடவுள் தனக்கு ஆடல் தரிசனம் அளித்தருளியதாகப் பதிவு செய்கின்றார் நம் அருணகிரிப் பெருமானார்). 

(5) (திருத்தணி):

('குருவி எனப்பல' என்று துவங்கும் திருப்புகழ்)
-
"விணமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...பெருமாளே"
(குறிப்பு: இத்திருப்பாடலில் இருதேவியரும் உடனிருக்க, நிருத்த தரிசனத்தினை அளித்ததாகப் பதிவு செய்கின்றார்)

('மொகுமொகென நறைகொள்மலர்' என்று துவங்கும் மற்றொரு திருப்புகழ்)
-
"தணிகைமலை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல ...... பெருமாளே"

(6) (திருவண்ணாமலை):

('விந்துப் புளகித' என்று துவங்கும் திருப்புகழ்)

அடியென் 
இடைஞ்சல் பொடிபட முன்புற்றருள் அயில்
    தொடுத்தும் இளநகை பரப்பி மயில்மிசை
      நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...பெருமாளே.

மேற்குறித்துள்ள அரிய குறிப்புகளை முதன்முதலில் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தியவர் சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். இதனைத் தொடர்ந்து 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய நூல்கள்; விரிவுரைகள்; கட்டுரைகள் தோறும் இக்குறிப்புகளை விவரித்துப் போற்றி வருவார்.

அருணகிரிநாதர் (திருவடி தீட்சை பெற்ற திருத்தலங்கள்):

நாவுக்கரசு சுவாமிகளுக்கு நல்லூரிலும், சுந்தரனாருக்குத் திருவதிகைக்கு அருகிலுள்ள சித்தவடமடத்திலும்  சிவபரம்பொருள் தன் திருவடியினைச் சூட்டி அருள் புரிந்த அற்புத நிகழ்வுகளைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார். 

அம்முறையில் நம் அறுமுகக் கடவுள் (விண்ணப்பம் ஏதுமின்றித் தானாகவே சென்று) திருவண்ணாமலையிலும் பின்னர் வயலூரிலும் தன் திருவடியினை திருப்புகழ் வேந்தரின் சென்னிமிசை சூட்டிப் பேரருள் புரிகின்றான். அத்துடன் அருணகிரியார் நிறைவு கண்டுவிடவில்லை, (இவ்வுலக மாயையினின்றும் முற்றிலுமாய்த் தொடர்பற) பழனி; சுவாமிமலை; திருத்தணி ஆகிய 3 திருத்தலங்களிலும் மீண்டுமொரு முறை தனை ஆளுடைய கந்தப் பெருமானிடம் அத்திருவடிப் பேற்றினை உரிமையுடன் வேண்டி விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்கின்றார்.

இனி கீழ்குறித்துள்ள 5 திருத்தலங்களில் அருணகிரியாரின் திருவடி தொடர்பான விண்ணப்பப் பாடல் வரிகளோடு, அவ்விருப்பம் முற்றுப் பெற்றதற்கான அகச் சான்றுகளையும் உணர்ந்து மகிழ்வோம்,

1. (திருவண்ணாமலையில் திருவடி தீட்சை)

('முருகு செறிகுழல் - திருவண்ணாமலை திருப்புகழ்')
 அருணை நகர்மிசை கருணையொடருளிய
          மவுன வசனமும் இருபெரு சரணமும் ....மறவேனே

2. (வயலூரில் திருவடி தீட்சை)

('குருவும் அடியவர்' - நெரூர் திருப்புகழ்)
வயலி நகரியில் அருள்பெற மயில்மிசை
     உதவு பரிமள மதுகர வெகுவித
          வனச மலரடி கனவிலு(ம்) நனவிலு(ம்) ....மறவேனே

3. (பழனியில் திருவடி தீட்சை)

('குறித்தமணிப் பணித்துகிலை' - பழனித் திருப்புகழ் - தீட்சைக்கு விண்ணப்பம்)
புலத்தலையில்  செலுத்துமனப்
     ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
          புரித்தருளித் திருக்கழலைத் ....தருவாயே

('களபமுலையைத் திறந்து' - பழனித் திருப்புகழ் - தீட்சை அடையப் பெறுதல்)
இப முகவனுக்குகந்த இளையவ மருக் கடம்ப
     எனதுதலையில் பதங்கள் அருள்வோனே

4. (திருத்தணியில் திருவடி தீட்சை)

('ஏது புத்தி ஐயா' - திருத்தணித் திருப்புகழ் - தீட்சைக்கு விண்ணப்பம்)
பாதம் வைத்திடையா தெரித்தெனை
     தாளில் வைக்க நியே மறுத்திடில்
          பார் நகைக்குமையா தகப்பன்முன் ...மைந்தனோடி

('கொந்துவார் குரவடியினும்' - திருத்தணித் திருப்புகழ் - தீட்சை அடையப் பெறுதல்)
சஞ்சரீகரிகர முரல் தமனிய
     கிண்கிணீமுக இதபத யுகமலர்
          தந்த பேரருள் கனவிலும் நனவிலும் ...மறவேனே

5. (சுவாமிமலையில் திருவடிப் பேறு)

(இத்தலத்தில் திருவடி தொடர்பான நான்கைந்து விண்ணப்பப் பாடல்களுண்டு)

('ஆனனம் உகந்து தோளொடு' - சுவாமிமலைத் திருப்புகழ் - திருவடி தீட்சைக்கு விண்ணப்பம்)
வாரிஜ பதங்கள் நாயடியேன் முடிபுனைந்து போதக
     வாசகம் வழங்கி ஆள்வதும் ஒருநாளே

('செகமாயை உற்றென்' - சுவாமிமலைத் திருப்புகழ் - திருவடி தரிசனம் பெறுதல்)
தகையாதெனக்குன் அடிகாண வைத்த
     தனிஏரகத்தின் ....முருகோனே

அருணகிரிநாதர் (சிதம்பரத்தில் கந்தக் கடவுள் தோழமை தந்து அருள் புரிதல்):

நமக்கின்று கிடைத்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுள், பின்வரும் தில்லைத் திருப்புகழொன்றில் மட்டுமே நம் அருணகிரிப் பெருமானார் அறுமுக தெய்வத்தைத் 'தோழா' என்று உரிமையோடு குறிப்பிட்டுப் போற்றுகின்றார். இனி இப்பதிவில் 'சக மார்க்கம்' எனும் தோழமை நெறி குறித்துச் சிறிது சிந்திப்போம்.

இப்புவியில் தோன்றும் ஒவ்வொரு உயிர்க்கும் தாய்;தந்தையர் உண்டு ஆதலின் இறைவர்; இறைவியை அம்மையப்பராகக் கொண்டு பக்தி புரிந்து வழிபடும் சத்புத்ர மார்க்கத்தினை உள்வாங்கிப் பின்பற்றுதல் எளிது. 

தத்துவ நோக்கில் ஆன்மாக்கள் அனைவரும் பரம்பொருளான அம்பிகை பாகனாருக்கு அடிமைத்திறம் பூண்டொழுகுபவை என்றிருப்பினும், உலகியல் வழக்கில் எவரொருவருக்கும் 'நாம் சிவமாகிய பரம்பொருளுக்கு அடிமை' எனும் உணர்வு இயல்பிலேயே சித்தித்து விடுவதில்லை. 'சிவனடியார் அல்லது சிவபக்தர்' எனும் புரிதலையே முதற்கண் எய்தப் பெறுகின்றோம். ஆதலின் இறைவரைத் தலைவராகவும் தன்னை அடிமையாகவும் கொண்டொழுகும் தாச மார்க்கம் என்பது தத்துவப் புரிதலினாலும்; சமயப் பயிற்சியினாலும்; குருவருளாலும் மட்டுமே சித்திக்க வல்லது. 

இறுதியாய் இறைவராக அளித்து அருளினாலன்றி 'தோழமை உணர்வு சித்திக்க வாய்ப்பேயில்லை' என்பது கண்கூடு. 63 நாயன்மார்களுள் சுந்தரனாருக்கு மட்டுமே அவ்வரிய பேறு வாய்க்கப் பெறுகின்றது. அதுவும் வன்தொண்டனார் அப்பேற்றினை விண்ணப்பித்துப் பெறவில்லை, திருவாரூர் மேவும் மறைமுதல்வர் தாமாக முன்வந்து 'தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்' என்று விண்ணொலியாய் அறிவித்து அருள் புரிகின்றார். 

'தோழமை உணர்வையும் அடிமைத் திறத்தினால் மட்டுமே அடைய இயலும்' என்பதொரு அரிய நுட்பம், தோழமை ஒரு கூடுதல் உரிமையே எனினும் அதனைக் கூட்டுவிப்பது 'அதீத அடிமைத்திறம்' எனும் உத்தம நிலையே. முதற் திருப்பதிகத்திலேயே சுந்தரனார் 'அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே' என்று 'தன்னை அடிமை' என்றே பிரகடனப்படுத்திக் கொள்வதால் இதனை உணரப் பெறலாம். 

திருப்புகழ் மாமுனிவரான நம் அருணகிரியாரும் எண்ணிறந்த திருப்பாடல்களில் தன்னை 'அடிமை' என்றே அடையாளப் படுத்திக் கொள்கின்றார் ('அமிர்தகவித் தொடைப்பாட அடிமை தனக்கருள்வாயே').

ஆதலின் சிதம்பர ஷேத்திரத்தில் சிவகுமரனான நம் கந்தப் பெருமான் அருணகிரியாருக்குத் தம்முடைய நடனக் கோல தரிசனத்தோடு, தோழமை பேற்றினையும் அளித்து அருள் புரிந்துள்ளது தெளிவு. 'தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த தோழா கடப்பமலர் அணிவோனே' என்று பின்வரும் திருப்பாடலில் நெகிழ்ந்து போற்றுகின்றார் திருப்புகழ் வேந்தர்,

தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...தனதான

நாடா பிறப்பு முடியாதோ எனக்கருதி
     நாயேன் அரற்றுமொழி ...வினையாயின்

நாதா திருச்சபையின் ஏறாது சித்தமென
     நாலா வகைக்கும் உனதருள்பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரேன் எனக்கெதிர் முன் ...வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தஅரி
     தோல்ஆசனத்தி உமை ...அருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த
     தோழா கடப்பமலர் ...அணிவோனே

ஏடார் குழற்சுருபி ஞானாதனத்தி மிகு
     மேராள் குறத்திதிரு ....மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த் திரளை
     ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.

அருணகிரிநாதரின் முற்பகுதி வாழ்வின் நிகழ்வுகள் மெய்யானவையா? (சிவத்திரு. தணிகைமணி அவர்களின் அற்புத விளக்கவுரை):

திருப்புகழ் திருப்பாடல்களை நாமின்று பாராயணம் புரிந்தும் பாடியும் உய்வு பெறுகின்றோம் எனில் அதற்குக் காரணம் இருபெரும் தவசீலர்கள், சிவத்திரு. வ.த. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் மற்றும் அவர்தம் திருக்குமாரரான சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். திருப்புகழ் திருப்பாடல்களைத் தங்களது பகீரத பிரயத்தனத்தினால் தேடித் தேடிச் சேகரித்து, பல்வேறு பிரதிகளோடு சரிபார்த்துத் தொகுத்து முதன்முதலில் பதிப்பித்த தனிச்சிறப்பு இவ்விரு பெரியோரையே சாரும். 

திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரியாரின் பாடல் தொகுப்புகள் யாவற்றிற்கும் முதன்முதலில் உரைகண்டருளியவர் சிவத்திரு. தணிகைமணி அவர்கள். அம்மட்டோ!, 'அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்' மற்றும் அப்பர் சம்பந்தர் தேவாரங்களுக்கான 'தேவார ஒளி நெறி' எனும் ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் வரைத்தருளியுள்ளார். 'ஒரு பல்கலைக்கழகமே ஒன்றுதிரண்டு செய்திருக்க வேண்டிய அரியதொரு ஆய்வினைத் தனியொருவராக மேற்கொண்ட பெருமகனார் இவர்' என்று சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய விரிவுரைகள் தோறும் குறிப்பிட்டுப் போற்றி மகிழ்வார். 

தணிகைமணி அவர்கள் ஒருசமயம் திருத்தணித் தலத்தில் கந்தரந்தாதிப் பாடல்களைப் பாராயணம் புரிகையில், இடையில் 59ஆம் திருப்பாடல் விடுபட்டு விடுகின்றது. அன்றிரவே தணிகை வேலவன் கனவில் எழுந்தருளி வந்து, 'எலும்பிச்சப்பழப் பாடலைப் பாட மறந்தனையோ' என்று நினைவூட்டியருளிய நிகழ்வு இவர்தம் தவச்சிறப்பினைப் பறைசாற்றும்.

இனி மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமானாரின் முற்பகுதி வாழ்க்கையைப் பற்றிய தணிகைமணி அவர்களின் விளக்கவுரையினை அறிந்துணர்ந்துத் தெளிவுறுவோம். 

*******************************************
சுவாமிகள் மிக்க நன்றியறிவு உள்ளவர். 'காமச் சேற்றில் கிடந்த தம்மை முருகர் கைதூக்கிக் கரை காட்டினரே' என்ற நன்றியறிவு இவர் பாடல்களில் நன்கு பொலிகின்றது. முருகனடியார்களுள் சிறந்த பலரும் 'அருணகிரியார் காம வலையிற் படவில்லை; அடியார்களின் நற்கதிக்காக - மாணிக்கவாசகர் முதலான பெரியோர்கள் பாடினவாறு, ஆசையிற் கொடிதான பெண்ணாசையை உலகோர் விலக்குவதற்காக உபசாரமாகப்  பெண்கள் வலையிற் பட்டேன் எனத் தாமும் கூறினரே ஒழிய வேறில்லை' என்பர். 

எனினும் அருணகிரியார் கூறும் மொழிகளைப் பார்க்கும் பொழுது - உதாரணமாக,

(1)
('வெருட்டி யாட்கொளும்') என்று துவங்கும் திருசிராப்பள்ளி திருப்புகழ்) 
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்
     அவிழ்த்த பூக்கமழ் குழலினு(ம்) நிழலினு(ம்)
          மதிக்கொணாத் தளர்இடையினு(ம்) நடையினு(ம்)...அவமேயான்

மயக்கமாய்ப் பொருள் வரும்வகை க்ருஷிபணு
     தடத்து மோக்ஷமதருளிய பலமலர்
          மணத்த வார்க்கழல் கனவிலு(ம்) நனவிலு(ம்) ...... மறவேனே

(2)
('காமாத்திரமாகி' என்று துவங்கும் விராலிமலைத் திருப்புகழ்)
ஏமாப்பற மோக இயல் செய்து
     நீலோற்பல ஆசில் மலருட(ன்)
          நேராட்ட விநோதமிடும் விழி ...... மடவார்பால்

ஏகாப்பழி பூணு(ம்) மருளற
     நீதோற்றி முனாளும் அடிமையை
          ஈடேற்றுதலால்உன் வலிமையை ...... மறவேனே

(3)
('பாரவித முத்தப் படீர' என்று துவங்கும் கதிர்காமத் திருப்புகழ்)
காமுகன் அகப்பட்ட ஆசையை மறப்பித்த
     கால்களை மறக்கைக்கும் ...... வருமோதான்

(4)
('மின்னினில் நடுக்கமுற்ற' என்று துவங்கும் பொதுத் திருபுகழ்)
கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த
     கன்மவசம் எப்படிக்கு ...... மறவேனே

'அவர் மெய்மையே பேசும் பெருந்தகையார் ஆதலின் - அவர் தமது சுய சரித்திரத்தையே நாணாது கூறி 'இத்தகைய கீழோனுக்கும் மேலோனாகிய நீ அருள் புரிந்தனையே' என முருகன் கருணையையே வியந்து பாராட்டித் தமது நன்றியறிவை புலப்படுத்தியுள்ளார் - என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

இதனால் அருணகிரியாரது பெருமை மேலெடுத்துக் காட்டுமே ஒழிய ஒருசிறிதும் தாழ்வு படாது. ஏனெனில் 'அவர் முன்செய்த தபோபலம் எத்துணைச் சிறப்புற்றிருக்க வேண்டும்' என்பது வெள்ளிடை மலை போல விளங்குகின்றது. முருகவேளின் ஆட்கொள்ளும் கருணைத் திறமும் மிகச் சிறப்பாகத் துலங்குகின்றது. 

வரகவி மார்க்கசகாயத் தேவரும் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில் 'மாதர்இரு விழியாகும் அம்புக்கும் மதனவேள் வாளிக்கும் நடுவாகியே மாலாகும் அருணகிரி' எனக் கூறியுள்ளனர் அல்லவா?. 
*******************************************