தெய்வயானை அம்மை திருக்கல்யாண நிகழ்வுகள் - இறுதிப் பகுதி (கந்தபுராண நுட்பங்கள்):

திருமண நிகழ்வு நடந்தேறிய பின்னர் குமாரக் கடவுள் தெய்வயானை தேவியுடன் அம்மையப்பரை அன்புடன் வலம் வந்து பெருவிருப்பத்துடன் அவர்களின் திருவடிகளில் மும்முறை வீழ்ந்துப் பணிகின்றான், 

(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 254)
இவ்வகை மன்றல் இயற்றிய பின்னைத்
தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
அவ்வையொ(டு) அத்தனை அன்பொடு சூழ்ந்து
வெவ்விதின் மும்முறை சேவடி தாழ்ந்தான்
-
(சொற்பொருள்: மன்றல் - திருமணம், அவ்வை - அன்னை, அத்தன் - தந்தை)

சிவமூர்த்தியும் அம்பிகையும் தங்களை வணங்கியிருந்த மணமக்கள் இருவரையும், திருவுள்ளத்தில் பெருமகிழ்வுடன் எடுத்தணைத்துப் பேரருள் புரிந்து, தங்களுடைய பக்கத்திலிருத்தி உச்சி மோந்து,  'நம்முடைய முதன்மைத் தன்மையினை உங்களுக்கு அளித்தோம்' என்றருள் புரிகின்றனர். அற்புதப் பகுதியிது, சிவசக்தியரின் வற்றாத தனிப்பெரும்கருணைக்கு ஓர் எல்லையுமுண்டோ? அண்டசராசரங்கள் யாவினுக்கும் தனிப்பெரும் தலைமை கொண்டருளும் ஆதிப்பரம்பொருள் இச்சமயத்தில் சிவஞான வடிவினனான நம் குமர நாயகனுக்கு அத்தலைமையினைத் திருமணப் பரிசாக அளித்தருள் புரிகின்றார், 
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 255)
அடித்தலத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத்(து)
எடுத்தணைத்தருள் செய்துதம் பாங்கரில் இருத்தி
முடித்தலத்தினில் உயிர்த்(து) உமக்(கு) எம்முறு முதன்மை
கொடுத்தும் என்றனர் உவகையால் மிக்க கொள்கையினார்
-
(சொற்பொருள்: பாங்கரில்  - பக்கத்தில், முடித்தலத்தினில் உயிர்த்து - உச்சி மோந்து)

தெய்வயானை தேவியுடன் திருக்கயிலை சென்று வணங்கிய குமாரக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

இலங்கையில் சூரசம்ஹார நிகழ்வும் அதன் பின்னர் திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை அம்மையுடனான திருமண நிகழ்வும் இனிதே நடந்தேற, அறுமுகக் கடவுள் அனைவருடனும் இந்திரலோகத்திற்கு எழுந்தருளிச் செல்கின்றான். அங்கு கந்தவேளின் ஆணைக்கிணங்க நான்முகக் கடவுள் இந்திர பட்டாபிஷேக வைபவத்தினைச் சிறப்புற செய்துவிக்கின்றார். பின் கந்தக் கடவுள் தெய்வயானை தேவியுடன் தேவலோகத்தில் சிறிது காலம் எழுந்தருளியிருந்துப் பின் அங்கிருந்து திருக்கயிலைக்குச் செல்லத் திருவுள்ளம் பற்றுகின்றான்.

(1)
வீரவாகு தேரினைச் செலுத்த, பூதகணத்தினர் பெருவெள்ளமென உடன்வர, தெய்வயானையாருடன் திருக்கயிலை மலையைச் சென்றடைகின்றான், 
-
(தேவ காண்டம்: கந்த வெற்புறு படலம் - திருப்பாடல் 3)
தேரிடைப் புகுந்த ஐயன் திறலுடை மொய்ம்பன் பாகாய்ப்
பாரிடைச் சென்று முட்கோல் பற்றினன் பணியால் உய்ப்பப்
போருடைச் சிலை வல்லோரும் பூதர்தம் கடலும் சுற்றக்
காருடைக் களத்துப் புத்தேள் கயிலைமால் வரையில்  போந்தான்
-
(திறலுடை மொய்ம்பன் - வீரவாகு, பாகாய் - தேர்ப் பாகனாய்)

(2)
அங்கு இனிது எழுந்தருளியிருக்கும் முக்கண்ணுடப் பரம்பொருள்; உமையன்னை இருவரின் திருவடிகளிலும், தெய்வயானை தேவியுடன் வீழ்ந்துப் பணிந்து அம்மையப்பரின் பெருங்கருணையை ஆசியாகப் பெற்று மகிழ்ந்து, அங்கிருந்து புறப்பட்டுக் கந்தமலைக்கு எழுந்தருளிச் செல்கின்றான், 
-
(தேவ காண்டம்: கந்த வெற்புறு படலம் - திருப்பாடல் 4)
போனதோர் காலை வையம் பொள்ளென இழிந்து முக்கண்
வானவன் தன்னை ஆயோடடிகளை வணக்கம் செய்து
மேனதோர் கருணையோடும் விடைபெறீஇ விண்ணுளோர்கள்
சேனையம் தலைவன் கந்தச் சிலம்பினில் கோயில் புக்கான்
-
(சொற்பொருள்: வையம் - தேர், பொள்ளென - விரைந்து, ஆய் - அன்னை, சிலம்பு - மலை)

தணிகை வேலவனிடம் வள்ளிநாயகிக்கு அருளுமாறு விண்ணப்பிக்கும் நாரத முனிவர் (கந்தபுராண நுட்பங்கள்):

(1)
குமாரக் கடவுள், வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காவல் காத்து வரும் வள்ளி நாயகிக்குப் பேரருள் புரியத் திருவுள்ளம் பற்றுகின்றான். தெய்வயானை தேவியைக் கந்தமலையிலேயே இருக்குமாறு விடுத்துத் தான் மட்டும் தனியே திருத்தணிகை மலைக்கு எழுந்தருளி வருகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 55)
இந்த முறையில் இவள் ஏனற்புனம் காப்ப
அந்த அளவில் அவளுக்கருள் புரியக்
கந்தவரை நீங்கிக் கதிர்வேலவன் தனியே
வந்து தணிகை மலையிடத்து வைகினனே
-
இந்நிலையில் நாரத மாமுனிவர் தினைப்புனத்திலிருக்கும் வள்ளியம்மையைத் தொலைவிலிருந்தே (வள்ளிதேவி அறியாதவாறு) தரிசித்துத் தொழுகின்றார். 'இங்கு எழுந்தருளியுள்ள என் அம்மை கந்தவேளை அடைவதற்கு முன்னமே அரியபெரிய தவமியற்றியவளாயிற்றே, இனி இவளுக்கருள் புரியுமாறு இக்கணமே சென்று கந்தக் கடவுளிடம் வேண்டுவோம்' என்று திருத்தணிகைக்கு விரைகின்றார்.
-
(2)
தணிகை மாமலையைச் சென்றடையும் நாரத முனிவர் வேலாயுதப் பெருங்கடவுளின் திருவடிகளைப் பன்முறை வீழ்ந்துப் பணிந்துப் போற்றிப் பின் வள்ளியம்மை குறித்து கூறத் துவங்குகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 60)
தணிகையங்கிரி தன்னில் வைகிய
இணையில் கந்தனை எய்தி அன்னவன்
துணைமென் சீறடி தொழுது பன்முறை
பணிதல் செய்திவை பகர்தல் மேயினான்

(3)
பெருமானே, சிவமுனிவரின் திருக்கண் பார்வையினால் மானின் வயிற்றிலிருந்து தோன்றிய வள்ளியம்மை வேடர்குலத்தினரால் வளர்க்கப் பெற்று இன்று இச்சமயத்தில் அங்குள்ள தினைப்புனமொன்றில் காவல் காத்து வருகின்றாள்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 61)
மோன நற்றவ முனிவன் தன்மகள்
மானின் உற்றுளாள் வள்ளி வெற்பினில்
கானவக் குலக் கன்னியாகியே
ஏனலைப் புரந்(து) இதணில் மேயினாள்
-
(சொற்பொருள்: நற்றவ முனிவன் - சிவமுனிவர், ஏனல் - திணைப்புனம், இதண் - பரண்)

(4)
நாரதர் மேலும் தொடர்கின்றார், 'குமரப் பெருமானே, வள்ளியம்மையின் பேரழகிற்குத் திருமகளின் எழிலையும் ஒப்புமையாகக் கூற இயலாது, அடியவன் கூறும் இவ்வுரை பொய்யன்று, ஆதலின் அவளைத் தாம் கண்டருள் புரிவீராக' என்று விண்ணப்பித்துப் பணிகின்றார், 

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 62)
ஐயனேஅவள் ஆகம் நல்லெழில்
செய்ய பங்கயத் திருவிற்கும் இலை
பொய்யதன்றிது போந்து காண்டிநீ
கையனேன் இவண் கண்டு வந்தனன்

(5)
நாரதர் இறுதியாய், 'ஐயனே, அண்டசராசரங்களுக்கும் தாயாக விளங்கஇருக்கும் அப்பெண்ணின் நல்லாள், முன்னமே திருமாலின் திருக்கண்களினின்றும் வெளிப்பட்டு உம்முடைய திருத்தோள்களை அடைவதற்கு நோன்பியற்றிய தன்மையினள். ஆதலால் தாம் விரைந்து சென்று என் அம்மைக்கு அருள் புரிதல் வேண்டும்' என்று பணிகின்றார்,

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 63)
தாயதாகும் அத்தையல் முன்னரே
மாயவன் மகள் மற்றுன் மொய்ம்பினைத்
தோய நோற்றனள் சொற்ற எல்லையில்
போய் அவட்கருள் புரிதியால் என்றான்

(6)
முழுமுதற்பொருளான குமர நாயகன் 'குற்றமற்ற நாரதனே, நீ மொழிந்த செய்தி மிக நன்று, இனி நீ செல்வாயாக' என்றருள் புரிகின்றான். பின்னர் 'வள்ளிநாயகியை காண வேண்டுமே' என்று திருவுள்ளத்தில் நினைந்தருளிக் காமநோயினால் மிகவும் வாட்டமுறுகின்றான், 

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 64)
என்ற வேலையில் எஃக வேலினான்
நன்று நன்றிது நவையில் காட்சியோய்
சென்றி நீயெனச் செப்பித் தூண்டியே
கன்று காமநோய்க் கவலையுள் வைத்தான்

ஸ்ரீவள்ளி தேவியின் அவதாரம், வள்ளிமலையின் அமைவிடம் மற்றும் சிறப்புகள் (கந்தபுராண நுட்பங்கள்):

படலத்தின் 2ஆம் திருப்பாடலிலேயே 'வள்ளிமலை தொண்டை நாட்டுப் பகுதியில் அமையப் பெற்றுள்ளது' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் ஐயத்திற்கு இடமின்றிக் குறித்து விடுகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 2):
அயன் படைத்திடும் அண்டத்துக் காவியாய்ப்
பயன் படைத்த பழம்பதி என்பரால்
நயன் படைத்திடு நற்தொண்டை நாட்டினுள்
வியன் படைத்து விளங்குமேற் பாடியே
-
வேலூர் மாவட்டத்தில், வேலூர்; காட்பாடி மற்றும் காங்கேயநல்லூரிலிருந்து சுமார் 25 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது வள்ளிமலை.

'வள்ளி நாயகியின் அவதாரத் தலமாகவும், அறுமுக தெய்வம் பல்வேறு காதல் திருவிளையாடல்கள் புரிந்தருள இருக்கும் ஷேத்திரமாகவும் விளங்கும் இவ்வள்ளி மலையின் அளவற்ற சிறப்புகளை விவரிக்கவும் இயலுமோ?' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் வியந்து போற்றுகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 7):
கள்ளிறைத்திடும் பூந்தண்டார்க் கடம்பணி காளை பன்னாள் 
பிள்ளைமைத் தொழின் மேற்கொண்டு பெட்புடன் ஒழுகும் வண்ணம்
வள்ளியைத் தன்பால் வைத்து வள்ளிவெற்பென்னும் நாமம்
உள்ள அக்கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற்றாமோ
-
(சொற்பொருள்: கள் - தேன், பிள்ளைமைத் தொழில் - காதல் திருவிளையாடல், பெட்பு - பெருமை)

அம்மலைப் பகுதியில் சிவமுனிவர் எனும் உத்தம சீலர், தெய்வங்களும் காண்பதற்கரிய ஆதிப்பரம்பொருளான சிவபெருமானைக் குறித்து, சைவப்பெருஞ்சமயத்தின் வழிநின்று அரியபெரிய தவமியற்றி வருகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 19):
அவ்வரை மருங்கு தன்னில் ஐம்புலன் ஒருங்கு செல்லச்
செவ்விதின் நடாத்தும் தொன்மைச் சிவமுனி என்னும் மேலோன்
எவ்வெவர் தமக்கும் எய்தா ஈசனை உளத்துள் கொண்டு
சைவநல் விரதம் பூண்டு தவம் புரிந்(து) இருத்தலுற்றான்

அச்சமயத்தில் ஆறுமுகக் கடவுளின் திருவருளால், அங்கு உலவியிருந்த அழகிய மானொன்றின் மீது சிவமுனிவரின் பார்வை பதிய, அக்கணமே அம்மான் கருவுருகின்றது. திருமாலின் திருக்கண்களினின்றும் முன்னர் தோன்றி, கந்தக் கடவுளை மணத்தால் அணைவதற்குப் பன்னெடுங்காலம் தவமியற்றியிருந்த சுந்தரவல்லி எனும் தேவி, இதுவே தக்கதொரு தருணமென்று உணர்ந்து அம்மானின் கர்ப்பத்துள் பிரவேசிக்கின்றாள். பின்னர் அம்மான் அங்குள்ள சிறு குழியொன்றினுள் வள்ளிநாயகியை ஈன்றெடுத்துச் செல்கின்றது. 

அப்பகுதியின் வேடர் தலைவனான நம்பிராஜன் என்பான் குழந்தையைத் தன் மனைவியிடம் எடுத்துச் சென்றளித்து மகிழ்கின்றான். 'வள்ளிக் குழியினின்றும் கண்டெடுக்கப் பெற்ற இவளை வள்ளியென்றே அழைப்போம்' என்று யாவரும் அறிவித்து மகிழ்கின்றனர், 

பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு முன்னர் பெற்றருளிய அமிழ்தினை, சிவபரம்பொருளின் திருமைந்தனான குமர நாயகனின் தேவியை இவ்விதமாய் வளர்த்து வரும் பெறற்கரிய பேறு பெற்றுள்ளமையால், 'இவ்வேடுவர்களின் தவச் சிறப்பினை யாரே அளக்க வல்லார்' என்று வியந்து போற்றுகின்றார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 45):
மூவா முகுந்தன் முதனாள் பெறும் அமுதைத்
தேவாதி தேவன் திருமைந்தன் தேவிதனை
மாவாழ் சுரத்தில்தம் மாமகளாப் போற்றுகையால்
ஆவா குறவர் தவமார் அளக்கவல்லாரே

12 வருடங்கள் கடந்து செல்ல, சிவஞானச் செல்வியான நம் வள்ளியம்மை இனிது வளர்ந்து மங்கைப் பருவத்தினை எய்தி, தேனினும் இனிய குரலில் ஆலோலம் பாடியவாறு தினைப்புனத்தினைக் காவல் காத்து வருகின்றாள்.

வள்ளிமலையிலொரு அற்புதக் காதல் திருக்காட்சி (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தக்கடவுள் வள்ளி நாயகியின் மீதான காதல் நோயினால் பெரிதும் வருந்தித் திருத்தணியிலிருந்து வள்ளிமலைக்கு, வேடுவ இளைஞனின் திருக்கோலத்தில் எழுந்தருளிச் செல்கின்றான். அங்குள்ள தினைப்புனத்தில், விவரிக்கவொண்ணா இளமையழகோடு கூடிய வள்ளி தேவி காவல் காத்து வரும் பரணுக்கு அருகாமையில் மெல்ல நடந்து செல்கின்றான்.

(1)
வள்ளி நாயகியிடம், 'வாள் போன்று உயிரையுண்ணும் கண்களை உடைய நங்கையே, இப்புவியிலுள்ள பெண்களுக்கெல்லாம் தலைவியென விளங்கியிருக்கும் உன்னை இத்தன்மையில் தினைப்புனக் காவலுக்கு வைத்தவர் எவரோ? அவர்களுக்கு பிரமன் சிறிதும் ஆய்ந்தறியும் உணர்வினைப் படைக்கவில்லை போலும்' என்று உரையாடலை மெதுவே துவக்கி வைக்கின்றான்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 70)
நாந்தகம்அனைய உண்கண் நங்கைகேள் ஞாலம் தன்னில்
ஏந்திழையார்கட்கெல்லாம் இறைவியாய் இருக்கும் நின்னைப்
பூந்தினை காக்க வைத்துப் போயினார் புளினர்ஆனோர்க்(கு)
ஆய்ந்திடும் உணர்ச்சியொன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்
-
(சொற்பொருள்: நாந்தகம் - வாள், உண்கண் - உயிரை உண்ணும் கண்கள், ஏந்திழையார் - பெண்கள்)

(2)
(வள்ளிதேவி ஏதொன்றும் கூறாது நிற்க), 'நீண்ட கருங்கூந்தலை உடைய பெண்ணே, உன் மீதுள்ள காதலால் அறிவு தளர்ந்த நிலையிலுள்ள என்னிடம் உன் பெயரினைக் கூறுவாய், அல்லது உனது ஊரினையாவது விளம்புவாய், அதற்கும் இசையாவிடில் உன்னைத் தோற்றுவித்த பெருமையுடைய உன் ஊருக்குச் செல்லும் மார்க்கத்தையாவது பகர்வாய்' என்று கந்தப்பெருமான் உருகுகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 71)
வாரிரும் கூந்தல் நல்லாய் மதிதளர்வேனுக்(கு) உந்தன் 
பேரினை உரைத்தி மற்றுன் பேரினை உரையாய் என்னின்
ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியாதென்னில்
சீரிய நின் சீறூர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்

(3)
(வள்ளிதேவி தொடர்ந்து அமைதி காக்க), குமர நாயகன் பெரிதும் ஏக்கமுற்று, 'பெண்ணே, உன் வாய் திறந்து வார்த்தையொன்று உரைப்பாய், அல்லது சிறு புன்முறுவலாவது புரிந்து என் உயிரைக் காப்பாய், அதுவும் அமையாதெனில் உன் கடைக்கண்களால் சற்றேனும் பார்ப்பாய், விரக நோயினால் பெரிதும் வருந்தி நிற்கும் நான் உய்வு பெறுமாறு வழியொன்றினைப் புகல்வாய். இதன் பின்னரும் மனமுருகாது நீ நின்றிருந்தால் அப்பழி உன்னையே சாரும், ஆதலின் பாராமுகத்தினைத் தவிர்ப்பாய்' என்றுரைத்துத் தளர்கின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 72)
மொழியொன்று புகலாயாயின் முறுவலும் புரியாயாயின்
விழியொன்று நோக்காயாயின் விரகமிக்குழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின் மனமும் சற்றுருகாயாயின்
பழியொன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி என்றான்

வேங்கை மரமாகி நின்ற வேலவன் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வேடுவ இளைஞனின் வடிவெடுத்துப் பல்வேறு காதல் மொழிகளால் வள்ளி நாயகியின் அன்பினைப் பெற முயன்று கொண்டிருக்கையில், வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜன் தனது வேடர் கூட்டத்தினருடன் மகளைக் காணும் பொருட்டு தினைப்புனத்திற்கு வருகின்றான். மறுகணமே அறுமுகப் பெருமான் ஒரு வேங்கை மரமாகி அவ்விடத்தே நிற்கின்றான். 

(1)
அம்மரத்தின் அடிப்பகுதி ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களாகவும், நடுப்பகுதி மேன்மைமிகு சிவாகம நூல்களாகவும், கிளைகள் யாவும் பல்வேறு கிளைகளாகவும் விளங்குமாறு கந்தப்பெருமான் எழுந்தருளி இருக்கின்றான், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 75)
ஆங்கது காலை தன்னின் அடிமுதல் மறைகளாக
ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூலதாகப்
பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்

(2)
வள்ளிக்கிழங்குகள்; தேன்; தினைமாவு; கலைமானின் பால்; இவற்றொரு இன்னபிற உணவு வகைகளையும் தன்னுடைய தவப் புதல்வியான வள்ளிதேவிக்கு அன்புடன் அளிக்கும் நம்பிராஜன், தினைப்புனத்தின் நடுவில் புதுமையாகத் தோன்றியிருந்த வேங்கை மரத்தினைக் கண்டு வியப்புறுகின்றான், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 76)
கானவர் முதல்வன் ஆங்கே கதுமென வந்து தங்கள்
மானினி தன்னைக் கண்டு வள்ளியம் கிழங்கு மாவும் 
தேனொடு கடமான் பாலும் திற்றிகள் பிறவு நல்கி
ஏனலம் புனத்தில் நின்ற யாணர் வேங்கையினைக் கண்டான்
-
(சொற்பொருள்: யாணர் - புதுமையான, கடமான் பால் - கலைமானின் பால்)

உடனிருந்த வேடர்கள் வேங்கை மரத்தினைக் கண்டு, 'எவ்விதம் இம்மரம் இங்கு தோன்றியது, தீங்கு விளைவிக்கும் பொருட்டே இது தோன்றியுள்ளது, இதனைக் காலம் தாழ்த்தாது கோடரியால் வெட்டி வீழ்த்துவோம்' என்று கடும் சினத்துடன் ஆரவாரம் செய்கின்றனர். நம்பிராஜன் அவர்களை அமைதியுறச் செய்து மகளான வள்ளியிடம், 'தினைப்புனத்தின் நடுவே இம்மரம் எவ்விதம் தோன்றியது, உரைப்பாயாக' என்று வினவுகின்றான். 

(4)
வள்ளி நாயகியும் வேடுவனாய் வந்திருந்த இளைஞனைக் குறித்து ஏதொன்றும் கூறாமல், 'தந்தையே, என்றுமில்லாத மாயமாய் இம்மரம் இங்கு புதிதாய்த் தோன்றியுள்ளது, இதன் தன்மையினை அறியாமல் நடுக்கமுற்று நிற்கின்றேன், இதுவே இங்கு நிகழந்தது' என்றுரைக்கின்றாள், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 80)
தந்தையாங்குரைத்தல் கேளாத் தையலும் வெருவி ஈது
வந்தவாறுணர்கிலேன் யான் மாயம்போல் தோன்றிற்றையா
முந்தைநாள் இல்லாதொன்று புதுவதாய் முளைத்ததென்னாச்
சிந்தைமேல் நடுக்கமெய்தி இருந்தனன் செயலிதென்றாள்

(5)
நம்பிராஜனும் சிவஞானச் செல்வியான நம் வள்ளியம்மையிடம், 'மகளே, அஞ்சாதே, இம்மரம் உனக்கு அரியதொரு துணை புரியவே இவ்விடம் தோன்றியுள்ளதாக உணர்கின்றேன், ஆதலின் நீ யாதொரு கவலையுமின்றி இவ்விடம் இருந்து வருவாயாக' என்று ஆறுதல்மொழி கூறி அவ்விடம் விட்டுச் செல்கின்றான்.  
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 81)
என்றிவை சொற்றபின் ஏந்திழை அஞ்சேல்
நன்றிவண் வைகுதி நாண்மலர் வேங்கை
இன்துணையாய் இவண் எய்தியதென்னாக்
குன்றுவன் வேடர் குழாத்தொடு போனான்

தொடரும் கந்தக்கடவுளின் காதல் முயற்சிகள் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வள்ளி தேவியின் காதலைப் பெற பலவாறு முயல்கின்றான். இதற்கிடையில் வள்ளி நாயகியின் தந்தையான நம்பிராஜன் தன் கூட்டத்தினருடன் அங்கு வர, குமர நாயகன் வேங்கை மரமாக உருவெடுக்கின்றான். அவர்கள் அனைவரும் சென்ற பின்னர், மீண்டும் முன்னர் கொண்டிருந்த வேடுவத் திருக்கோலத்தில் தோன்றி நிற்கின்றான். தன் சுயவுருவினைக் காண்பித்துப் பேரருள் புரியுமுன்னம், எவ்விதமாவது தேவியின் காதலைப் பெற்று விட வேண்டுமென்பதில் வேலவன் உறுதியாக இருக்கின்றான். 

(1)
'குறவர் குல மங்கையே, உனையன்றி எனக்கினிப் புகலேதுமில்லை, ஆதலால் உன்னை இனி ஒருக்கணமும் பிரியேன்' என்று உருகுகின்றான். அண்ட சராசரங்களும் கந்த நாயகனே சரணென்றிருக்க, வேலவனோ இங்கு 'வள்ளிதேவியே சரண்' என்றுரைத்துக் காதல் திருவிளையாடல் புரிகின்றான், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 84)
கோங்கென வளர்முலைக் குறவர் பாவையே
ஈங்குனை அடைந்தனன் எனக்கு நின்னிரு
பூங்கழல் அல்லது புகலொன்றில்லையால்
நீங்கலன் நீங்கலன் நின்னை என்றுமே

(2)
குற மங்கையே, 'நீ அனுதினமும் நீராடும் சுனை நீராகவும், மேனியில் பூசிக் கொள்ளும் சந்தனக் குழம்பாகவும், சூடி மகிழும் மலர்களாகவும் விளங்கியேனும் உன் மேனியோடு தொடர்பு கொள்ளும் பேற்றினை நான் பெறாது தவித்து நிற்கின்றேன், இனியெனக்கொரு செயலும் உள்ளதோ?' 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 87)
கோடிவர் நெடுவரைக் குறவர் மாதுநீ
ஆடிய சுனையதாய் அணியும் சாந்தமாய்ச்
சூடிய மலர்களாய்த் தோயப் பெற்றிலேன்
வாடினன் இனிச்செயும் வண்ணம் யாவதே

(3)
காதலை யாசகமாகப் பெறவும் நம் கந்தப் பெருமான் தயாராக இருக்கின்றான். இவ்வாறு பலப்பல கூறி நெகிழ்ந்துருகி நிற்கும் கந்தவேளின் கூற்றுகளை வள்ளியம்மை நன்றாகச் சிந்தித்துத் தெளிந்து 'இங்கிவர் கருத்துக்கள் மிக்க நன்று' என்று உள்ளத்தில் நாணமுற்றவாறு கூறத் துவங்குகின்றாள், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 89)
என்றிவை பலபல இசைத்து நிற்றலும் 
குன்றுவர் மடக்கொடி குமரன் சிந்தையில்
ஒன்றிய கருத்தினை உற்று நோக்கியே
நன்றிவர் திறமென நாணிக் கூறுவாள்

(4)
வள்ளிதேவி 'தினைப்புனத்தினைக் காத்து நிற்கும் எளியவள் நான், நீங்களோ உலகிற்கே அருள் புரிந்து நிற்கும் இறைவர், ஆதலின் இவ்விதம் என்னுடனான கலவியினை விரும்புவது தகுமோ? 'புலி பசித்து நிற்பினும் புல்லை உண்ணுமோ?' என்று மறுமொழி கூறுகின்றாள்,
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 91)
இலைமுதிர் ஏனல் காத்திருக்கும் பேதையான்
உலகருள் இறைவர்நீர் உளமயங்கிஎன்
கலவியை விரும்புதல் கடனதன்றரோ
புலியது பசியுறில் புல்லும் துய்க்குமோ
-
இவ்விடத்தில் ஒரு நுட்பம், நம் கந்தக் கடவுள் எழுந்தருளியிருப்பதோ வேடுவ இளைஞனின் தோற்றத்தில், வள்ளியம்மையும் வேடர் குலத் தோன்றலே. எனில் 'நீங்கள் உலகிற்கே அருள் புரியும் இறைவர்' என்று தேவி எத்தன்மையில் உரைக்கின்றாள்? எனில் காதலை மறுத்துரைக்கையில் வேலவனின் மனம் வாட்டமுறாதிருக்க நம் வள்ளியம்மை தன்னைத் தாழ்த்தியும், வேடுவனாய் காதல் பேசி நிற்கும் குமர நாயகனை உயர்த்தியும் தன்மையாய்க் கூறுகின்றாள்.