வயோதிகனாய்த் தோன்றிய வடிவேலன் (கந்தபுராண நுட்பங்கள்):

தினைப்புனத்தில் வள்ளிதேவியின் காதலைப் பெறக் கந்தக் கடவுள் பலவாறு முயலுகையில், இருமுறை; வெவ்வேறு சமயங்களில் வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜன் (தன் கூட்டத்தினருடன்) அங்கு வந்ததாகக் கந்தபுராணம் விவரிக்கின்றது. முதல் வருகையின் பொழுது வேலவன் வேங்கை மரமாகி நின்று திருவிளையாடல் புரிகின்றான். 

(1)
இரண்டாம் வருகை சமயத்தில், வள்ளிதேவி வேடுவ உருவிலிருக்கும் வேலவனுக்கு இடரேதும் நேர்ந்து விடுமோ என்றஞ்சி, 'விரைந்து இவ்விடம் விட்டு சென்று விடுங்கள்' என்று கூறுகின்றாள். குமரக் கடவுள் 'நம்மீது கொண்டுள்ள அன்பினாலன்றோ இவ்விதம் பதறுகின்றாள்' என்று திருவுள்ளம் மகிழ்ந்து, சைவநல் வேடத்தில்; வயோதிகத் திருக்கோலத்தில் அங்கு எழுந்தருளித் தோன்றுகின்றான்.  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 94)
ஓடும்இனி என்றவள் உரைத்த மொழி கேளா
நீடு மகிழ்வெய்தி அவண் நின்ற குமரேசன்
நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த
வேடமது கொண்டு வரும் வேடர்எதிர் சென்றான்

(2)
அவ்வேடர்களுக்கு அருகாமையில் சென்று, நம்பிராஜனுக்குத் திருநீறு அளித்து, 'உன் வலிமை பெருகட்டும், எண்ணிறந்த வெற்றிகளோடு வளங்கள் யாவும் உன்னிடம் வந்து சேரட்டும்' என்று வாழ்த்துகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 95)
சென்று கிழவோன் குறவர் செம்மலெதிர் நண்ணி
நின்று பரிவோடு திருநீறு தனை நல்கி
வன்திறல் மிகுத்திடுக வாகை பெரிதாக
இன்றியமையாத வளன் எய்திடுக என்றான்

(3)
அன்புடன் திருநீற்றினை அளித்தருளிய வயோதிகரின் திருவடி மலர்களைப் பணிந்து வணங்கும் வேடுவ மன்னன், 'மேன்மை பொருந்திய இவ்வள்ளி மலைக்கு வயோதிகராய் வந்துள்ளீர்கள், வேண்டுவன கூறுவீர்' என்கின்றான்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 96)
பூதியினை அன்பொடு புரிந்த குரவன்தன்
பாதமலர் கைகொடு பணிந்து குறமன்னன்
மேதகு இவ்வெற்பினில் விருத்தரென வந்தீர்
ஓதிடுதிர் வேண்டியதை ஒல்லைதனில் என்றான்

(4)
வயோதிக வேலவனும், 'உன்னுடைய மலையிலுள்ள குமரி தீர்த்தத்தில் நீராடவே இங்கு வந்துள்ளேன்' என்று கூறுகின்றான் ('வள்ளி நாயகியின் இளமையழகாகிய தீர்த்தத்தில் மூழ்க வந்துள்ளேன்' என்பது உட்குறிப்பு). நம்பிராஜனும், 'எங்கள் தந்தை போன்ற தவப்பெரியவரே , தாங்கள் கூறிய பெருமை பொருந்திய தீர்த்தத்தில் நீராடிய பின்னர் தனித்திருக்கும் எங்கள் குலத்தோன்றலான வள்ளிக்குத் தக்கதொரு துணையாக இவ்விடத்தில் இருப்பீர்' என்று வணங்கி விடைபெறுகின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 98)
நற்றவன் மொழியைக் கேளா நன்றுநீர் நவின்ற தீர்த்தம்
நிற்றலுமாடி எங்கள் நேரிழை தமியளாகி
உற்றனள் அவளுக்கெந்தை ஒருதனித் துணையதாகி
மற்றிவண் இருத்திர் என்ன அழகிதாம் மன்ன என்றான்

வயோதிக வேலவன் புரிந்த காதல் திருவிளையாடல் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வள்ளி தேவியின் காதலைப் பெற பல்வேறு வடிவங்களையெடுத்துத் திருவிளையாடல் புரிகின்றான், வேடுவ இளைஞனாகத் தோன்றிப் பின் வேங்கை மரமென நின்று, இறுதியாய்ச் சைவ வயோதிக வேடத்தில் எழுந்தருளி வருகின்றான். வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜன் வயோதிக வேடத்தை மெய்யென்றெண்ணி தேவியைக் கந்தவேளிடம் ஒப்படைத்துச் செல்கின்றான்.   

வேடுவ மன்னன் அகன்றதும் வயோதிக வேலவன் 'பசியினால் தளர்வுற்று வருந்துகின்றேன்' என்று கூறியருள, வள்ளி நாயகி தேனும் தினைமாவும் தந்துதவுகின்றாள். பின் 'மிகுந்த தாகத்தினால் வருந்துகின்றேன்' என்று வடிவேலன் தளர, தேவியும் 'இங்குள்ள மலைப்பகுதிச் சுனைநீரை அருந்தி அயர்வு நீங்குவீர்' என்கின்றாள். விருத்த கோலத்து வேலவனும், 'தனித்து செல்லும் வயதோ இது?' என்றுரைத்து தேவியையும் உடனழைத்துச் சென்று சுனைநீரைப் பருகுகின்றான். 

(1)
பின்னர் 'அழகிய கூந்தலையுடைய நங்கையே, பசி போக்கினாய், தாகம் தீர்த்தாய், விதிவசத்தாலுற்ற காம நோயினையும் இச்சமயத்தில் தீர்த்து அருள் புரிவாயானால் குறைகள் யாவும் தீரப் பெற்றவனாவேன்' என்று காதல் யாசகம் கேட்டு நிற்கின்றான்.  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 104)
ஆகத்தை வருத்துகின்ற அரும்பசி அவித்தாய் தெண்ணீர்த்
தாகத்தை அவித்தாய் இன்னும் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ
மேகத்தையனைய கூந்தல் மெல்லியல் வினையேன் கொண்ட
மோகத்தைத் தணித்தியாயின் முடிந்ததென் குறையதென்றான்

(2)
வள்ளி நாயகி வயோதிக வடிவேலனின் தகாத அவ்வுரை கேட்டு நடுநடுங்கிப் பதறிச் சீறியுரைக்கத் துவங்குகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 105)               
ஈறில் முதியோன் இரங்கி இரந்துகுறை
கூறி மதிமயங்கிக் கும்பிட்டு நின்றளவில்
நாறு மலர்க்கூந்தல் நங்கை நகைத்துயிர்த்துச்
சீறி நடுநடுங்கி இவ்வாறு செப்புகின்றாள்

(3)
'மேன்மையான தவவேடத்திற்கு சற்றும் பொருந்தா வார்த்தைகளை உரைத்தீர், பாலென்று எண்ணி பருகிய நிலையிலது ஆலகால விடமென மாறிய தன்மையிலுள்ளது உம்முடைய செயல்' என்று அம்மை வெகுண்டுரைக்கின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 106)
மேலாகிய தவத்தோர் வேடம் தனைப்பூண்டிங்(கு)
ஏலாதனவே இயற்றினீர் யார்விழிக்கும்
பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும்
ஆலால நீர்மைத்தோ ஐயர் இயற்கையதே

(4)
'தலைமுடியாவும் நரைத்த பின்னரும் நல்லுணர்வு சற்றும் இல்லாது இருக்கின்றீர், இதன் பொருட்டோ மூப்படைந்தீர்?, பித்துப் பிடித்தாற் போன்று பிதற்றியுழல்கின்றீர், வேடர்குலம் முழுமைக்கும் பெரும் பழியையன்றோ சேரச் செய்தீர்' என்று வள்ளி நாயகி படபடத்துச் சீறுகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 108)
நத்துப் புரைமுடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
எத்துக்கு மூத்தீர் இழிகுலத்தேன் தன்னைவெஃகிப்
பித்துக் கொண்டார்போல் பிதற்றுவீர் இவ்வேடர்
கொத்துக்கெலாம்ஓர் கொடும்பழியைச் செய்தீரே

ஆறுமுகக் கடவுளின் காதலுக்கு உதவி அருள் புரிந்த யானைமுகக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்)

கந்தப் பெருமான் தினைப்புனத்தில் வேடுவ இளைஞன்; சைவ வயோதிகர் என்று இருவேறு வடிவங்களில் தோன்றி காதல் திருவிளையாடல்கள் புரிந்தும் வள்ளி நாயகியின் காதலைப் பெற இயலாது போகின்றது. இனி என் செய்வதென்று வாட்டமுற்று, ஒப்புவமையில்லாத மூர்த்தியாகவும்; தமையனாகவும் விளங்கியருளும் விநாயகப் பெருமானை நினைந்து, 'முன்னே வந்தருள்வாய் முதல்வா' என்று அழைக்கின்றான்,  

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 110)
பொன்னே அனையாள் முன்போகும் திறல்நோக்கி
என்னே இனிச் செய்வதென்றிரங்கி எம்பெருமான்
தன்னேரிலாதமரும் தந்திமுகத்(து) எந்தைதனை
முன்னே வருவாய் முதல்வா என நினைந்தான்

அக்கணமே பிரணவ முகத்தினரான நம் கணபதி இளவலான அறுமுகக் கடவுளுக்கு இரங்கி, மலைபோன்ற யானையொன்றின் திருவடிவு தாங்கித் தொடர்ந்து பிளிறியவாறு, வயோதிக வேலவனை நீங்கிச் சென்று கொண்டிருக்கும் வள்ளி தேவியின் முன்னாக எழுந்தருளிச் சென்று அச்சுறுத்துகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 111)
அந்தப் பொழுதில் அறுமாமுகற்(கு) இரங்கி
முந்திப் படர்கின்ற மொய்குழலாள் முன்னாகத்
தந்திக் கடவுள் தனிவாரணப் பொருப்பு
வந்துற்றதம்மா மறிகடலே போல் முழங்கி

வள்ளியம்மை கணபதிக் களிற்றினைக் கண்ணுற்றுப் பதறியவாறு மீண்டும் பொய்த் தவவேடம் பூண்டிருந்த வயோதிக வேலவனிடத்து விரைந்து திரும்பி, 'இவ்வேழத்திடமிருந்து என்னைக் காத்தருள்வீர், உம்முடைய சொற்படி நடப்பேன்' என்று குமாரக் கடவுளின் பின்னாகச் சென்று அச்சத்தினால் தழுவிக் கொள்கின்றாள்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 112)
அவ்வேலையில் வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
பொய்வேடம் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
இவ்வேழம் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
செய்வேன் எனஒருபால் சேர்ந்து தழீஇக் கொண்டனளே

தினைப்புன அரசியின் தழுவுதலால் அறுமுகக் கடவுள் திருவுள்ளம் பெரிதும் மகிழ்கின்றான். (வள்ளி தேவி அறியாதவாறு) யானை முக வள்ளலைப் பணிந்து போற்றி, 'எம்பெருமானே, தம்முடைய வருகையினால் இவள் பால் கொண்டிருந்த மையல் தீரப் பெற்றேன், இனி தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்ப எழுந்தருளிச் செல்வீர்' என்று விண்ணப்பிக்கின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 114)
கந்த முருகன் கடவுள் களிறுதனை
வந்தனைகள் செய்து வழுத்திநீ வந்திடலால்
புந்தி மயல் தீர்ந்தேன் புனையிழையும் சேர்ந்தனளால்
எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான்
-
(குறிப்பு: நம் கந்தப் பெருமான் ஆயிரமாயிரம் கோடி அண்டங்களுக்குத் தனிப்பெரும் தலைவனாக விளங்கியிருப்பினும் தமையனான விநாயகப் பெருமானுக்கு என்றுமே அடங்கிய நிலையில், பேரன்புக்குரிய இளவலாகத் திகழ்பவன். 'எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான்' எனும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல் வரி மூலம் இதனை உணரப் பெறலாம், 'எம் தந்தை' என்பதே 'எந்தையாக' மருவியது).

வள்ளி நாயகியை ஆட்கொண்டு அருளும் வேலாயுதக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

ஆறுமுகக் கடவுள் வள்ளிமலையில் பல்வேறு வடிவங்களில் தோன்றி திருவிளையாடல்கள் புரிந்து இறுதியில், தமையனான விநாயகப் பெருமானின் அருளால் வள்ளி நாயகியின் காதலைப் பெற்று மகிழ்கின்றான். பின்னர் வள்ளிதேவிக்குப் பரம்பொருள் வடிவினனான தன் சுய திருக்கோலத்தினைக் காண்பித்து அருள் புரிகின்றான்.

(1)
ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருத்தோள்களுடனும், பன்னிரு திருக்கரங்களில் வேல்; வச்சிராயுதம் முதலிய ஆயுதப் படைகளோடும், மரகத மயிலும் உடனிருக்கப் பேரானந்தத் திருக்கோலத்தில் வள்ளிதேவியின் முன்னாக வெளிப்பட்டுத் தோன்றுகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 116)
முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும் 
கொன்னார் வைவேலும் குலிசமும் ஏனைப்படையும்
பொன்னார் மணி மயிலுமாகப் புனக்குறவர்
மின்னாள் கண்காண வெளி நின்றனன் விறலோன்
-
(சொற்பொருள்: கொன்னார் - பெருமை பொருந்திய, விறலோன் - வெற்றி பொருந்திய)

(2)
ஆறுமுகப் பரம்பொருளின் காண்பதற்கரிய இத்திருக்கோலத்தைத் தரிசிக்கப் பெறும் நம் வள்ளியம்மை பெருவியப்புடன் கந்தவேளை வணங்கிப் பணிகின்றாள், திருமேனியில் வியர்வை தோன்றுமாறு  விதிர்விதிர்த்து நடுங்கி, அகம் குழைந்து ஆறாக் காதலுடன் விண்ணப்பிக்கத் துவங்குகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 117)
கூரார் நெடுவேல் குமரன் திருவுருவைப்
பாரா வணங்காப் பரவலுறா விம்மிதமும் 
சேரா நடுநடுங்காச் செங்கை குவியா வியரா
ஆராத காதலுறா அம்மையிது ஓதுகின்றாள்
-
(சொற்பொருள்: பரவலுறா - துதித்து, விம்மிதமும் சேரா - வியப்புற்று, வியரா - வியர்த்து)

(3)
'வேலேந்தி நின்றருளும் பெருமானே, உம்முடைய இவ்வற்புதத் திருக்கோலம் தாங்கி அடியவளைத் தழுவாமல் இவ்வளவு நேரம் (பல்வேறு வடிவங்களில் தோன்றி) வீணே கழித்தீரே, இனி இக்கொடியவள் செய்துள்ள குற்றங்கள் யாவற்றையும் பொறுத்து, அடியவளை விரைந்து ஆட்கொண்டு அருள்வீர்' என்று பணிகின்றாள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 118)
மின்னே அனையசுடர் வேலவரே இவ்வுருவம்
முன்னேநீர் காட்டி முயங்காமல் இத்துணையும் 
கொன்னே கழித்தீர் கொடியேன்செய் குற்றமெலாம்
இன்னே தணித்தே எனையாண்டு கொள்ளுமென்றாள்
-
(சொற்பொருள்: கொன்னே - வீணே)

(4)
குமாரக் கடவுளும் திருவுள்ளம் மகிழ்ந்து, 'வள்ளி நாயகியே, இப்பிறப்பிற்கு முன்னர் நீ உலகமுண்ட திருமாலின் மகளாகத் தோன்றியவள், நம்மை அடைவதற்கென அரியதொரு தவநெறியில் நின்றொழுகினாய். ஆதலின் இப்பிறவியில் இம்முறையில் உன்னை ஆட்கொண்டோம்' என்றருளிச் செய்து, நம் அம்மையான வள்ளிதேவியைத் தழுவி அருள் புரிகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 119)
உம்மை அதனில் உலகமுண்டோன் தன்மகள்நீ
நம்மை அணையும்வகை நற்றவம் செய்தாய் அதனால்
இம்மைதனில் உன்னை எய்தினோம் என்றெங்கள்
அம்மை தனைத் தழுவி ஐயன் அருள்புரிந்தான்
-
(சொற்பொருள்: உம்மை - முற்பிறப்பு)


வள்ளிமலையில் நடந்தேறிய 'வேலன் வெறியாட்டு விழா' (கந்தபுராண நுட்பங்கள்):

வள்ளி நாயகியைத் தினைப்புனத்தில் வேலாயுதக் கடவுள் ஆட்கொண்டருளிய நிகழ்விற்குப் பின்னர் வள்ளியம்மை தன் இல்லத்திற்குத் திரும்பிச் செல்கின்றாள். எனினும் எவரொருவரிடமும் உரையாடாமல் மோன நிலையிலேயே இருக்கின்றாள், அறுமுக தெய்வத்தின் பெருங்கருணையையும்; பேரழகுத் திருக்கோலத்தையும்; தன்னைத் தழுவியருள் புரிந்த திறத்தையும் எண்ணி எண்ணி விம்மிதமுறுகின்றாள், அகம் குழைந்துக் கண்ணீர் பெருக்கிச் சிவஞானப் பெருவெள்ளத்தில் அமிழ்கின்றாள். குமாரக் கடவுளின் திருவுருவமன்றிப் பிறிதொரு சிந்தையில்லாத நிலையில், கந்தவேளின் பிரிவுத் துயரைத் தாளமாட்டாது அவ்வப்பொழுது மயங்கி வீழ்வதும் எழுவதுமாய் இருக்கின்றாள்.  

(1)
வள்ளி தேவியின் இந்நிலையால் தந்தையான நம்பிராஜனும்; தாயும்; மற்றுமுள்ளோரும் பெரிதும் வருத்தமுற்றுப் பல்வேறு உபாயங்களை விவாதிக்கின்றனர். இறுதியில், தங்களின் குலதெய்வமான முருகக் கடவுளுக்கு வெறியாட்டு விழாவினை நடத்தி வழிபடுவதாக முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் விரைந்து செய்கின்றனர். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 155)
தந்தையும் குறவர் தாமும் தமர்களும் பிறரும் ஈண்டிச்
சிந்தையுள் அயர்வு கொண்டு தெரிவைதன் செயலை நோக்கி
முந்தையின் முதியாளோடு முருகனை முறையில் கூவி
வெந்திறல் வேலினாற்கு வெறிஅயர்வித்தார் அன்றே

(2)
வெறியாடல் நிகழுகையில், வெறியாட்டாளன் மீது குமாரக் கடவுள் தோன்றி, 'தினைப்புனத்திலிருந்த வள்ளியை நாமே ஆட்கொண்டோம், நமக்குச் சிறப்புடன் வழிபாடுகளைப் புரிந்தால் வள்ளிக்கு உற்ற இக்குறையினைப் போக்குவோம்' என்று அறிவித்து அருள் புரிகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 156)
வெறிஅயர்கின்ற காலை வேலன்மேல் வந்து தோன்றிப்
பிறிதொரு திறமும் அன்றால் பெய்வளை தமியளாகி
உறைதரு புனத்தில் தொட்டாம் உளமகிழ் சிறப்பு நேரில் 
குறையிது நீங்குமென்றே குமரவேள் குறிப்பில் சொற்றான்

(3)
வெறியாட்டாளன் வாயிலாக அறுமுக அண்ணல் உணர்த்தியருளிய செய்தி வள்ளியம்மையின் செவிகளில் வந்தடைந்த மறுகணமே, கொண்டிருந்த மயக்கநிலை முழுவதுமாய் நீங்கி நலம் பெற்றெழுகின்றாள். அது கண்டு மகிழும் செவிலித்தாய், 'நம் குலதெய்வமான முருகப் பெருமானுக்கு இனிச் சிறப்புற வழிபாடுகள் செய்வோம்' என்று போற்றித் துதித்து நிற்கின்றாள்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 157)
குறிப்பொடு நெடுவேல் அண்ணல் கூறிய கன்ன மூல
நெறிப்பட வருதலோடும் நேரிழை அவசம் நீங்கி
முறைப்பட எழுந்து வைக முருகனை முன்னியாங்கே
சிறப்பினை நேர்தும் என்று செவிலித்தாய் பராவல் செய்தாள்
-
(சொற்பொருள்:கன்ன(ம்) - காதுகள், அவசம் - மயக்கம், பராவல் - துதித்தல்)

நள்ளிரவில் தோன்றிய வேடுவ வேலவன் (கந்தபுராண நுட்பங்கள்):

தினைப்புனத்தில் கந்தப் பெருமான் ஆட்கொண்டருளிய நிகழ்விற்குப் பின் இல்லம் திரும்பும் வள்ளியம்மை எவருடனும் உரையாடாமல், பிரிவுத் துயரால் பெரிதும் வருந்திய வண்ணமிருக்கின்றாள். வேட்டுவ குலத்தினர் தங்கள் குலதெய்வமான குமாரக் கடவுளுக்கு வெறியாட்டு விழாவொன்றினை நடத்தி வழிபட, கந்தவேளின் திருவருளால் வள்ளியம்மை மீண்டும் முந்தைய நிலைக்குத் திரும்புகின்றாள். 

(1)
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாய்க் குமர நாயகன் வள்ளிதேவியின் பிரிவுத் துயரைத் தாளமாட்டாமல், நள்ளிரவு நேரத்தில் (வேடுவ கோலத்தில்) வள்ளிமலைப் பகுதியிலுள்ள வேடுவக் குடியிருப்புப் பகுதிக்கு எழுந்தருளி வருகின்றான். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 161)
வல்லியை நாடுவான் போல் மாண்பகல் கழித்து வாடிக்
கொல்லையம் புனத்தில் சுற்றிக் குமரவேள் நடுநாள் யாமம் 
செல்லுறும்எல்லை வேடர் சிறுகுடி தன்னில் புக்குப்
புல்லிய குறவர் செம்மல் குரம்பையின் புறம்போய் நின்றான்
*
வள்ளிதேவியின் தோழியானவள் வேடுவ வேலவனைப் பணிந்து வணங்கி, 'எங்கள் தலைவி உம்மைப் பிரிந்து இனி இனியொருக்கணமும் வாழ இயலாதவளாய்த் தவித்திருக்கின்றாள், ஆதலின் அவளை உம்மிடம் அழைத்து வருவேன்' என்று கூறிச் செல்கின்றாள்.

(2)
தோழியுடன் அறுமுக இறைவனின் திருமுன்பு வரும் வள்ளியம்மை, 'கொடிய வினைகளால் வருந்தியுழலும் அடியவளின் பொருட்டு இந்த நள்ளிரவு வேளையில் உம்முடைய திருவடி மலர்கள் நோகுமாறு நடந்து வருவதோ?' என்று நெகிழ்ந்துருகிப் பணிகின்றாள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 165)
அறுமுக ஒருவன் தன்னை ஆயிழை எதிர்ந்து தாழ்ந்து
சிறுதொழில் எயினர் ஊரில் தீயனேன் பொருட்டால் இந்த
நறுமலர்ப் பாதம் கன்ற நள்ளிருள் யாமம் தன்னில்
இறைவநீர் நடப்பதே என்றிரங்கியே தொழுது நின்றாள்

(3)
(கந்தவேளை அடைய) மாதவம் புரிந்திருந்த வள்ளிநாயகி வணங்கியிருக்க, தோழியானவள் வேடுவ வேலவனிடம் 'உங்களிருவரையும் இந்நிலையில் எங்கள் கூட்டத்தவர் காண நேரிடில் தீய விளைவுகள் நேரிடும், ஆதலின் விரைந்து எங்கள் இறைவியைச் சிறப்பு மிக்க உங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பீர்' என்று தேவியைக் கந்தக் கடவுளின் திருக்கரங்களில் ஒப்புவிக்கின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 166)
மாத்தவ மடந்தை நிற்ப வள்ளலை இகுளை நோக்கித்
தீத்தொழில் எயினர் காணில் தீமையாய் விளையும் இன்னே
ஏத்தரும் சிறப்பின்உம் ஊர்க்கிங்கவள் தனைக் கொண்டேகிக்
காத்தருள் புரியுமென்றே கையடையாக நேர்ந்தாள்
-
(சொற்பொருள்: இகுளை - தோழி, எயினர் - வேடர்)

(4)
கருணைப் பெருங்கடவுளான நம் சிவகுமரன் வள்ளியம்மையை ஒப்புவித்து வணங்கியிருக்கும் தோழியிடம், 'மங்கை நல்லாய், எங்களிருவர் பால் நீ கொண்டுள்ள மெய்யன்பினை என்றும் மறவோம்' என்றருள் புரிகின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 167)
முத்துறு முறுவலாளை மூவிரு முகத்தினான் தன்
கைத்தலம் தன்னில் ஈந்து கைதொழு(து) இகுளை நிற்ப
மெய்த்தகு கருணை செய்து விளங்கிழாய் நீயெம் பாலின்
வைத்திடு கருணை தன்னை மறக்கலம் கண்டாய் என்றான்

வேலவனைத் தாக்கிய வேடுவர்கள் (கந்தபுராண நுட்பங்கள்):

ஆறுமுகக் கடவுள் (வேடுவ கோலத்தில்) நள்ளிரவில் வள்ளி நாயகியின் இல்லம் நாடிச் சென்று, எவரொருவரும் அறியாதவாறு தேவியை அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நீங்கிச் செல்கின்றான். வள்ளிமலைப் பகுதியின் எல்லைக்கு அப்பாலுள்ள பசுமையான சோலையொன்றில் தினைப்புன அரசியுடன் இனிது எழுந்தருளி இருக்கின்றான்.

இந்நிகழ்வுகள் ஒருபுறமிருக்க, பொழுது புலரும் சமயத்தில் வள்ளி நாயகியைக் காணாது நம்பிராஜன் பதறுகின்றான், 'என் மகளைக் கவர்ந்து சென்ற வஞ்சகன் எவனோ?' என்று சீற்றத்துடன், எண்ணிறந்த வேடர்களும் உடன்வர, வழிதோறுமுள்ள பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவாறு தேடிச் செல்கின்றான்.

இவ்வாறாக வேடுவக் கூட்டம் வடிவேலனும் வள்ளிதேவியும் தங்கியிருந்த சோலைக்கருகில் வந்து சேர, அவர்களெழுப்பும் ஊதுகொம்பின் ஓசையினைச் செவியுற்று அம்மை பதறுகின்றாள். வேலாயுதப் பெருங்கடவுளின் திருப்பாதங்களில் வீழ்ந்து முறையிடுகின்றாள்.

(1)
'ஐயனே, எங்கள் கூட்டத்தினர் பல்வேறு கொலைக்கருவிகளோடு விரைந்து இவ்விடம் நோக்கி வருவதையறிந்து நடுக்கமுற்றிருக்கின்றேன். இனிச் செயலொன்றும் அறிகிலேன், உங்கள் திருவுள்ளம் யாதென்று உரைப்பீர்?' என்று விண்ணப்பிக்கின்றாள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 177)
கோலொடு சிலையும் வாளும் குந்தமும் மழுவும் பிண்டி
பாலமும் பற்றி வேடர் பலருமாய்த் துருவிச் சென்று
சோலையின் மருங்கு வந்தார் துணுக்கமுற்றுள(து) என் சிந்தை
மேலினிச் செய்வதென்கொல் அறிகிலேன் விளம்பாய் என்றாள்

(2)
கந்தவேள் வள்ளியம்மையிடம், 'தேவி கவலையை ஒழிப்பாய், உன் கூட்டத்தினர் நமையெதிர்த்துப் போர் புரிய முற்படுவாரேயாயின், கிரௌஞ்ச மலையையும்; சூரனின் மார்பையும் பிளந்த நம் சக்திவேலால் அவர்களைக் கணப்பொழுதில் அழிப்போம். அச்செயலினை நமக்குப் பின்னால் நின்ற வண்ணம் காண்பாயாக' என்றருளிச் செய்கின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 178)
நோக்கி வருந்தலை வாழி நல்லாய் மால்வரையோடு சூரன்
உரம்தனை முன்பு கீண்ட உடம்பிடியிருந்த நும்மோர்
விரைந்தமர் புரியச் சூழின் வீட்டுதும் அதனை நோக்கி
இருந்தருள் நம்பின் என்னா இறைமகட்(கு) எந்தை சொற்றான்
-
(சொற்பொருள்: உரம் - மார்பு, உடம்பிடி - வேல், வீட்டுதும் - அழிப்போம்)