இறந்த வேடுவர்களை உயிர்ப்பிக்க விண்ணப்பிக்கும் நாரத மாமுனி (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமான் வள்ளி நாயகியின் இல்லம் நாடிச் சென்று, தேவியை அழைத்துக் கொண்டு வள்ளிமலையின் எல்லைக்கப்பாலுள்ள சோலையொன்றிற்குச் செல்கின்றான். மகளைத் தேடியவாறு அவ்விடத்திற்கு வரும் நம்பிராஜனும்; மற்றுமுள்ள வேடுவர்களும், தங்கள் குலதெய்வமென்று உணராமல், வேடுவக் கோலத்திலிருந்த கந்தப் பெருமானை அம்புகளால் கடுமையாகத் தாக்கத் துவங்குகின்றனர். 

அதுகண்டு பதறும் வள்ளி தேவி அறியாமையுடைய அவர்களைத் தண்டிக்குமாறு வேலவனிடம் முறையிடுகின்றாள். குமரப் பெருமானின் ஏவலால், கொடியிலிருந்த சேவல் அவ்விடத்தே தோன்றி பெருவொலி எழுப்ப, வேடுவர்கள் யாவரும் அக்கணமே மடிந்து வீழ்கின்றனர். 

(1)
சீற்றம் சிறிது தணிந்த பின்னர், வளர்ப்புத் தந்தையும் மற்றுமுள்ள சுற்றத்தினரும் இறந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்ணுற்று அம்மை வாட்டமுறுகின்றாள்.  வள்ளிதேவிக்கு அவர்கள் பாலுள்ள அன்பினை உலகறியச் செய்யும் திருவுள்ளத்துடன் கந்தப் பெருமான் அவர்களை நோக்கிச் செல்ல, அம்மையும் உடன் தொடர்கின்றாள். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 185)
தந்தையும் முன்னையோரும் தமரும் வீழ்ந்திறந்த தன்மை
பைந்தொடி வள்ளி நோக்கிப் பதைபதைத்(து) இரங்கிச் சோரக்
கந்தனத் துணைவி அன்பு காணுவான் கடிகா நீங்கிச்
சிந்தையில் அருளோடேக அனையளும் தொடர்ந்து சென்றாள்

(2)
இதற்கிடையில் அவ்விடத்தில் நாரத மாமுனி தோன்றுகின்றார், சிவகுமரனையும் வள்ளியம்மையையும் பணிந்து வணங்கி, 'ஐயனே, அம்மையை ஆட்கொள்ளும் பொருட்டு நீங்கள் புரிந்தருளிய திருவிளையாடல்கள் யாவற்றையும் அடியேனுக்கு விளக்கமாகக் கூறியருள் புரிவீர்' என்று விண்ணப்பிக்கின்றார். 
-
கந்தப் பெருமானும், தினைப்புனத்தில் வேடுவக் கோலத்தில் வள்ளி தேவியிடம் காதல் மொழி பேசியது, வேங்கை மரமாகவும் வயோதிகக் கோலத்திலும் தோன்றித் திருவிளையாடல் புரிந்தது, விநாயகப் பெருமானின் உதவியுடன் தேவியின் அன்பைப் பெற்றது, தேவிக்குத் தன் சுயவுருவைக் காண்பித்து ஆட்கொண்டது, இறுதியில் தேவியுடன் அச்சோலைக்கு வரும் வழியில் நம்பிராஜனும் வேடுவர்களும் தன்னால் மாண்டது' என்று நடந்தேறிய நிகழ்வுகள் யாவற்றையும் கூறியருள் புரிகின்றான்.   
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 186)
செல்ல நாரதப்பேர் பெற்ற சீர்கெழு முனிநேர் வந்து
வல்லியோடிறைவன் தன்னை வணங்கிநின் செய்கை எல்லாம் 
சொல்லுதி என்ன அன்னான் தோகையைக் காண்டல் தொட்டு
மல்லல் வேட்டுவரை அட்டு வந்திடும் அளவும் சொற்றான்

(3)
வேலவனின் திருவிளையாடல்களைக் கேட்கப் பெறும் நாரத முனிவனும், 'ஐயனே, வேடுவர்களின் அறியாமை காரணமாக அவர்களைத் தண்டித்தது முறையே, எனினும் அவர்களுக்கு மீண்டும் நல்லருள் புரியாமல் வேடர்குலத் தோன்றலான அம்மையுடன் இவ்விடம் விட்டு அகலுதல் முறையோ?' என்று விண்ணப்பித்துப் பணிகின்றார். கருணைக் கடலான உமை மைந்தனும், 'நாரதா, நீ சொல்வதே நமக்கும் ஏற்புடையது' என்றருளிச் செய்கின்றான்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 187)
பெற்றிடு தந்தை தன்னைப் பிறவுள சுற்றத்தோரைச்
செற்றமொடட்டு நீக்கிச் சிறந்த நல்லருள் செயாமல்
பொற்றொடி தன்னைக் கொண்டு போந்திடத் தகுமோ என்னா
மற்றிவை முனிவன் கூற வள்ளலும் அஃதாம் என்றான்

வேடுவர்களுக்குக் காட்சியளித்த வேலாயுதக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வள்ளிதேவியைப் பிறிதொருவர் அறியாதவாறு வள்ளிமலையின் எல்லைப் பகுதிக்கப்பால் அழைத்துச் செல்ல, வழியில் இடைமறித்து தாக்கும் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும் மற்றுமுள்ள வேடர் யாவரும், முருகப் பெருமானின் திருவிளையாடலால் மாண்டொழிந்து மண்ணில் வீழ்கின்றனர். பின்னர் அந்நிகழ்வினால் ஏற்பட்டிருந்த வள்ளி நாயகியின் வாட்டம் போக்கவும், அச்சமயத்தில் அவ்விடத்திற்கு வந்திருந்த நாரத முனிவனின் வேண்டுகோளுக்காகவும், வேலவன் வேடர்களுக்கு அருள் புரியத் திருவுள்ளத்து எண்ணுகின்றான், 

வள்ளி நாயகியிடம், 'தேவி, நமக்குப் பழி உண்டாகுமாறு நம்முடன் போரிட்டு மாண்டுள்ள உன் சுற்றத்தினரை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வாயாக' என்றருளிச் செய்கின்றான்.

(1)
வடிவேலவனின் அவ்வுரை கேட்டு மகிழும் வள்ளியம்மையும், 'இன்னுயிர் நீங்கப் பெற்று இவ்விடத்தில் வீழ்ந்துள்ள நம் சுற்றத்தினர் யாவரும் இனி எழுவீர்களாக' என்றருள் புரிகின்றாள் (குறிப்பு: 'ஆன்மாவானது மும்மலங்களையும் களைந்து இறைவனுடன் ஒன்றும் பொழுது, அவ்வான்மாவின் சங்கல்பமானது இறைச் சங்கல்பமாகிப் பயனை அக்கணமே நல்கும்' எனும் தத்துவக் குறியீடு இதனுள் பொதிந்துள்ளது). மாண்ட வேடர்கள் யாவரும் உறக்கத்தினின்று எழுமாற்போல் துடித்து எழுகின்றனர்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 189)
விழுமிய உயிர்கள் சிந்தி வீழ்ந்த நம்கேளிர் யாரும்
எழுதிர் என்றருளலோடும் இருநிலத்(து) உறங்குகின்றோர்
பழைய நல்லுணர்வு தோன்றப் பதைபதைத்(து) எழுதற்கொப்பக்
குழுவுறு தமர்களோடும் குறவர்கோன் எழுந்தான் அன்றே

(2)
கருணைப் பெருங்கடலான வேலாயுதப் பெருங்கடவுள் அவ்வேடர்களுக்கு ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருத்தோள்களும்; ஆயுதங்களோடு கூடிய பன்னிரு திருக்கரங்களுமாய்த் திருக்காட்சி அளித்துப் பேரருள் புரிகின்றான். நம்பிராஜன் உள்ளிட்ட வேடர்கள் யாவரும் காண்பதற்கரிய அத்தரிசனத்தால் அற்புதமுற்று, அறுமுக தெய்வத்தின் திருவடிகளில் வீழ்ந்துப் பணிகின்றனர். பின்னர் தங்கள் உள்ளக் கருத்தினைக் கூறத் துவங்குகின்றனர்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 190)
எழுந்திடுகின்ற காலை எம்பிரான் கருணை வெள்ளம்
பொழிந்திடு வதனமாறும் புயங்கள் பன்னிரண்டும் வேலும்
ஒழிந்திடு படையுமாகி உருவினை அவர்க்குக் காட்ட
விழுந்தனர் பணிந்து போற்றி விம்மிதராகிச் சொல்வார்

(3)
ஐயனே, வேடர்களாகிய எங்களின் குலதெய்வமான நீங்களே இம்முறையில் வஞ்சகமாய் வேடர்குலச் செல்வியைக் கவர்ந்து செல்லுதல் முறையோ? எங்கள் மரபுமுறைக்கு இதனால் பழியன்றோ எய்தியுள்ளது, காக்க வேண்டிய அன்னையே விடம்தனை ஊட்டினால் அக்குழந்தைகளைக் காப்பாரும் உளரோ?  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 191)
அடுந்திறல் எயினர் சேரி அளித்திடு நீயே எங்கள்
மடந்தையைக் கரவில் வௌவி வரம்பினை அழித்துத் தீரா
நெடுந்தனிப் பழியதொன்று நிறுவினை புதல்வர் கொள்ள
விடந்தனை அன்னை ஊட்டின் விலக்கிடுகின்றார் உண்டோ

(4)
நம்பிராஜன் மேலும் தொடர்கின்றான், 'எவரொருவரும் அறியாதவாறு எங்கள் வள்ளியுடன் காவல் யாவையும் கடந்து இவ்விடத்திற்கு வந்துள்ளீர். இனியேனும் எங்கள் சிற்றூருக்கு வருகை புரிந்து, அங்குத் திருமண வேள்வித் தீயின் சாட்சியாக எங்கள் தவச் செல்வியை முறையாய் மணந்துப் பின்னர் அவளை உம்முடைய ஊருக்கு அழைத்துச் செல்வீர்' என்று விண்ணப்பிக்கின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 192)
ஆங்கது நிற்க எங்கள் அரிவையை நசையால் வௌவி
நாங்களும் உணரா வண்ணம் நம்பெரும் காவல் நீங்கி
ஈங்கிவண் கொணர்ந்தாய் எந்தாய் இன்னினிச் சீறூர்க்கேகித்
தீங்கனல் சான்றா வேட்டுச் செல்லுதி நின்னூர்க்கென்றார்

வள்ளியம்மை திருக்கல்யாண வைபவம் (கந்தபுராண நுட்பங்கள்):

வள்ளிதேவியின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும்; வளர்ப்புத் தாயும்; செவிலித் தாயும் மற்றுமுள்ளோரும் வள்ளி நாயகிக்கும் முருகப் பெருமானுக்குமான திருமண ஏற்பாடுகளை, வேடுவ குலத்தினரின் மரபுவழி நின்று சிறப்புற செய்கின்றனர்.  

மணப்பந்தலில் அருகே அமர்ந்திருந்த வள்ளிதேவியைக் கந்தப் பெருமான் கருணையோடு பார்த்தருள, அக்கணமே வேடுவ குலத்தினர் புனைந்திருந்த மணக்கோலம் நீங்கி, வள்ளியம்மை தன்னுடைய அவதாரத்திற்கு முன்பிருந்த, திருமாலின் திருக்கண்களினின்றும் தோன்றியிருந்த சுந்தரவல்லி தேவியின் தெய்வத் திருக்கோலத்தினைப் பெறுகின்றாள். அது கண்டு நம்பிராஜன் உள்ளிட்ட வேடுவ குலத்தினர் 'இவள் நம்மிடையே பிறந்து வளர்ந்தது நம்முடைய தவப்பயனே' என்று வியந்து போற்றுகின்றனர்.

(1)
மங்களமான அத்தருணத்தில் வேடுவ மன்னனான நம்பிராஜன் கந்தவேளின் திருக்கரத்தில் வள்ளியம்மையின் கரங்களை வைத்து, 'எங்கள் தவப்பயனாய் வந்துதித்த இவளை பெருவிருப்பத்துடன் உமக்குத் தருகின்றோம்' என்று நீரினால் தாரை வார்த்தளிக்க, அறுமுகப் பெருமான் நம் வள்ளியம்மையை ஏற்றருள் புரிகின்றான். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 199)
அந்தநல் வேலை தன்னில் அன்புடைக் குறவர் கோமான்
கந்தவேள் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
நம்தவமாகி வந்த நங்கையை நயப்பால் இன்று
தந்தனன் கொள்கவென்று தண்புனல் தாரை உய்த்தான்

(2)
இந்நிகழ்விற்குப் பின்னர், நல்ல தவமுடைய நாரத மாமுனிவன் நான்மறைகளாகிய 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்கள்' முன்னிறுத்தும் வைதீக நெறியின் வழியின் நின்று, யாதொரு குற்றமும் நேராதவாறு திருமண வேள்விச் சடங்குகளை செய்துவிக்கின்றார். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 200)
நற்றவம் இயற்றும் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
கொற்றமதுடைய வேலோன் குறிப்பினால் அங்கியோடு
மற்றுள கலனும் தந்து வதுவையின் சடங்கு நாடி
அற்றமதடையா வண்ணம் அருமறை விதியால் செய்தான்

(3)
அச்சமயத்தில் விண்ணில் நான்முகக் கடவுளான பிரமன்; பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு மற்றும் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் குழுவும், இவர்களுக்கு நடுநாயகமாய் ஆதிப்பரம்பொருளான சிவமூர்த்தியும் மலைமகளான அன்னை பார்வதிதேவியும் எழுந்தருளித் தோன்றுகின்றனர். சிவசக்தியர் திருமண நிகழ்வுகள் முழுவதையும் விண்ணிலிருந்து கண்டருளிய அற்புதத்தினைக் கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 201)
ஆவதோர் காலை தன்னில் அரியும் நான்முகனும் வானோர்
வொடு பிறரும் சூழக் குலவரை மடந்தையோடும் 
தேவர்கள் தேவன் வந்து சேண்மிசை நின்று செவ்வேள்
பாவையை வதுவை செய்யும் பரிசினை முழுதும் கண்டான்

(4)
ஆறுமுகப் பெருங்கடவுள் (வேடுவர்கள் ஒருசிறிதும் அறியாத தன்மையில்) விண்மிசை எழுந்தருளியிருந்த முக்கண் முதல்வரையும் உமையன்னையையும் அஞ்சலி கூப்பிப் பணிந்து வணங்குகின்றான். பின்னர் ஆர்ப்பரித்து வாழ்த்திப் போற்றியிருந்த மற்றுமுள்ளோர் யாவருக்கும் திருவுள்ளம் மகிழ்ந்துப் பேரருள் புரிகின்றான்.
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 203)
அறுமுகமுடைய வள்ளல் அன்னது நோக்கிச் சீறூர்
இறையதும் உணரா வண்ணம் இமையமேல் அணங்கினோடும் 
கறையமர் கண்டன் தன்னைக் கைதொழு(து) ஏனையோர்க்கு
முறைமுறை உவகை யோடு முழுதருள் புரிந்தான் அன்றே

வள்ளிதேவியோடு திருக்கயிலையில் அம்மையப்பரிடம் ஆசி பெறுதல் (கந்தபுராண நுட்பங்கள்):

திருப்பரங்குன்றத்தில் நடந்தேறிய தெய்வயானை அம்மை திருமணத்திற்குப் பின்னர் தேவலோகம் சென்று இந்திரனுக்கு முடிசூட்டுவித்துப் பின் அங்கிருந்து திருக்கயிலை சென்று சிவசக்தியரிடம் ஆசி பெற்று இறுதியாய்க் கந்தமலைக்கு எழுந்தருளிச் செல்வதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். 

மற்றொருபுறம் வள்ளி மலையில் நடந்தேறிய திருமண நிகழ்விற்குப் பின்னரோ, சிறிது காலம் திருத்தணியில் எழுந்தருளியிருந்து அதன் பின்னர் வள்ளி தேவியோடு நேராக கந்தமலைக்கு எழுந்தருளிச் சென்று விடுவதாகவே கச்சியப்ப சிவாச்சாரியார் விவரிக்கின்றார். 

எனினும் வள்ளிதேவியுடன் கந்தப் பெருமான் அம்மையப்பரிடம் ஆசி பெறும் திருக்காட்சியையும் அடியவர்களோடு சேர்ந்து தரிசித்து இன்புறவே இத்திருக்காட்சி உருவாக்கப் பெற்றுள்ளது (ஓம் சரவண பவ)!!!

திருத்தணியின் சிறப்பினை வள்ளி நாயகிக்கு எடுத்துரைக்கும் ஆறுமுகக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்)

ஆறுமுகக் கடவுள் வள்ளிமலையில் வள்ளி நாயகியை மணம் புரிந்தருளிப் பின் அம்மையுடன் திருத்தணிப் பதியில் சிறிது காலம் எழுந்தருளி இருக்கின்றார். அச்சமயத்தில் வள்ளி தேவியார் கந்தவேளின் திருவடி தொழுது, 'இம்மலையின் இயல்பினைக் கூறியருள்வீர்' என்று விண்ணப்பிக்கின்றார். 

கந்தக் கடவுளும் திருவுள்ளம் மகிழ்ந்து, 'வள்ளியே கேள், மலர்களில் தாமரை போல், நதிகளில் கங்கை போல், நிலப்பகுதியிலுள்ள திருத்தலங்களில் காஞ்சீபுரப் பதியைப் போல், மலைத் தலங்களுள் சிறந்தது இத்திருத்தணிப் பதியே, 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 218)
விரையிடம் கொளும் போதினுள் மிக்க பங்கயம்போல்
திரையிடம் கொளும் நதிகளில் சிறந்த கங்கையைப்போல்
தரையிடம் கொளும் பதிகளில் காஞ்சியம் தலம்போல்
வரையிடங்களில் சிறந்ததித் தணிகைமால் வரையே

மந்திர; மேரு பர்வதங்களைக் காட்டிலும் திருக்கயிலை மலை மீது எவ்விதம் நீலகண்டப் பரம்பொருளான சிவமூர்த்தி பெருவிருப்புடன் எழுந்தருளி இருக்கின்றாரோ அது போல், இப்புவியில் அழகு பொருந்திய மலைகள் பல இருப்பினும் இத்தணிகை மலையே நமக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாகும்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 220)
மந்தரத்தினும் மேருமால் வரையினும் மணிதோய்
கந்தரத்தவன் கயிலையே காதலித்தது போல்
சுந்தரக்கிரி தொல்புவி தனில் பலஎனினும்
இந்த வெற்பினில் ஆற்றவும் மகிழ்ச்சி உண்டெமக்கே
-
(சொற்பொருள்: கந்தரம் - கழுத்து)

இம்மலையினைத் தொழுபவரின் பாவங்கள் யாவுமே மறைந்தொழியும். பெரும் காதலுடன் இம்மலைக்கு வருகை புரிந்து, இங்குள்ள சுனையில் விதிப்படி மூழ்கி நம்மைத் தொழுபவர் 'சாலோக முத்தி' பெற்று நம் உலகில் மகிழ்ந்திருப்பர்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 224)
இந்த வெற்பினைத் தொழுதுளார் பவமெலாம் ஏகும்
சிந்தை அன்புடன் இவ்வரையின் கணே சென்று
முந்த நின்ற இச்சுனைதனில் விதிமுறை மூழ்கி
வந்து நந்தமைத் தொழுதுளார் நம்பதம் வாழ்வார்
-
(சொற்பொருள்: பவம் - பாவம்)

ஐந்து தினங்கள் இத்தணிகை மலையில் தங்கியிருந்து, நம் திருவடிகளையே சரணமெனக் கொண்டுக் காதலுடன் வழிபடும் தவமுடையோர், தத்தமது உள்ளத்திலுள்ள விருப்பங்கள் யாவையும் பரிபூரணமாய் அடையப்பெற்று மகிழ்வர், பின்னர் ஒருகுறைவுமில்லாத நிலையில் சிவமுத்திப் பேற்றினைப் பெற்று இன்புறுவர்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 225)
அஞ்சு வைகல் இவ்வகன் கிரி நண்ணியெம் அடிகள்
தஞ்சமென்(று) உளத்துன்னியே வழிபடும் தவத்தோர்
நெஞ்சகம் தனில் வெஃகிய போகங்கள் நிரப்பி
எஞ்சல்இல்லதோர் வீடுபேறடைந்(து) இனிதிருப்பார்
-
(சொற்பொருள்: எஞ்சல் - குறைதல்)

இத்தணிகையில் புரியப் பெறும் தர்ம காரியங்கள் ஒன்றுக்குப் பலப்பல மடங்குகளாகப் பெருகி நற்பலன்களை நல்கும், மற்றொரு புறம் இங்கு வாழ்வோரால் (பாவச்செயலென்று அறியாமல்) புரியப் பெறும் பாவங்கள் பலவாயினும் அவை ஒன்றாகக் குறைந்து விடும், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 228)
உற்பல வரையின் வாழ்வோர் ஓரொரு தருமம் செய்யில்
பற்பலவாகி ஓங்கும் பவங்களில் பலசெய்தாலும் 
சிற்பமதாகி ஒன்றாய்த் தேய்ந்திடும் இதுவேயன்றி
அற்புதமாக இங்ஙன் அநந்த கோடிகளுண்டன்றே

கந்தமலையில் வள்ளியம்மை; தெய்வயானையார் சந்திப்பு (கந்தபுராண நுட்பங்கள்):

அறுமுகப் பெருமான் வள்ளிதேவியை மணந்தருளிய பின்னர் தேவியுடன் திருத்தணியில் சிறிது காலம் எழுந்தருளியிருந்துப் பின்னர் கந்தமலைக்குச் செல்கின்றான். திருவாயிலில் பூதகணத்தினர் வணங்கிப் போற்ற, தெய்வயானை தேவி வாழும் கோயிலுக்குள் எழுந்தருளிச் செல்கின்றான். வரவேற்றுப் பணியும் தேவியைத் தழுவியருள் புரிந்து அம்மையின் பிரிவுத் துயரைப் போக்குகின்றான். 

(1)
வள்ளிதேவி தெய்வயானையாரின் திருவடிகளை வணங்க, இந்திரனின் வளர்ப்பு மகளாரும் வள்ளிதேவியை விரைந்து அணைத்தெடுத்து, 'தனியேயிருந்த எனக்கு இவ்விடத்தில் தக்கதோர் தோழியென வந்தாய் - நல்லது' என்று கருணை புரிகின்றாள். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 235)
ஆங்கது காலை வள்ளி அமரர்கோன் அளித்த பாவை
பூங்கழல் வணக்கம் செய்யப் பொருக்கென எடுத்துப் புல்லி
ஈங்கொரு தமியளாகி இருந்திடுவேனுக்(கு) இன்றோர்
பாங்கி வந்துற்றவாறு நன்றெனப் பரிவு கூர்ந்தாள்

பின்னர் கந்தவேளிடம் 'ஐயனே, வள்ளியாகிய இவள் இவ்விடம் வருகை புரிந்த வரலாற்றினை கூறியருள்வீர்' என்று விண்ணப்பிக்க, முருகக் கடவுளும் முன்னர் திருமாலின் திருக்கண்களினின்றும் தோன்றிய அவ்விரு தேவியரின் வரலாற்றில் துவங்கி, தினைப்புனத்தில் தான் வள்ளியை மணம் புரிந்தருளிய நிகழ்வு வரையிலும் விவரமாக அருளிச் செய்கின்றான்.  

(2)
வேலவனின் திருவாக்கினால் தன்னுடைய வரலாற்றினை அறியப் பெறும் வள்ளியம்மை தமக்கையான தெய்வயானை தேவியாரின் திருவடிகளில் மீண்டுமொரு முறை வீழ்ந்து வணங்கி, 'முற்பிறப்பிலும் உனக்கு தங்கையாகத் தோன்றினேன், இப்பிறப்பிலும் உனக்கு இளையவளாகி இன்றுனை வந்தடைந்தேன், என்னைக் காத்தருள்வாய்' என்று நெகிழ்கின்றாள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 253)
மேதகும் எயினர் பாவை விண்ணுலகுடைய நங்கை
ஓதுசொல் வினவி மேனாள் உனக்கியான் தங்கையாகும்
ஈதொரு தன்மையன்றி இம்மையும் இளையளானேன்
ஆதலின் உய்ந்தேன் நின்னை அடைந்தனன் அளித்தி என்றாள்

(3)
தெய்வயானை அம்மை தன் திருவடிகளில் வீழ்ந்திருந்த வள்ளிதேவியை எடுத்தணைத்து, 'இன்றுனைத் தங்கையெனப் பெற்றேன், அத்துடன் எம்பெருமானின் பேரருளும் பெற்றுள்ள எனக்குப் பெறத்தக்கது பிறிதொன்றும் உளதோ?' என்று நெகிழ்ந்து அருள் புரிகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 254)
வன்திறல் குறவர் பாவை மற்றிது புகன்று தௌவை
தன்திருப்பதங்கள் தம்மைத் தாழ்தலும் எடுத்துப் புல்லி
இன்றுனைத் துணையாப் பெற்றேன் எம்பிரான் அருளும் பெற்றேன்
ஒன்றெனக்கரியதுண்டோ உளந்தனில் சிறந்ததென்றாள்

பரம்பொருளினும் மேம்பட்ட ஆறுமுகக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

'ஆதிப் பரம்பொருளான சிவபெருமானே குமார வடிவெடுத்துக் கந்தக் கடவுளாய்த் தோன்றியுள்ளார்' எனும் சத்தியத்தைக் கந்தபுராணத்தின் பல்வேறு பகுதிகள் ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றது. இப்புரிதலோடு கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்களை அணுகுதல் வேண்டும். 

கச்சியப்ப சிவாச்சாரியார் தம்முடைய திருப்பாடல்களில், ஆறுமுக தெய்வத்தின் மேன்மைகளையும் சிறப்பியல்புகளையும் ஆங்காங்கே பல்வேறு அடைமொழிகளால் போற்றிக் கொண்டே வருவார். முதற்பொருள்; மூலப் பொருள்; மூல முதல்வன்; மயிலேறும் பரம்பொருள்; ஆதிக்கடவுள் என்று படலங்கள் தோறும் சிறப்பித்தும் நிறைவு தோன்றாமையால், கீழ்க்குறித்துள்ள இரு திருப்பாடல்களில் 'சிவபரம்பொருளை விட மேன்மை பொருந்திய ஆறுமுகக் கடவுள்' என்று போற்றித் துதித்து மகிழ்கின்றார் ('பரத்தின் மேற்படு பண்ணவன்', 'பரத்தினும் மேதகு பண்ணவன்').

(1)
சிங்கமுகாசுரன் மிகவும் சினந்து ஓராயிரம் அம்புகளை, பரம்பொருளான சிவபெருமானை விடவும் மேன்மை பொருந்திய ஆறுமுகக் கடவுளின் தேரோட்டியான வாயு தேவனின் நெஞ்சில் பதியுமாறு செய்கின்றான்,
-
(யுத்த காண்டம்: சிங்கமுகாசுரன் வதைப் படலம் - திருப்பாடல் 405)
திருத்தகும் திறல் சீய முகத்தினான்
உருத்து வாளியொர் ஆயிரம் தூண்டுறாப்
பரத்தின் மேற்படு பண்ணவன் தேர்விடு
மருத்தின் மார்புற வல்லை அழுத்தினான்
-
(சொற்பொருள்: மருத்து - வாயுதேவன், பண்ணவன் - இறைவன்)

(2)
பரம்பொருளான சிவமூர்த்தியைக் காட்டிலும் மேம்பட்ட அறுமுகக் கடவுளின் வில்லேந்தும் திருக்கரத்தையும், அக்கரங்கள் செலுத்தும் சரங்களையும், உறுதிவாய்ந்த அற்புதத் தேரையும், அத்தேரினைச் செலுத்தி வரும் வாயுதேவனின் வலிமையையும் யுத்தகளத்தில் காண்போரெல்லாம் வியந்து போற்றிப் புகழ்கின்றார், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 121)
பரத்தினும் மேதகு பண்ணவன் வார்வில்
கரத்தினையும் விரை வால் கரம் தூண்டும் 
சரத்தினையும் தடந்தேரினையும் கால்
உரத்தினையும் புகழ்வார் புடையுள்ளார்
-
(சொற்பொருள்: கால் - காற்றின் அதிதேவதையாகிய வாயு தேவன்)

சிவபரத்துவம் மட்டுமே பேச வந்த கந்தபுராண மாகாவியத்தில், (உபச்சார வழக்கிற்காக இருப்பினும்) நம் வேலாயுதப் பெருங்கடவுளை 'பரத்தினும் மேம்பட்ட பண்ணவன்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் போற்றுவாராயின், ஆறு திருமுகங்கள் கொண்டருளும்  அப்பெருமானின் பெருமைகளை யாரே அளக்க வல்லார்!